தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், “பெருந்தலைவர் காமராஜர் தி.மு.க-வினரின் கட்டைவிரலை வெட்டுவேன் என்றார். ஆனால், அவருக்கு கல்லறை கட்டியதே நாம்தான். எந்த காங்கிரஸ்காரர்களும் அதை செய்யவில்லை. இன்று வரை காமராஜருக்காக நாம் கட்டிய கல்லறையில் தான் அனைவரும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னிக்க வேண்டும். நான் வரலாற்றை தான் சொல்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல” எனப் பேசியிருந்தார்.

காமராஜர்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில், தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர் காமராஜரைப் பற்றி இப்படி பேசியது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆர்.எஸ் பாரதியின் பேச்சுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி பொற்கால ஆட்சி செய்து, எல்லோருக்கும் உதாரணமாக திகழ்பவர் பெருந்தலைவர் காமராஜர். பெருந்தலைவரைப் பற்றிப் புறம் பேசி விளம்பரம் தேடிக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்” எனக் கண்டனம் தெரிவித்தார்.

அதேபோல, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தன் ட்விட்டர் பக்கத்தில், “பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தும், இதுபோன்ற அநாகரிகமான பொய்யான பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெருந்தலைவர் என்றும் வெட்டுவேன் என்று அரசியல் பேசியவர் இல்லை. அவர் புகழ் என்றும் வாழும்” எனப் பதிவிட்டிருந்தார்.

ஜி .கே .வாசன் சாடல்

இதைத்தொடர்ந்து நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கம் சார்பில் அனைத்து நாடார் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காமராஜர் குறித்து அவதூராகப் பேசிய ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஆர்.எஸ் பாரதியை கண்டித்து சென்னையில் நவம்பர் 1-ம் தேதி முதல் அவர் வருத்தம் தெரிவிக்கும் வரையில் காந்திய வழியில் தொடர் அறப்போராட்டங்கள் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆர் எஸ் பாரதி

இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதி தன் ட்விட்டர் பக்கத்தில் “பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி நான் பேசியதை வெட்டியும் ஒட்டியும், பா.ஜ.க சார்ந்த சமூக வலைதளங்கள் வெளியிட்டுள்ளன. என்னுடைய முழு பேச்சைக் கேட்டால் உண்மை புரியும். இதுகுறித்து தெளிவாகப் பேட்டியளித்துள்ளேன். இருப்பினும், என் பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.