மும்பையை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர், 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், அச்சிறுமி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறுமியை வழிமறித்து அடுத்தடுத்து கேள்விகளை கேட்டதோடு, மாணவியின் நடத்தை குறித்து குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், அந்த சிறுமியை `ஐட்டம்’ எனவும் திட்டியுள்ளார். இதன் உச்சமாக, மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து மானபங்கமும் செய்துள்ளார்.

இளைஞரின் செயலால் அதிர்ந்த அச்சிறுமி, தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக் கேட்டுள்ளார். அதை கேட்காத இளைஞர், சிறுமியிடம் விரும்பத்தகாத நடத்தையை தொடர்ந்தார். இதனிடையே, தன்னிடம் இருந்த செல்போனில் காவல் துறையினரை தொடர்பு கொண்டு நடந்ததை அச்சிறுமி விவரித்துள்ளார். காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்குள், அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார்.

Abuse (Representational Image)

வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அந்த இளைஞரின் மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-ம் படி பாலியல் துன்புறுத்தல், பிரிவு 354(D)-ன் படி பின் தொடர்தல், பிரிவு 506-ன் படி குற்றவியல் மிரட்டல் மற்றும் பிரிவு 504-ன் படி காரணத்தோடு அவமதித்தல் ஆகிய பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறைக்கு எதிரான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் வழக்கு விசாரணையானது, மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நிறைவடைந்து சிறப்பு நீதிபதி எஸ்.ஜே.அன்சாரி தீர்ப்பு வழங்கினார். சுமார் 28 பக்கங்கள் கொண்ட அவரது தீர்ப்பில், ’பெண்களை அவதூறாக பேசுவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-ன் கீழ் குற்றம். மேலும், பெண்களை ‘ஐட்டம்’ என்ற கீழ்த்தரமான சொற்களை பயன்படுத்தி திட்டுவது அவர்களை பாலியல் ரீதியாகப் புறக்கணிப்பதாக கருதப்படும். இந்த குற்றங்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 மற்றும் போக்ஸோ சட்டம் ஆகியவற்றின் கீழ் அந்த இளைஞர் குற்றவாளி’ எனத் தீர்ப்பளித்துள்ளார். மேலும், அவருக்கு 18 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமி

பெண்களைப் பாதுகாப்பதற்கு, இதுபோன்ற குற்றங்கள் மற்றும் குற்றச் செயல்கள் என வரையறுக்கப்படாத நடத்தைகளை கடுமையாகக் கையாள்வதோடு, பெண்களை ஐட்டம் என அழைப்பது அவர்களை பாலியல் ரீதியாக புறக்கணிக்கும் அவலம் என்ற நீதிபதி, தண்டனை பெற்றுள்ள இளைஞரை போன்ற சாலையோர ரோமியோக்களுக்கு, சட்டத்தின் மூலம் சரியான பாடம் கற்பிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் சிறுமியின் தரப்பில், ’மதியம் 1.30 மணியளவில் சிறுமி தனது பள்ளிக்குச் சென்றுள்ளார். மதியம் 2.10 மணியளவில் அவர் திரும்பி வீட்டுக்குச் செல்ல நடந்துவந்து கொண்டிருந்தபோது, ​​அந்த வழியில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த, குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர், சிறுமியின் பின்னால் வந்து, அவருடைய தலைமுடியை இழுத்து ‘என்ன ஐட்டம், எங்கே போறே..?’ என்று  அநாகரிகமாகப் பேசியதைத் தொடர்ந்து அவர் மேல் நீதிமன்றத்தில்  வழக்குத் தொடரப்பட்டது’ என்று தெரிவித்துள்ளனர்.  

இதுகுறித்து குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் தரப்பில், அந்தச் சிறுமியுடன் அவர் நட்பு கொண்டிருந்ததாகவும், அது பிடிக்காததால் சிறுமியின் பெற்றோர் பொய்ப் புகார் அளித்துள்ளதாகவும், அதோடு இந்த விஷயத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார். 

மேலும் அரசின் தரப்பில், `சமூகத்திற்குச் சரியான செய்தியை வெளிக்காட்டும் வகையில் போதுமான தண்டனை, குறிப்பாக சிறுமிகளை கேலி செய்வது, மற்றும் சாலையில் நடந்து செல்லும்போது தகாத முறையில் அவர்களைத் தொடுவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை அவலப்படுத்தும் நபர்களுக்குச் சரியான தண்டனை வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.  

சிறை

இதைத் தொடர்ந்து, கடுமையான சில குற்றச்சாட்டுகளிலிருந்து குற்றம் சுமத்தப்பட்டவரை விடுவித்த நீதிமன்றம், பாலியல் துன்புறுத்தலுக்காக இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 354-ன் கீழ் அவருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனையும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கியுள்ளது. இரண்டு தண்டனைகளும் சேர்த்து 18 மாதங்கள்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஏற்கெனவே நான்கு மாதங்கள் காவலில் இருந்தார். எனவே அந்த நான்கு மாதக்காலம் தண்டனைக் காலத்திலிருந்து கழிக்கப்படும். 

சம்பவம் நிகழ்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏழாண்டுகளுக்குப் பின் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான `ஐட்டம்’ என்ற வார்த்தை பயன்பாடும், நடுவிரல் சைகை கலாசாரமும் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு மும்பை நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இதை பெண்ணிய செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.