இந்த சீசனின் முதல் எவிக்ஷன் நிகழ்ந்து விட்டது. முத்து தானாக வெளியேறி விட்டதால் ஒருவேளை ‘எவிக்ஷன் இல்லை’ என்று டிவிஸ்டுடன் சொல்வார்களோ என்று கூட மெலிதாக தோன்றியது. இல்லை. சாந்தி மாஸ்டர் முதல் எவிக்ஷனாக வெளியேறியிருக்கிறார். அவரை விடவும் சுமாரான போட்டியாளர்கள் உள்ளே இருக்க, சாந்தி வெளியேறுவது ஒருவகையில் துரதிர்ஷ்டம்தான். (தினமும் மூன்று வேளை உப்புமா செய்து தந்த பாவம்தான், அவரை பலி வாங்கிடுச்சோ?!)

குவின்சி

நாள் 14-ல் நடந்தது என்ன?

‘சாமி சரணம்..ஐயப்பா..’ என்று பளபளா கறுப்பு சட்டை மற்றும் வேட்டியில் ‘காலா’ கெட்டப்பில் லட்சணமாக வந்தார் கமல். என்னவொன்று, சட்டைக்கு இரண்டு பக்கமும் பெல்ட் போடும் கெட்ட வழக்கத்தைத்தான் இன்னமும் அவர் நிறுத்தவில்லை. முழங்கை அருகில் இரு வளையங்கள். (ஸ்டைலுப்பா!).

‘மாறும் புதுமை, மாறாத பெருமை, என்கிற ஸ்லோகனுடன் விஜய் டிவியின் தீம் மஞ்சள் வண்ணத்திற்கு புதியதாக மாறியிருப்பதை கமல் அறிமுகப்படுத்தினார். அறிமுக வீடியோ மிகுந்த அழகுணர்ச்சியுடன் உருவாக்கப்பட்டிருந்தது.

‘மைக்கை ஒளிச்சு வெக்காதீங்க.. மக்களே..’

அகம் டிவி வழியே உள்ளே சென்ற கமல் “எனக்கும் பிக் பாஸிற்கும் சொல்லிச் சொல்லி போரடிக்குது. மைக்கை ஒழுங்கா மாட்டுங்க. கழட்டி வெக்கறது. ஒளிச்சு வெக்கறது. சைகையில பேசிக்கறது. இதெல்லாம் கூடாது. ஜெர்மானியர் உருவாக்கிய சங்கேத மொழியையே பிரிட்டிஷ்ஷார் உடைத்துக் கண்டுபிடித்து விட்டார்கள். எனவே நம்ம மக்கள் கண்டுபிடிச்சிடுவாங்க. பிக் பாஸ் டீமும் இந்த விஷயத்துல கில்லி” என்று செல்லமாக எச்சரித்தார்.

கமல்

‘மனிதர்க்கு மொழியே தேவையேவில்லை’ என்பது போல கதிரவனும் க்வின்சியும் ஆதிகால மனிதர்கள் போல சைகையிலேயே பேசிக் கொள்கிறார்களாம். பத்தே நாளில் பரஸ்பரம் இருவர் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு மொழியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு விருதே தரலாம். பிக் பாஸ் வீட்டில் அந்தரங்கமோ, ரகசியமோ துளி கூட அனுமதிக்கப்படாது என்பதே இதன் சாரம். ‘உங்க குரல் ஒலிக்கணும்ன்ற அக்கறை உங்களுக்குத்தானே முதல்ல இருக்கணும்” என்று கமல் சொன்ன போது தன்னிச்சையாக ‘களுக்’ என்று தளும்பி சிரித்து விட்டார் க்வின்சி.

