அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து காவல்துறைக்கு பொதுவான சீருடையை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்.

அரியானா மாநிலம் சூரஜ்கண்ட் நகரில் நடைபெற்று வரும் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி இன்று காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “சூரஜ்கண்டில் நடைபெறும் ‘சிந்தனை முகாம்’ உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் புதிய கொள்கைகளை உருவாக்குவதற்கான முயற்சியாகும். நாடு முன்னேறும் போது அதன் வளர்ச்சி பலன்கள் அடிமட்டத்தில் உள்ள கடைசி நபருக்கும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் ஒன்றுக்கொன்று உத்வேகம் பெற்று நாட்டை வலுப்படுத்த சிறந்த நடைமுறைகளை இணைக்க வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலங்களின் பொறுப்பு, ஆனால் இவை தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், நாட்டில் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தவும் பல்வேறு மாநில காவல்துறையினருக்கு இடையேயான தொடர்பை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் கற்க வேண்டும், ஒருவருக்கொருவர் உத்வேகம் பெற வேண்டும், உள்நாட்டு பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காவல்துறை தொழில்நுட்ப இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பணி இந்தியாவில் காவல்துறையை வலுப்படுத்த தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்கள் மற்றும் செயல்முறைகளை அறிமுகப்படுத்தும்.

image

அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து காவல்துறைக்கு பொதுவான சீருடையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது காவல்துறைக்கு பொதுவான அடையாளத்தை உருவாக்கும். கொரோனா காலத்தில் போலீசார் தங்கள் உயிரைப்பணயம் வைத்து, தேவைப்படுபவர்களுக்கு உதவினார்கள். அவர்கள் கடமையில் குறைவில்லை. ஒரு நல்ல உணர்வைப் பேணுவது அவசியம். இதற்காக காவல் துறையை ஊக்குவிப்பது, அதற்கான திட்டமிடல் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவை தொடர வேண்டும். தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஒரு எதிர்கால வசதி, மற்றும் சமூகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நேர்மறையான கண்ணோட்டம் இருக்க வேண்டும். இதற்காக, நமது காவல்துறையினரை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் ‘அமிர்த பீதி’ உருவாக்கப்படும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குதல், அனைத்து காலனித்துவ மனப்பான்மையிலிருந்தும் விடுதலை, பாரம்பரியத்தில் பெருமை, ஒற்றுமை மற்றும் மிக முக்கியமாக, குடிமகன் கடமை ஆகிய 5 தீர்மானங்களை உள்வாங்குவதன் மூலம் இந்த ‘அமிர்த பீதி’ உருவாக்கப்படும். 5ஜி தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன், விழிப்புணர்வும் சமமாக முக்கியமானது. இந்தியாவின் சட்டம்-ஒழுங்கு முறை புத்திசாலித்தனமாக மாறுவதை உறுதி செய்ய வேண்டும்.

image

5ஜி நமக்கு ஒரு வரமாகவும், சாபமாகவும் இருக்கலாம். எனவே நாம் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். தீவிரவாதம் மற்றும் ஊழல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எங்கள் பலத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குடிமக்களின் பாதுகாப்பையும் அதிகரிப்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். சைபர் கிரைம் அல்லது ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தினாலும், இதற்காக நாம் புதிய தொழில்நுட்பத்தில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். ஸ்மார்ட் தொழில்நுட்பம் சட்டம்-ஒழுங்கை ஸ்மார்ட்டாக மாற்றும். பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, ஊடுருவல் போன்ற பல குற்றங்கள் எல்லைக்கு அப்பால் இருந்து நடக்கின்றன.

ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்துவதற்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தீவிரவாதத்தின் அடிப்படை கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும், கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத அடிப்படை கட்டமைப்புகளை குறிப்பிட்ட அளவு அரசு தகர்த்துள்ளது. நக்சல் எந்த வகையில் இருந்தாலும் அதனை முழுமையாக அகற்ற வேண்டும், அது துப்பாக்கி வடிவிலாக இருந்தாலும் அல்லது எழுத்து வடிவில் இருந்தாலும் அது அகற்றப்பட வேண்டும். நம் இளைஞர்கள் காக்கப்பட வேண்டும். நாட்டின் எல்லையோர கிராமங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்று அங்கு தங்கி அங்குள்ள அனுபவங்களை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பெற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

– விக்னேஷ்முத்து

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.