இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று என்பது தொடர்பான விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது குறித்து தற்போது பார்க்கலாம்.

இங்கிலாந்துடன் மோதும் இந்திய அணி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதி சுற்றை எட்டியிருக்கிறது. அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன. நாளை சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் பாகிஸ்தான் அணி மோதவுள்ள நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணியுடனான போட்டி நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

image

ரிஷ்ப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் .. யார் உள்ளே?

இந்திய அணிக்கு கடைசி டெத் ஓவர்களில் ரன்களை குவிக்க ஒரு சாலிடான ஹிட்டர் தேவையாக உள்ளது. தற்போது அந்த பணியை சூர்ய குமார் யாதவே செய்து வருகிறார். விராட் கோலியுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று கடைசி ஓவர்களில் ரன்களை குவிக்கிறார். ஆனால், 6வது 7வது இடங்களில் களமிறங்கும் வீரர்கள் அந்தப் பணியை செய்ய தவறிவருகிறார்கள். டெத் ஓவர்களில் குறிப்பாக கடைசி இரண்டு ஓவர்களில் ரன் குவிப்பதில் வல்லவர் என்ற அடிப்படையில்தான் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், தினேஷ் கார்த்திக்கும் டி20 உலகக் கோப்பையில் பெரிதாக வாய்ப்பும் கிடைக்கவில்லை, கிடைத்த வாய்ப்புகளிலும் அவர் பெரிதாக சோபிக்கவும் இல்லை.

இந்த உலகக்கோப்பையில் இதுவரை தினேஷ் கார்த்திக்!

  • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக்கு கடைசி ஓவரில் களமிறங்கி 2 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.
  • நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட் மட்டுமே வீழ்ந்ததால் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை
  • தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளை சந்தித்து வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது
  • வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ரன் ஆனார்

தினேஷ் அவுட்.. ரிஷப் இன்!

ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆட்டத்தின் 13வது ஓவரில் களமிறங்கிய அவர் 5 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.

இந்த நிலையில்தான், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் யாரை களமிறக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. அரையிறுதி மற்றும் இறுதி இரண்டு போட்டிகளுமே நாக் அவுட் போட்டிகள். வெற்றி பெற்றே ஆக வேண்டிய காட்டயம். அதனால், ஹிட்டர்களின் தேவை கட்டாயம் இந்திய அணிக்கு உதவும்.

என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி!

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “தினேஷ் கார்த்திக் ஒரு திறமையான வீரர். ஆனால் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் என்று வரும்போது, அவர்களின் தாக்குதலைப் பார்க்கும்போது, உங்களுக்கு ஒரு வலுவான இடது கை ஆட்டக்காரர் தேவை என்று நினைக்கிறேன்.

image

இந்திய அணியில் ஒரு மேட்ச் வின்னராக யார் அதைச் செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். எனவே இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட்டை களம் இறக்க வேண்டும். சமீபகாலங்களில் அவர் இங்கிலாந்துக்கு எதிராக நன்றாக ஆடியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் கொண்டிருக்கிறார். குறைவான பவுண்டரி தூரம் கொண்ட அடிலெய்டு மைதானத்தில் அவர் நமது அணியின் துருப்பு சீட்டாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

அதிரடி மட்டுமல்ல இதுவும் நிச்சயம் தேவை!

இந்திய அணியில் ஹிட்டர்களாக ஜொலிக்கும் சிலர் பிற்காலத்தில் காணாமல் போய்விடுகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமாக இருப்பது கன்சிஸ்டன்சி தான். ஒரு வீரருக்கு தேவையான ஒன்று 5 போட்டிகளில் விளையாடினால் குறைந்தது 2 அல்லது 3 போட்டிகளில் அணியின் வெற்றிக்கு தேவையான பங்களிப்பை நிச்சயம் செலுத்த வேண்டும். ஒரு போட்டியில் அடித்து விட்டு அடுத்த 4 போட்டிகளில் கேப் விடக் கூடாது. ரோகித் சர்மாவிற்கே சில நேரங்களில் இந்தப் பிரச்னை வந்துவிடுகிறது. தற்போது சூர்யகுமார் ஹிட்டர் பணியை சிறப்பாகவே செய்துவருகிறார். அவரது ஆட்டத்தை போன்றே டெத் ஓவர்களில் வாய்ப்பு கிடைக்கும் ஒருவர் விளையாட வேண்டும். அது ரிஷப் பண்ட் ஆக இருந்தாலும் சரி, தினேஷ் கார்த்திக் ஆக இருந்தாலும் சரி. அணிக்கு தேவை ஸ்கோர் மட்டுமே. அணிக்கு தேவை வெற்றி மட்டுமே. 

இதையும் படிக்கலாமே: அஸ்வின் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை’ – கபில் தேவ் தாக்கு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.