‘யாரு… பாம்பு. யாரு சிங்கம்..?… ஒரு விலங்கு விளையாட்டு

அடுத்ததாக மைனாவைத் தேர்ந்தெடுத்து “ஸ்டோர் ரூம்ல ஒரு பொருள் இருக்கும். எடுத்துட்டு வாங்க” என்றார் கமல். மிருகங்கள் மற்றும் பறவைகளின் உருவமும் குணாதிசயமும் இருந்த மெடல்கள் இருந்தன. மைனா என்று பறவையின் பெயர் இருந்ததால் அவரையே கமல் தேர்ந்தெடுத்தார் போல. ‘யாருக்கு எது பொருந்தும்-ன்றதை நீங்களே அனைவருக்கும் கொடுங்க” என்று கமல் சொன்னதும் சற்று திகைத்து நின்று விட்டார் மைனா. (ஏஞ்சாமி..என்னை கோத்து விடறீங்க?!) இப்படி ஒருவரிடமே பொறுப்பை ஒப்படைக்காமல் கலவையாக தந்திருக்கலாம். “நீங்கதான் நிகழ்ச்சியை ஒரு வாரம் வெளில நின்னு பார்த்துட்டு வந்திருக்கீங்க” என்கிற காரணம் வேறு.

ஜனனி (ஆமை), தனலஷ்மி (பாம்பு), அசிம் (ஆந்தை), அசல் (தவளை), ஏடிகே (முதலை), ராம் (எலி), ஆயிஷா (முயல்), ராம் (எலி), மகேஸ்வரி (நரி), அமுதவாணன் (குரங்கு), கதிரவன் (சிங்கம் – முத்துதான் முதல் சாய்ஸ்), மணிகண்டன் (பச்சோந்தி), ராபர்ட் (பச்சைக்கிளி) என்று குத்துமதிப்பான காரணங்களைச் சொல்லி தேர்வு செய்து வழங்கினார் மைனா. ‘ராபர்ட் கிளைவ் மாதிரி ராபர்ட் கிளி’ என்று டைமிங்கில் கமல் சொன்ன காமெடி, அப்படியொன்றும் சிறப்பு இல்லையென்றாலும் கிரேசி மோகனின் வாசனை வெளிப்பட்டது.

மைனா

“ஓகே.. உங்களுக்கு தரப்பட்ட மிருகங்கள் பிடிக்கலைன்னா.. அதை நீங்க வேற யாருக்காவது தரலாம்” என்று தூண்டி விட்டார் கமல். தனக்கு தரப்பட்ட முதலையை ரச்சிதாவிடம் ஒப்படைத்தார் ஏடிகே. “அசிம்தான் நரி” என்று அவரிடம் தந்தார் மகேஸ்வரி. பதிலுக்கு ஆந்தையை மகேஸ்வரிக்கு பாசத்துடன் திருப்பித் தந்தார் அசிம். ‘விஷத்தன்மையுள்ள பாம்பு’ தரப்பட்டதால் ஆரம்பத்திலிருந்தே முகச்சுளிப்புடன் அமர்ந்திருந்த தனலஷ்மி, சான்ஸ் கிடைத்ததும் அதை அசிமிற்கு தந்தார். (தங்கச்சி.. இப்படி பண்ணிட்டியம்மா?!). “பாம்பின் விஷம் என்பது தற்காத்தலுக்குத்தான். ஒருவகையில் அதுல புரோட்டின் இருக்கு” என்று கமல் சொன்ன தகவல் விளம்பரதாரர்களின் காதில் விழுந்து விடக்கூடாது. ‘எங்க பேஸ்ட்ல விஷம் இருக்கு.. அது புரோட்டின் சக்தி கொண்டது’ என்று அவர்கள் ஆரம்பிக்காமல் இருக்க வேண்டும்.

“அசிம்.. நீங்க சகட்டு மேனிக்கு எல்லோரையும் பேசினது.. உங்க கோபமா.. அல்லது வியூகமா?” என்று நம்மிடம் இருந்த அதே சந்தேகத்தை அழகான ரைமிங்கில் கேட்டார் கமல். “அது கோபம்தான்.. ஸ்ட்ராட்டஜி இல்ல” என்பது அசிமின் விளக்கம்.

