இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ஏற்கெனவே தொடரை வென்றுவிட்ட இந்திய அணி இந்தப் போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது.

டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆடும் கடைசி டி20 போட்டி இதுதான். அதில் இந்திய அணி தோற்றிருக்கிறது. இந்திய அணிக்கு இது ஒரு அவசியமான தோல்விதான்! ஏன் தெரியுமா?

Team India

விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற வீரர்களுக்கு ஓய்வளித்துவிட்டு சில மாற்றங்களுடன் இந்திய அணி நேற்று களமிறங்கியிருந்தது. இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப் போவதாக அறிவித்தார். டெத் ஓவர் பௌலிங் மோசமாக இருப்பதால் சேஸிங் செய்வதே சரியாக இருக்கும் என நினைத்திருக்கலாம் அல்லது டெத் ஓவர்களில் பௌலர்கள் கொஞ்சம் அழுத்தமின்றி வீசி ஃபார்மிற்கு வரட்டும் என நினைத்திருக்கலாம். ரோஹித்தின் எண்ணம் எதுவாக இருந்தாலும் அது நேற்று ஈடேறவில்லை என்பதுதான் சோகம்.

டெத் ஓவர் மட்டுமில்லை எந்த ஓவரிலும் இந்திய அணியின் பௌலர்களால் சிறப்பாக வீச முடியவில்லை. இந்திய பேட்டர்களால் வெற்றிகரமாக சேஸிங்கும் செய்ய முடியவில்லை.

தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்திருந்தது. டீகாக்கும் பவுமாவும் ஓப்பனர்களாக வந்தார்கள். சஹார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே டீகாக்கை ரன் அவுட் ஆக்கும் வாய்ப்பு உருவானது. டைரக்ட் ஹிட்டாக்க முயன்ற ஸ்ரேயாஸ் கோட்டைவிட்டிருந்தார். மிஸ் ஹிட்! அந்த முதல் பந்திலிருந்து கடைசி வரை இந்திய அணி நேற்று செய்த அத்தனையுமே மிஸ் ஹிட்தான்!

பவுமா வழக்கம்போல சீக்கிரமே அவுட்டாகி வெளியேறினாலும் டீகாக்கும் ரூஸோவும் நல்ல நிலையான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். கடந்த போட்டியை போன்றே கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் டீகாக் ஆடிய போதும் ரூஸோ இன்னொரு முனையில் மிகச்சிறப்பாகவே ஆடினார். அதிரடியான ஷாட்கள் மட்டுமின்றி ஃபீல்டர்களைச் சரியாக கவனித்து இடைவெளிகளை பார்த்து லாகவமான ஷாட்களையும் ஆடினார். இந்திய அணியின் எந்த பௌலர்களாலும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 43 பந்துகளில் 68 ரன்களை எடுத்த நிலையில் டீகாக் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

ரூஸோவின் அதிரடியில் எந்தக் குறையுமே இல்லை. அது ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஓவருக்கு ஒரு பவுண்டரி சிக்ஸரைப் பறக்கவிட்டுக் கொண்டே இருந்தார். 48 பந்துகளில் சதத்தை எட்டிவிட்டார்.

ரூஸோ

கடைசியில் மில்லர் உள்ளே வந்து ஹாட்ரிக் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தென்னாப்பிரிக்காவை பெரிய ஸ்கோரை நோக்கி நகர்த்தினார். இந்திய அணிக்கு டார்கெட் 228.

இலக்கை விரட்டிய இந்திய அணியால் 178 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 18.3 ஓவர்களிலேயே ஆல் அவுட்டும் ஆகியிருந்தனர். ரபாடா வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் ஸ்டம்புகளைப் பறிகொடுத்து டக் அவுட் ஆகினார். நம்பர் 3-ல் வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் பர்னலின் பந்துவீச்சில் lbw ஆகி சீக்கிரமே வெளியேறினார். ரோஹித்துடன் ஓப்பனிங் வந்த ரிஷப் பண்ட்டும் நம்பர் 4 க்கு ப்ரமோட் ஆகியிருந்த தினேஷ் கார்த்திக்குமே அதிரடியைத் தொடங்கினர். இங்கிடியின் ஒரே ஓவரில் 20 ரன்களை அடித்துவிட்டு அதே ஓவரில் விக்கெட்டையும் பறிகொடுத்து வெளியேறினார் பண்ட். வேகப்பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்து அரைசதத்தை நெருங்கிய தினேஷ் கார்த்திக் ஸ்பின்னரான கேசவ் மகாராஜவின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று ஸ்டம்பைப் பறிகொடுத்தார். உலகக்கோப்பைக்கான இந்திய ப்ளேயிங் லெவனில் ரிஷப் பண்ட்டா தினேஷ் கார்த்திக்கா எனும் கேள்வி வரும்போது சந்தேகமே இன்றி தன்னை டிக் அடிக்க வைப்பதற்கான வேலையை தினேஷ் கார்த்திக் சரியாகச் செய்துவிட்டார். இவர்கள் அவுட்டான பிறகு மற்ற வீரர்களும் அதிரடியாகவே ஆடினர். ஆனால், யாராலும் நிலைத்து நிற்க முடியவில்லை. பெரிய பார்ட்னஷிப்கள் அமையவில்லை.

18.3 ஓவர்களில் இந்திய அணி ஆல் அவுட் ஆனது. 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

IND v SA

டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆடும் கடைசி டி20 போட்டி இதுதான் எனும்போது இந்திய அணி இந்தப் போட்டியை வெல்வதே சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், ஒருவகையில் இந்தத் தோல்வியுமே இந்திய அணிக்கு அவசியமானதுதான். இந்திய அணியின் குறைகளும் பலவீனங்களும் முழுவதுமாக அம்பலமாகியிருக்கின்றன. டெத் ஓவர் பௌலர்களால் சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்த முடிவதில்லை. வெறுமென பேட்டிங் பலத்தை வைத்து மட்டுமே போட்டிகளை வெல்ல முடியாது. பேட்டர்களால் ஒவ்வொரு போட்டியிலுமே 200+ ரன்களை எடுக்க முடியாது. இந்த உண்மைகளுக்கெல்லாம் உலகக்கோப்பைக்கு முன்பாக முகம் கொடுத்து சரிசெய்ய இந்திய அணிக்கு இந்தத் தோல்வி அவசியமே.

T20 World Cup

சீக்கிரமே ஆஸ்திரேலியாவிற்கு பறக்கவிருக்கும் இந்திய அணி மேற்குறிப்பிட்ட மாற்று வழிகளையும் தீர்வையும் கண்டடையும் என நம்புவோம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.