வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

பட்டுப் புடவை… நம் பாரம்பரியத்தின் குறியீடு. எப்படி இளையராஜா சாரையும், பின்னணி இசையையும் பிரிக்க முடியாதோ அது போல் என் அம்மாவையும், பட்டுப்புடவையும் பிரிக்க முடியாது . ஆம்.. அம்மா பட்டுப்புடவைகளின் காதலி . (பெண்களுக்கு பட்டுப் புடவைகளின் மீதான காதல் என்பது அளப்பரியது.) அம்மா கட்டும் பட்டுப்புடவையின் நேர்த்தியைக் கண்டு.. பட்டு பூச்சியும் மயங்கி நிற்கும். அம்மாவிடம் அத்தனை வண்ணங்களிலும் பட்டுப்புடவை இருக்கும். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக அம்மா எப்போதெல்லாம் மர அலமாரியை திறக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் நான் சின்னக் குழந்தை போல் அதன் அழகை ரசிப்பேன். அம்மா பட்டுப் புடவைகளை பொதுவாக மர பீரோவில் வைத்து தான் பராமரிப்பார். அதுவும் ஒவ்வொரு பட்டுப் புடவையையும் மஸ்லின் துணிக்குள் வைத்துதான் அலமாரியில் வைத்திருப்பார்.

Representational Image

அவ்வளவு அழகாக நேர்த்தியாக பட்டுப் புடவையை மடித்து வைத்திருப்பார். ஒரு விதமான வாசம் வரும் அலமாரியைத் திறந்தால் . (அதற்கு காரணம் கட்டுரையின் இறுதியில் சொல்கிறேன்.) அம்மாவிடம், மாம்பழ கலரில் கருப்பு ஜரிகை(பார்டர் )போட்ட ஒரு பட்டுப்புடவை இருக்கும். எப்பொழுது அலமாரியைத் திறந்தாலும் என் கண் அதன் மேலேயே இருக்கும். எனக்கு அது மிகவும் பிடிக்கும். அப்பொழுதெல்லாம் அம்பிகா, ராதா சினிமாக்களில் பட்டுப்பாவாடை,ரவிக்கை, ஒரே மாதிரியும் தாவணி பார்டர் கலரிலும் அணிந்து வருவர்.

அதைப் பார்த்து பார்த்து எனக்கும் அந்த மாம்பழ கலர் பட்டு புடவையை பாவாடையாக தைத்து அணிந்தால் எப்படி இருக்கும் என கற்பனை வரும். பிறகென்ன அம்மாவிடம் அழுது அடம்பிடித்து அந்தப் புடவையை வாங்கி சென்று டெய்லரிடம் கொடுத்து பாவாடை, ரவிக்கை ஒரே மாதிரியாகவும் தாவணி கருப்பு ஜார்ஜெட்டிலும் எடுத்து ஒரு சுபயோக சுபதினத்தில் கல்லூரிக்கு அணிந்து சென்றேன். பயங்கர சந்தோசமாக இருந்தது. எதையோ சாதித்தது போல் ஒரு உணர்வு. நிறைய பேரிடம் பாராட்டும் கிடைத்தது. மறக்கமுடியாத பட்டுப்புடவை. அது ஒரு அழகிய கனாக்காலம்.

அதன் பின்னர் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு புடவையின் மேல் எனக்கு காதல் வந்தது. ஆம்…அது ‘இவன்’ படத்தில் சௌந்தர்யா கட்டியிருந்த ஒரு புடவை. அந்தத் திரைப்படத்தில் சௌந்தர்யா கர்நாடக பாடகியாக நடித்திருப்பார். கர்நாடக பாடகிக்கு காதல் வருகிறது பார்த்திபன் மேல். காதல் வந்தால் சாஸ்திரிய சங்கீதம் தான் பாட வேண்டுமா என்ன? மனம்காதலில் தத்தளிக்க குதூகலத்தில்” அப்படி பாக்குறதுன்னா வேணாம் கண் மேல தாக்குறது வேணாம், தத்தித் தத்தி தாவுறதன்னா வேணாம் தள்ளாடும் ஆசைகள் தானா “ன்னு பாடுவார். உயிர் உருக்கும் கவிதையாக இசை வடிவம் பெற்ற பாடல் அது . இதுபோன்ற பின்னணி இசையை எல்லாம் இசைஞானியை தவிர வேறு யாராலும் போடவேமுடியாது.

சரணத்தில் அமைந்திருக்கும் மெட்டு பின்னணி இசை …எனமிக மிக அழகாக அனைத்திலும் உயிர் கொடுத்து இருப்பார் ராஜா சார். (பட்டுப் புடவையைப் பத்தி எழுதச் சொன்னா.. ராஜா சாரை பத்தி எழுதறாங்கன்னு… நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது .மன்னிக்கவும்)

அந்தப் பாடலில் சௌந்தர்யா கருப்பு கலரில் ஆகாய நீலவண்ண ஜரிகை போட்ட பட்டுப்புடவை கட்டி இருப்பார். பார்க்க ரம்யமாக இருக்கும். ( கருப்பு கலர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.)அதைப் பார்த்ததிலிருந்து அதேபோல் கருப்பு கலரில் ஒரு பட்டுப் புடவை வாங்க வேண்டும் என்று ஆசை எழ… ஆற்காடு ரோட்டில் இருக்கும் பிரபல துணிக்கடையில் பட்டுப் பிரிவில் வேலை பார்க்கும் ஆறுமுகம் என்ற அண்ணனிடம் என் ஆசையை சொல்ல.. அவர் 2002 தீபாவளி சமயம் என்னை தொலைபேசியில் அழைத்து உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது கடைக்கு வாருங்கள் என்று கூப்பிட்டார். அங்கு சென்ற போது தான் தெரிந்தது நான் ஆசைப்பட்ட அதே கருப்பு கலர் பார்டர் கிளிப்பச்சை கலரில் ஒரு பட்டுப்புடவை (எனக்கே எனக்காக) காஞ்சிபுரத்திலிருந்து தறியில் நெசவு நெய்து வரவழைத்திருந்தது. அதன் விலை எட்டாயிரம் ரூபாய். இப்பொழுதும் அந்த புடவை உடுத்தும் போது.. ரோஜா மலர் மாதிரி எப்பவும் ஃப்ரெஷ்ஷா உணரவைக்கும். அதேபோல் மனம் வருந்தும் சமயங்களிலும் அந்த புடவையை மடிமேல் வைத்து தடவிக் கொடுக்க என் வருத்தங்களும், சோகங்களும் பறந்துபோகும் .அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை!

Representational Image

அம்மாவின் அலமாரியைத் திறந்தால் ஒரு வித வாசம் வரும். அது ஒரு சுகானுபவம் என்றும் அதைக் கட்டுரையின் இறுதியில் சொல்வதாக சொல்லி இருந்தேன் அல்லவா.!

50 கிராம் வேப்பம் பூ, 50 கிராம் மருதாணி பூ ,50 கிராம் வசம்பு (ஊறவைத்து பின் கட் செய்தது) 50 கிராம் ரோஜா இதழ் அல்லது மருக்கொழுந்து இவற்றை நன்கு வெயிலில் காய வைத்து பின் மிக்ஸியில் நைஸாக பொடி செய்து சின்ன சின்ன சுருக்குப் பையில் போட்டு பீரோவில் வைத்திருப்பார்கள். 

என்ன நீங்களும் வாசமான பொடி செய்ய கிளம்பி விட்டீர்களா?

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.