பிரேக்கில் கமல் தலை மறைந்ததும், கதிரவனும் க்வின்சியும் கோட் வோ்டில் பேசிக் கொள்ளும் விஷயத்தை “ஓஹோ.. அப்படியா சங்கதி?” என்று மற்றவர்கள் கிண்டலடித்தார்கள். தன்னிடம் வந்த முதலையை “ஆக்சுவலி.. இது அவளுக்குத்தான் போய் சேரணும்” என்று ராபர்ட்டிடம் ஜாடை மாடையாக சொல்லிக் கொண்டிருந்தார் ரச்சிதா. அந்த ‘அவள்’ ஆயிஷாவா?! “ஹே.. ஸாரிப்பா. இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று விருதுகள் தந்த மைனா அனைவரிடமும் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மகேஸ்வரி

சிறைக்கு அனுப்பப்பட்ட நிரபராதிகளின் பரிதாபக் கதை

பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘அநியாயமாக தண்டிக்கப்பட்ட நிரபராதிகளின் பரிதாபக் கதையை’ அடுத்ததாக விசாரிக்க ஆரமபித்தார். ராம் மற்றும் ஜனனி சிறைக்கு அனுப்பப்பட்ட விவகாரம். “சத்தமா பேசினவங்களை ஜாமீன்ல அனுப்பிட்டு ஓரமா நின்னுட்டு இருந்த என்னை ஜீப்ல ஏத்திட்டாங்கய்யா” என்பது போல் கண்ணீர் வழிய பரிதாபமாகச் சொன்னார் ராம். “ஒண்டும் கதைக்க விளங்கேலை.. செல்லப்பிள்ளை-ன்னு சொல்லிட்டு தொட்டில்ல போடறதுக்குப் பதில் ஜெயில்ல தூக்கிப் போட்டாங்க. பிக் பாஸூம் சொல்லிட்டார். வேற வழி தெரியல..” என்று மழலைத் தமிழில் புலம்பினார் ஜனனி.

ஜனனி

‘இவங்களை ஜெயிலுக்கு அனுப்பிச்ச. அந்த எட்டுப் போ் கொண்ட குழு.. என்ன பதில் சொல்றீங்க?’ என்று அந்தப் பக்கம் வண்டியைத் திருப்பினார் கமல். விளக்கம் சொல்ல ஆர்வமாக எழுந்த மகேஸ்வரி, “அப்ப ஒருத்தன் சாமர்த்தியமா பேசினா, தீர்ப்பை மாத்தி எழுதிடுவீங்களா?” என்று கமல் மடக்கியவுடன் “ஐயா.. நான் வந்து மூணு நாள்தான் ஆச்சுங்கய்யா” என்று எஸ்கேப் ஆனார். “ஓகே.. அப்ப யார்தான் சிறைக்குப் போயிருக்கணும்னு நெனக்கறீங்க?” என்று ராம் மற்றும் ஜனனியிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் ‘ஆயிஷா – அசிம்’ என்று கோரஸாக பதில் சொன்னார்கள். (அவங்க ரெண்டு பேரும் ஒருவேளை கூண்டுக்குள்ள போயிருந்தா.. அது வெடிச்சு சிதறியிருக்கும்!).

‘ஷெரினாவை பஞ்சாயத்திற்கு இழுத்த கமல்’

