மின்கட்டணம், வெள்ள நிவாரணம், அடிப்படை ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாகிஸ்தான் விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு சுமார் 25,000 விவசாயிகள் போராட்டம் நடத்திவருவதால், போக்குவரத்து முடங்கி தலைநகரே ஸ்தம்பித்து நிற்கிறது.

பாகிஸ்தான் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் முற்றுகைப் போராட்டம்:

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி முதலே, பாகிஸ்தான் விவசாயிகள் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக, பாகிஸ்தான் கிசான் இட்டேஹாத் (Pakistan Kissan Ittehad (PKI)) என்ற விவசாய அமைப்பின் தலைமையில் பல்வேறு விவசாய இயக்கங்கள், விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு அரசு பெரிய அளவில் செவிசாய்க்காததால், ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதன்பின்னர், செப்டம்பர் 30-ம் தேதி 40 பேருந்துகள், 29 கோஸ்டர் ரக பேருந்துகள், 11 விளையாட்டுப் பயன்பாட்டு வாகனங்கள், கார்கள், வேன்கள் என பல்வேறு வாகனங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திடீரென இஸ்லாமாபாத்தை நோக்கி விரைந்தனர். பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள் உட்பட சுமார் 2,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இஸ்லாமாபாத்திலுள்ள ஜின்னா அவென்யூவை முற்றுகையிட்டனர். அதிலிருந்து, தொடர்ந்து இஸ்லாமாபாத்திலேயே தங்கி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.

பாகிஸ்தான் விவசாயிகள் போராட்டம்

திணறும் அரசாங்கம், 144 தடை உத்தரவு :

தலைநகரையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் விவசாயிகள் போராட்டத்தால், இஸ்லாமாபாத்தை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை பட்டிருக்கிறது. மேலும், தலைநகரை நோக்கி நாட்டின் பிற விவசாயிகள் படையெடுத்து வருவதைத் தடுக்க, பாகிஸ்தான் காவல்துறையும் முக்கியமான சாலைகளில் கண்டெய்னர்கள் கொண்டு, சீல் வைத்து அடைத்து வருகிறது. குறிப்பாக, சிவப்பு மண்டலத்தின் அனைத்து நுழைவுப் புள்ளிகளுக்கும் சீல் வைத்திருக்கிறது. மார்கல்லா சாலையில் மட்டும் மக்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு அனுமதியை வழங்கியிருக்கிறது. இதனால், சாலைப்போக்குவரத்துக்கு வழியில்லாமல் தலைநகர் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது.

கண்டெய்ணர்கள் கொண்டு அடைக்கப்பட்டிருக்கும் சாலைகள்

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் விவசாயிகளின் தலைவர்கள், “அமைச்சர்களோ, அரசியல்வாதிகளோ போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர காவல்துறை அல்ல!” என்றுகூறி காவல்துறையினருடனான பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். அதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தைக் கைவிடவேண்டும் எனக்கேட்டு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கோரிக்கையை நிறைவேற்றும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் உறுதியுடன் தெரிவிக்க, அரசின் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்திருக்கிறது.

இந்த நிலையில், நாளுக்குநாள் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் இஸ்லாமாபாத் காவல்துறை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144-ஐ விதித்திருக்கிறது. அதேசமயம், “கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்தகட்டமாக நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை முன்னெடுப்போம்” என பாகிஸ்தான் கிசான் இட்டேஹாத் சேர்மன் காலித் பட் தெரிவித்திருக்கிறார்.

கண்டெய்ணர்கள் கொண்டு அடைக்கப்பட்டிருக்கும் சாலைகள்

பாகிஸ்தான் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?

*அனைத்து வரிகள் மற்றும் சீரமைப்புகளை ரத்து செய்ய வேண்டும்.

* உரங்களின் கறுப்புச் சந்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

* 400 சதவீதம் அதிகரித்துள்ள யூரியாவின் விலையைக் குறைக்க வேண்டும்.

* ஏற்கெனவே யூனிட் ஒன்றுக்கு ரூ.5.3 ஆக இருந்த ஆழ்குழாய் கிணறு மின்கட்டணத்தையே திரும்ப அமல்படுத்த வேண்டும்.

*கோதுமையின் விலை மூட்டைக்கு ரூ.2,400 ஆகவும், கரும்பு விலை ரூ.280 ஆகவும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

*கால்வாய்களில் உள்ள அடைப்பு மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.

*விவசாயத்திற்கும் ஒரு தொழில் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பாகிஸ்தான் அரசுக்கு போராடும் விவசாயிகள் வைத்திருக்கின்றனர். மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை தலைநகரை விட்டு வெளியேற மாட்டோம் என அரசுக்கு சவால் விடுத்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் விவசாயிகள்

மக்களின் அவலத்தை போக்க அரசு நிர்வாகம் தவறிவிட்டதாகவும், பணவீக்கத்தால் அவர்களை மேலும் துன்பத்தில் தள்ளுவதாகவும் விமர்சித்திருக்கும் எதிர்க்கட்சிகள், விவசாயிகள் போராட்டத்துக்கு தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் இந்திய அரசை விவசாயிகள் போராட்டம் திணறடித்ததுபோல, பாகிஸ்தான் அரசையும் அங்குள்ள விவசாயிகள் திணறடித்து வருகின்றனர்.

விவசாயிகள் வெல்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.