திராவிட மாடல் என்பது சுயமரியாதையைப் பேசுவது, யாரும் புறக்கணிக்கப்படாமல் அனைவரும் வெற்றிபெறச் சமமான வாய்ப்பு தருவது, அனைவருக்கும் கல்வி மற்றும் இடஒதுக்கீடு மூலம் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை மேம்படுத்துவது திராவிட மாடலின் அடிப்படை என்கிறார்கள். ஆனால், ஒப்பந்த பணியாளர்கள் என்ற பெயரில், மறைமுகமாக உழைப்பு சுரண்டலை நடத்துவதும் ஒடுக்குமுறையே, ஆனால் இதை கண்டுகாணாமல் இருக்கிறது தமிழக அரசு. ஆனால், இந்த ஒடுக்குமுறையை முற்றிலுமாக அழிக்க ஒடிசா அரசாங்கம் முக்கிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதுதான், அரசுப் பணிகளில் தற்காலிக பணியை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, சுமார் 57,000 பேர் நிரந்தர பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இனி ஒப்பந்தப் பணி என்பது ஒடிசாவில் இருக்காது என்றும் கூறியிருக்கிறது அந்த அரசு.

அரசு ஊழியர்கள்

முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி கட்சி ஒடிசாவை ஆட்சி செய்து வருகிறது. அங்கு பல ஆண்டுகளாக அரசு ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரமாக்கப்படாமல் இருந்தனர். அதற்கு தீர்வு காணும் வகையில் அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக அறிவித்திருக்கிறது அந்த அரசாங்கம். இதே கோரிக்கையைப் பல ஆண்டுகளாக தமிழக ஒப்பந்த பணியாளர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதை அறிவிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது தமிழக அரசு.

ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

ஒரே பணியை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு ஒப்பந்தம் என்னும் அடிப்படையில் குறைந்த ஊதியமும் நிரந்தர பணியாளர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்குவது சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கு எதிரானது. ஆனால் இந்த சமத்துவமின்மையைக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஊழியர்கள் அனுபவித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை நிறைவேற்றாமல் இருக்கிறது.

இதற்கு நிதி பெரிய பிரச்னையாக சொல்லப்படுகிறது. ஆனால், 2006-ம் ஆண்டு இதே நிதி நெருக்கடியை சந்தித்த போதும் அப்போது முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி 45,000 ஒப்பந்த பணியாளர்களை நிரந்தமாக்க ஆணையை வெளியிட்டார். தற்போது ஒடிசா அரசின் நடவடிக்கையும் “பணி நிரந்தரம்” என்பது சாத்தியமற்றது இல்லை என நிரூபித்துள்ளது. அதனால் இதை உடனடியாக பரிசீலித்து தீர்வு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம் பேசியதாவது, “தமிழகத்தில் 3,00,000 ஊழியர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணி செய்து வருகின்றனர். இவர்களை நிரந்தர பணிக்கு மாற்றி வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். தற்போது தமிழ்நாடு அரசு கொண்டுவந்த காலை உணவுத் திட்டம் முன்னோடி திட்டமாக பாராட்டப்படுகிறது , ஆனால் அதில் முக்கிய பங்காக இருக்கும் சமையலர்களின் பணி கடந்த 39 ஆண்டுகளாக நிரந்தர பணியாக மாற்றப்படாமல் இருக்கிறது. அரசாங்கம் கொண்டுவரும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் அரசு ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது” என்றார்.

கலைஞர் கருணாநிதி

நிதிநிலை பிரச்னையால் நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு குறித்து பேசிய மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைபாண்டியன், “உலகத்தில் சக்தி வாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவே பல லட்சம் கோடி கடனில் உள்ளது. இந்தியாவின் கடனும் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதில் தமிழகத்திற்கான கடன் தொகை அதிகமாக இருந்தாலும், அது வரம்பிற்குள்ளேதான் உள்ளது. எனவே, ஒடிசா அரசு கொண்டு வந்திருக்கும் திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். `எல்லாருக்கும் எல்லாம்’ என பேசும் திராவிட மாடல் ஆட்சி, ஒப்பந்த பணியாளர்கள் என்ற பெயரில் அவர்களின் உழைப்பை சுரண்டுவது சரியான நடவடிக்கை அல்ல. எனவே, அவர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றி அறிவிக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.