அடுத்ததாக ‘ரேங்கிங் டாஸ்க்’ கலவரத்தைப் பற்றிய விசாரணையை ஆரம்பித்தார் கமல். “இந்த டாஸ்க்ல சத்தம்தான் அதிகம் இருந்ததே தவிர, ராஜதந்திர யுத்தம்-ன்னு ஒண்ணு இருந்த மாதிரி தெரியலையே.. ஷெரினா நின்ன ஏழாம் இடத்திற்கு ஏன் யாருமே போட்டியிடலை?” என்று கமல் மடக்க ‘ஏஞ்சாமி. நான் பாட்டுக்கு ஓரமா செவனேன்னுதானே உக்காந்திருக்கேன்’ மோடிற்கு ஷெரினாவின் முகத்தில் பீதி ஏறியது. “இடத்தைப் பார்த்துக்கங்க. மேடம்.. பாத்ரூம் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு வர்றதுக்குள்ள… அங்க நின்னுட்டாங்க சார்” என்று ராம் வெள்ளந்தியாகச் சொல்ல கமலால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அசிமாவது சும்மா இருந்திருக்கலாம். “நாங்கள்லாம் ஒரே டீமு” என்று ஷெரினாவை சப்போர்ட் செய்து கெத்தாக விளக்கம் கொடுக்க “அப்ப இது டீம் பாலிட்டிக்ஸா?” என்று அவரையும் கமல் மடக்கி “கருத்து வேறுபாடு உள்ளவங்க கூட மட்டும்தான் நீங்க சண்டை போட்டீங்களா?” என்று கிடுக்கிப்பிடி போட ‘தவளை தன் வாயால் கெடும்’ன்றது எனக்குத்தான் பொருந்தும்’ என்று அசிமின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம். “நான் முயற்சி செஞ்சும் யாரும் மூஞ்சி கொடுத்தே பேச மாட்டேன்றாங்க.. எனக்கும் தன்மானம் இருக்குல்ல?!” என்று விக்ரமன் சொன்னது பரிதாபமாக இருந்தது.

பிக் பாஸ்

“தலைவர் போட்டிக்கான முதல் மூன்று இடம், சிறைக்கான கடைசி இரண்டு இடம்.. ஆகியவற்றைத் தவிர மத்த இடங்களுக்குத்தான் நிறைய போட்டி இருந்தது’ என்று அந்தக் கலவரத்தின் மையத்தை சரியாகச் சுட்டிக் காட்டினார் ஷிவின் “சைலண்ட்டா இருந்தே ஜெயிச்சிடலாம்ன்னு பாக்கறீங்களா.. உங்கள் மீதுள்ள விமர்சனத்தை உணர்கிறீர்களா?” என்று ஷெரினாவிற்கு ஜெர்க் தந்த கமல் “உங்களை மக்களுக்குப் பிடிச்சிருக்கு. காப்பாத்திட்டாங்க” என்றதும் அம்மணியின் முகத்தில் நிம்மதிப் பெருமூச்சு. “வீட்டில் தங்க அனுமதிக்கப்படாமல் வராண்டாவிலேயே தன் வாழ்க்கையைக் கழித்த ராமையும் மக்களுக்குப் பிடிச்சிருக்கு” என்று அடுத்த வாக்கியத்தில் கமல் சொல்ல “அய்யா.. சாமி.. குலதெய்வமே..” என்கிற மாதிரி நன்றி சொன்னார் ராம்.

க்வின்சி தன்னிடம் நட்பாக இருக்காமல், ஷெரினா மற்றும் கதிரவன் ஆகிய இருவரிடம் மட்டுமே அதிகம் புழங்குவது குறித்து அசிமின் மண்டையில் நண்டு பிறாண்டுகிறது போல. “செல்லம்.. ஐ லவ் யூ செல்லம்’ என்கிற ‘கில்லி’ பிரகாஷ்ராஜ் மாதிரி “ஏன் புள்ள என் கிட்ட இருந்து தள்ளி தள்ளிப் போற…” என்று க்வின்சியிடம் பரிதாபமாக விசாரித்துக் கொண்டிருந்தார். “வேலைக்கே ஆக மாட்டே.. கிளம்பு.. காத்து வரட்டும்ன்னு திமிரா சொன்ன பயதானே நீ?!” என்பது போல் க்வின்சி அதற்கு விளக்கம் தர, வாயடைத்துப் போனார் அசிம்.

`நீயெல்லாம் ஒரு ஆளா., அதை நீங்க கேட்கலாமா அசல்?’

பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘அசல் Vs தனலஷ்மி’ பஞ்சாயத்தை அடுத்ததாக ஆரம்பித்தார் “தனலஷ்மி…. Body shaming –ன்னு ஒரு வார்த்தை சொன்னீங்க இல்ல” என்று கமல் சரியாக எடுத்துக் கொடுக்க, ஏனோ தனலஷ்மி பம்மினார். “என்னை ஆன்ட்டின்னு சொன்னாரு.. பெரியம்மான்னு சொன்னாரு.. அண்ணான்னு சொன்னாலே ‘என்னா..’ன்னு கேட்டா அவருக்குக் கோபம் வந்துடுது” என்று தனலஷ்மி மழுப்பலாக தன் பிரச்சினையைச் சொல்ல, இந்த இடத்தில் அசலை கமல் கையாண்ட விதம் இருக்கிறதே?! அற்புதம். ஒருவருக்கு அவருடைய பிழையை கச்சிதமாக உணர்த்துவதற்கான உதாரணம் இது.

அசல்

“நான் இருக்கற இடத்தை பார்த்து என்னைப் பத்தி நீ முடிவு பண்ணாத. என்னைப் பத்தி நான்தான் முடிவு பண்ணனும்-ம்னு அறிமுக வீடியோல சொன்னீங்க. நல்லா இருந்தது. ‘நீயெல்லாம் ஒரு ஆளா..’ –ன்னு நம்மளைப் பார்த்து கேட்கும் போது கோபம் வருது. அதே விஷயத்தை நீங்க இன்னொருத்தருக்கு பண்ணலாமா? RAP என்பது புரட்சிகரமான இசை வடிவம். அந்தப் பாடல்கள் மூலம் அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைக்க முடியும். சாவியும் அதுலதான் இருக்கு. சில ஆட்சேபகரமான வார்த்தைகளை சினிமால உபயோகிக்க முடியாது. சென்சார்ல வெட்டிடுவாங்க. ஒருத்தரை ‘ஏழை’ன்னு சொல்றதே. அவரை அவமானப்படுத்தற மாதிரிதான். ஏழைன்றது நிரந்தர அடையாளம் கிடையாது. உழைச்சு முன்னுக்கு வந்து அந்த நிலைமையை மாத்திட முடியும்” என்றெல்லாம் கமல் தந்த அட்வைஸ் அற்புதம். இனியாவது அசலின் செயல்பாட்டில் மாற்றம் இருக்க வேண்டும்.

“இந்த வீட்ல ஒரு பிரச்னை இருக்கு. தாக்கறவங்களை விட்டுட்டு தாக்கப்படறவங்களை ‘சும்மா. இரு’ன்னு சமாதானம் பண்றீங்க. சத்தம் தேவைப்படற நேரத்துல ஏற்படற அமைதி ஆபத்தானது. அந்த அமைதிதான் ராமையும் ஜனனியையும் ஜெயிலுக்கு அனுப்பியது” என்றெல்லாம் சூழலை விளக்கிய கமல், தனலஷ்மி காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்னபோது எவிக்ஷன் பீதியில் இருந்த தனலஷ்மி கண்ணீர் வழிய நன்றி சொன்னார்.

‘திசை மாறிய பறவைகள் யார்.. யார்,?’

ஓர் இடைவேளைக்குப் பிறகு திரும்பிய கமல் ‘இந்த வீட்டுக்கு வந்திருக்கும் நோக்கத்தை மறந்துட்டு திசை மாறிப் பயணம் செய்யும் இரண்டு நபர்கள் யார்?’ என்று கேட்க பெரும்பாலான மக்கள் இரண்டே விஷயங்களைத்தான் சொன்னார்கள். ஒன்று, தனலஷ்மி. “சாதாரணர்களின் பிரதிநிதியாக வந்து கிடைத்த வாய்ப்பை தனது கோபத்தின் மூலம் இழக்கிறார்” என்பது. இரண்டாவது, அசலும் நிவாவும் இணைந்து எப்போதும் குசுகுசுவென்று பேசிக் கொண்டு தனி உலகத்தில் வாழ்கிறார்களாம்.

