தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் கோவையில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக்கொண்டு ஒரு கார் சென்றிருக்கிறது.

சைலேந்திரபாபு

அந்த கார் அதிகாலை நான்கு மணியளவில் வெடித்து சிதறியது. அந்த காரை ஓட்டிச்சென்ற கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்தச் சம்பவம் குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்றது. சம்பவ இடத்தை டி.ஜி.பி சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், “அந்த கார் 10 பேரிடம் கைமாறி வந்தது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமும் விசாரணை நடத்தி கார் எங்கிருந்து வந்தது என்பதும், இறந்தவரின் விவரங்களும் 12 மணி நேரத்துக்குள் கண்டறியப்பட்டன. இறந்த ஜமேசா முபின் வீட்டில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சோதனை நடத்தப்பட்டது. அதில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் உள்பட 75 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர் மேற்பார்வையில் உதவி ஆணையர் தலைமையில் ஆறு இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைத்து சந்தேகத்தின் அடிப்படையில் 22 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பாலகிருஷ்ணன்

இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில், ஒருசிலர் கேரளா சிறைக்கு சென்று வந்தது தெரியவருகிறது. அவர்கள் எதற்காக கேரளா சிறைக்கு சென்று யாரை சந்தித்தார்கள்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்

ஏற்கெனவே தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிதான் கோயம்புத்தூர். 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்கு நாட்களில் சுமார் 18 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில், 58 பேர் கொல்லப்பட்டனர். 252 பேர் காயமடைந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புடைய பொருள்கள் சேதடைந்தன. தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தால், கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணாமலை

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யார்… எந்த அமைப்பாவது இதன் பின்னால் இருக்கிறதா என்பது போன்ற கோணங்களில் விசாரித்து உண்மையைக் கண்டறிவது முக்கியம். அந்த வகையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்வைத்திருக்கும் கருத்துக்கள் ஆளும் தி.மு.க-வை சூடாக்கியருக்கிறது. “கோவை சம்பவத்தைப் பொறுத்தவரையில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், பியூஸ் வயர், பேட்டரி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதை வெளிப்படையாகச் சொல்ல காவல்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர்.

சம்பவம் நடந்து 24 மணி நேரம் வரை எந்த தகவலையும் தெரிவிக்காத தமிழக காவல்துறையினர், அதற்கு பின்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததாகக் கூறியுள்ளனர். இதைச் சொல்வதற்கு ஏன் 24 மணி நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சம்பவம் பயங்கரவாத கும்பலின் சதி. அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஸ்டாலின்

மேலும், “ஐந்து பேரைக் கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களை எந்தெந்த சட்டப்பிரிவுகளில், எதற்காக கைது செய்திருக்கிறோம் என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை. இது மிகுந்த வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் உள்ளது. தமிழக காவல்துறை யாரை காப்பாற்ற இந்த சம்பவத்தை மூடி மறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஒருவேளை தற்கொலை படை தாக்குதல் நடந்திருந்தால் கோவையின் நிலை என்னவாயிருக்கும்?. அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருந்தால் தமிழக அரசு கலைக்கப்பட்டு இருக்கும். கோவை சம்பவத்தை பொறுத்தமட்டில் தமிழக உளவுத்துறை தோற்றுவிட்டது. தமிழகத்தில் இன்னும் குண்டு வெடிக்க வேண்டுமா? இன்னும் ஒருவர் இறந்தால் தான் உளவுத்துறை தோற்றுவிட்டது என்பதை முதல்-அமைச்சர் ஒப்புக்கொள்வாரா?. என்.ஐ.ஏ. விசாரணை இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு பா.ஜ.க.வுக்கு உள்ளது” என்றும் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

செந்தில்பாலாஜி

அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், “கோவையில் குண்டுவெடிப்பு நடந்து 36 மணி நேரங்கள் கடந்துவிட்டன. ஆனால் இப்பொழுது வரை முதல்வர் மக்களை சந்தித்து இதைப்பற்றி பேச தயங்குவது ஏன்? இதுவரை தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற தி.மு.க ஆட்சியில் நடந்துவிட்டது. உயிர் சேதம் ஏற்படும் வரை காத்திருப்பீர்களா?” என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு பதிலடியாக ட்வீட் செய்திருக்கும் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக்கொள்ள மாட்டார்களா, அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்டாலின்

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், “காவல் துறையை தனது கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், கோவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையல் இடத்தை பார்க்க வராது கண்டனத்திற்குரியது. கோவையை இன்னும் பழி வாங்கும் நோக்குடன் முதல்வர் இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது. மைனாரிட்டி மக்கள் ஓட்டுக்காக மற்ற மக்கள் உயிரை பலி கொடுக்கும் முடிவிற்கு முதல்வர் வருகிறாரா? பத்திரிகை அறிக்கைக் கூட கொடுக்க முடியாத அளவிற்கு மைனாரிட்டி ஓட்டு, முதல்வர் கைகளை கட்டிப்போட்டுள்ளது. எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் உயிரை விட மைனாரிட்டி ஓட்டு உங்களுக்கு பெரியதாக இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிரார்கள்.

கோவை சம்பவம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன், இது பற்றி முதல்வர் பேசத் தயங்குவது ஏன் என்று அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்டும், இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. மாறாக, கோவை சம்பவம் குறித்து தலைமைச் செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், கோவை சம்பவ வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ-க்கு மாற்றுவதற்கு முதல்வர் பரிந்துரை செய்திருக்கிறார்.!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.