“மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதை போல தான் இருக்கிறது என்னுடைய நிலைமை. நாள்தோறும் காலையில், நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. என் உடம்பை பாருங்கள்” –  என்று  தி.மு.க-வின் 15-வது பொதுக்குழுவில் தனது மனக்குமுறல்களை வெளிப்படையாக கொட்டி தீர்த்திருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

இவ்வாறு அவர் நொந்து போய் பேசுவதற்கு சில முக்கிய தி.மு.க தலைவர்களின் சர்ச்சை செயல்பாடுகள் காரணமாக அமைந்திருந்தன. அதில் ஒருவராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முகையூர் ஒன்றியக்குழு பெண் தலைவரை பார்த்து, “ஏம்மா… நீ எஸ்.சி-தானே?” என மேடையில் கேட்டதும், அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பணிப்பதை “ஓசி” என கொச்சையாக பேசியிருந்ததும் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதேபோல், அக்.2-ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவரை ஒருமையில் பேசியதும் சர்ச்சையானது. இந்த சூடு தணிவதற்குள், மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அவர்.

பொன்முடி, ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து, டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமம் உருவாக்குவதற்கான பணிகள் வருவாய் துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்கு உட்பட்ட இந்த சித்தலிங்கமடம் ஊராட்சியை  இரண்டாக பிரிப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அந்த ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே, இதற்கு எதிப்பு தெரிவித்து நேற்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த கிராமமக்கள், கடைகளை அடைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த போராட்டத்தை கைவிடும்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. எனவே, நேற்று மதியம் அந்த கிராமத்திற்கு வந்த அமைச்சர் பொன்முடி, அம்மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது, கொட்டும் மழையிலும் அவரை முற்றுகையிட்ட ஊர் பொதுமக்கள், சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் பொன்முடி

சுமார் இருபது நிமிடத்திற்கு மேலாக நீண்ட பொதுமக்கள் – அமைச்சருடனான இந்த பேச்சுவார்த்தை, ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறியுள்ளது. திடீரென கோபம் கொண்ட அமைச்சர் பொன்முடி, அவருக்கு பின்பகுதியில் இருந்த ஒருவரை பார்த்து கடுமையான தடித்த வார்த்தையை பயன்படுத்தி ஒருமையில் திட்டியுள்ளார். இதற்கான வீடியோ காட்சிகளும் தற்போது வேகமாக பரவி வருகிறது. உடனே, காவல்துறை அதிகாரிகளுடன் அப்பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார் அமைச்சர் பொன்முடி. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க-வின் கழக துணைப் பொதுச்செயலாளராகவும், உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கும் பொன்முடி தொடர்ச்சியாக இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி வருவது கட்சி நிர்வாகிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.