ஷெரின்

இதற்கான விளக்கத்தின்போது ‘நான் ரெண்டே சமயத்துலதான் சண்டை போட்டேன்” என்றார் தனலஷ்மி. “மக்கள் என்னை மிஸ் பண்றாங்கன்னு தெரியுது” என்று அசல் நக்கலாகச் சொன்ன பதில் அக்மார்க் குறும்பு. ஆனால் இந்த விவகாரத்தில் தன்னுடைய பெயர் இழுக்கப்பட்டதில் நிவா அப்செட். கண்கலங்கி நின்றிருந்தார். “நீங்க SAVED” என்று கமல் சொன்ன மகிழ்ச்சியைக் கூட அவரால் அனுபவிக்க முடியவில்லை. “நீங்க சரியாத்தான் போறீங்கன்னு மக்கள் சொல்றாங்க” என்று கமல் சமாதானம் சொன்னபிறகுதான் சிறிது நிம்மதியான முகபாவம் வந்தது.

‘திசை மாறிச் சென்றவங்க மாதிரி, இந்த வீட்ல கரெக்டா பேசி நடந்துக்கறவங்க. யாரு?’ என்கிற கேள்விக்கு ஷிவின் என்ற பதில் கிடைத்தது. அவர் காப்பாற்றப்பட்ட செய்தியை கமல் சொன்னதில் ஷிவின் மகிழ்ந்தார். முதல் வாரத்தில் பெரும்பாலோனோரின் அதிருப்தியைச் சம்பாதித்த ஷிவின், இப்போது அடைந்திருக்கும் முன்னேற்றமும் மாற்றமும் நன்று.

‘எப்போதுமே அம்மா கேரக்ட்டர்தான் முதல் பலி’

ஆக.. எவிக்ஷன் பிராசஸ் பட்டியலில் மீதமிருந்தவர்கள் சாந்தி மற்றும் மகேஸ்வரி. ஒரு சிறிய சஸ்பென்ஸிற்குப் பிறகு சாந்தியின் பெயரை அறிவித்தார் கமல். “கிச்சன் வேலையே சரியா இருக்கு.. எதிலயும் நான் ஜெயிக்கலை. இனிமே கேம்ல கவனம் செலுத்தணும்” என்று ஏற்கெனவே புலம்பிக் கொண்டிருந்தார் சாந்தி. அவரது பயம் உண்மையாகி விட்டது. வாக்களித்த மக்கள் ஏன் சாந்தியை நிராகரித்தார்கள் என்று தெரியவில்லை. ஷெரினா, க்வின்சி, நிவா போன்ற அதிகம் கண்ணில் படாதவர்கள் எல்லாம் உள்ளே இருக்கும் போது சாந்தியின் வெளியேற்றம் நிகழ்ந்தது துரதிர்ஷ்டம்தான். ஆனால் ‘அம்மா’ கேரக்ட்டர் எப்போதுமே முதல் பலியாவது பிக் பாஸின் வழக்கமான மரபுதான்.

கமல் ஹாசன்

“பாவம். வேளா வேளைக்கு சரியா சாப்பாடு செஞ்சி போட்டாங்க” என்று சாந்தியைப் பற்றி வருத்தப்பட்டார் ஆயிஷா. “தலைவர் போட்டிக்கு உங்களுக்குப் பதிலா யாரை நிக்க வைக்கப் போறீங்க?” என்கிற பிக் பாஸின் கேள்விக்கு க்வின்சியை தேர்ந்தெடுத்தார் சாந்தி. “மூணாம் இடத்திற்கு தைரியமா வந்து நின்னா.” என்பது சாந்தி சொன்ன காரணம். “ஐயோ. நானா..’ என்று பரிதாபமாக விழித்தார் க்வின்சி. எவிக்ஷனின் கடைசி வரிசையில் வந்து மயிரிழையில் தப்பியதை நினைத்து “நான் சரியாத்தான் விளையாடறனா?” என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் மகேஸ்வரி. சாந்தி போன துயரமும் கூட இருந்திருக்கும்.

“வாங்க சாந்தி..” என்று மேடைக்கு வரவேற்றார் கமல். “நான் நானா இருந்தேன். என்னை மாதிரி மனநிலை ஆளுங்களுக்கு இங்க செட் ஆகாது போல” என்று ஆதங்கத்துடன் சாந்தி சொன்னதை மறுத்த கமல் “இப்ப வெளில போற சாந்தி வேற” என்று வழக்கமான பாணியில் சமாதானம் சொன்னார். சாந்தியைப் பற்றிய பயண வீடியோ ஒளிபரப்பானவுடன் அகம் டிவியாக வழியாக இருவரும் உள்ளே சென்று ‘தீபாவளி வாழ்த்து’ சொன்னார்கள்.

புத்தகப் பரிந்துரை – தமிழ் இசை இயக்கத்தின் தந்தை

பிரேக் முடிந்து வந்த கமல், மக்கள் ஆவலாக எதிர்பார்க்கிற (?!) ‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்தார். ‘தமிழர்களுக்கு என்று ஒரு தனியான இசை வடிவம் கிடையாது’ என்கிற வரலாற்றுத் திரிபு ஒரு காலத்தில் இருந்தது. ஆபிரகாம் பண்டிதர் என்கிற இசைக்கலைஞர் பல தரவுகளைத் தேடியெடுத்து ஆராயச்சி செய்து ‘கருணாமிர்த சாகரம்’ என்கிற நூல் திரட்டினை உருவாக்கினார். ‘தமிழ் இசை இயக்கத்தின் தந்தை’ என்று இவரைச் சொல்லலாம். ‘ராகங்களுக்கு அடிப்படை தமிழப்பண்’ என்று நிறுவியிருக்கிறார். அதுவரை கர்நாடக சங்கீதம்தான் செவ்வியல் இசையாக கருதப்பட்டது. ஆபிரகாம் பண்டிதரைப் பற்றி முறையாக அறிமுகப்படுத்தி நா.மம்மது எழுதிய நூலைத்தான் இப்போது பரிந்துரைக்கிறேன்” என்ற கமல் ‘சத்தம் இல்லாத தீபாவளியைக் கொண்டாடுங்கள்’ என்று விடைபெற்றுச் சென்றார்.

ஆபிரகாம் பண்டிதர்

கமல் விடைபெற்றதுமே நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதான ஒரு பிரமை நமக்கு ஏற்படுகிறது. என்றாலும் சில நிமிடங்களுக்கு இழுத்துதான் முடிப்பார்கள். நிவாவும் அசலும் ரகசியம் பேசிக் கொள்வதை சப்-டைட்டில் போட்டால்தான் புரிந்து கொள்ள முடியும் போல. ‘தான் சொன்ன சில விஷயங்களை ஆயிஷா பயன்படுத்திக்கிட்டா’ என்பது நிவாவின் வருத்தம். “நாம பேசறதுல இவங்களுக்கு என்ன பிரச்சினை.. நாம கேம்லதானே இருக்கோம்.. ஓகே. மாற்றத்தைக் கொண்டு வருவோம்” என்பது போல் இருவரும் உறுதியெடுத்திருக்கிறார்கள். பார்க்கலாம்.

“ஹே.. கூகுள் குட்டப்பா. உனக்கு வேற வேலையே இல்லையா.. எங்களை வேவு பார்த்து வெளில போட்டுக் கொடுக்கறே?” என்று ஜாலியாக காமிராவை கோபித்துக் கொண்டிருந்தார் மைனா. “கமல்.. சார். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நோட் பண்றார்ல” என்று ராம் வியப்பதோடு எபிஸோட் நிறைந்தது.

வீட்டின் உறுப்பினர் எண்ணிக்கை பத்தொன்பதாக குறைந்திருக்கிறது. மீண்டும் திங்கள் அன்று நாமினேஷன் சடங்கு ஆரம்பிக்கும். தீபாவளியன்று ஏற்பட்ட வெடிச்சத்தத்தை விடவும் இனி பிக் பாஸ் வீட்டில் அதிகமான வெடிச்சத்தம் இருக்கும் என்கிற மகிழ்ச்சியோடு இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.