அ.தி.மு.கவில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ் பக்கம் சென்ற வைத்திலிங்கத்தின் சொந்த தொகுதியில் கூட்டம் நடத்துவதை தவிர்த்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ். வைத்திலிங்கம், சசிகலா சந்திப்புக்கு பிறகு வைத்திலிங்கத்தின் செல்வாக்கு அவர் தொகுதியில் உயர்ந்திருப்பதாலேயே கூட்டத்தை நடத்தவில்லை என வைத்தி ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

சசிகலா – வைத்திலிங்கம்

அ.தி.மு.க சார்பில் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூரில் வடக்கு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. தெற்கு மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை என இரண்டு தொகுதிகளில் மட்டும் கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

`ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ., அத்துடன் அவருடைய சொந்த தொகுதியும் கூட. இதனால் ஒரத்தநாட்டில் பெரிய அளவில் தொண்டர்களை திரட்டி கூட்டம் நடத்துவது சிரமம் என்பதால் அதனை தவிர்ப்பதற்காக இரண்டு சட்டமன்ற தொகுதிகளை ஒன்றாக உள்ளடக்கி தஞ்சாவூரில் மட்டும் கூட்டத்தை நடத்துகின்றனர் எடப்பாடி அணியினர்.

சோழமண்டல தளபதியான வைத்திலிங்கத்தின் கூடாரத்தை காலி செய்து விட்டோம் என பேசுபவர்கள் ஒரத்நாட்டிலும கூட்டத்தை நடத்த வேண்டியதுதானே…’ என வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து அ.தி.மு.க வட்டாரத்தை சேர்ந்த சிலரிடம் பேசினோம், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலைமை கழக பேச்சாளர்கள் தலைமையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்துவார்.

அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கூட்டத்தை நடத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் தெற்கில் மட்டும் நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் இரண்டு தொகுதிகளை சேர்த்து கூட்டத்தை நடத்துகின்றனர். முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைசெல்வன் இதில் கலந்து கொள்கின்றனர்.

தஞ்சாவூரில் ஆர்.காமராஜ் நடத்திய ஆர்ப்பாட்டம்

ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்த பிறகு டெல்டா அ.தி.மு.கவில் ஆளுமை மிக்கவராக அறியப்பட்ட வைத்திலிங்கம் ஓ.பி.எஸ் அணிக்கு சென்றார். வைத்திலிங்கத்தின் வலது கரமாக அறியப்பட்ட காந்தி உள்ளிட்ட பலரும் எடப்பாடி முகாமிற்கு தாவி வைத்திலிங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் வைத்திலிங்கமே பலருக்கு போன் செஞ்சு எங்க பக்கம் வந்துருங்கணு கேட்டும் யாரும் போகல.

இந்த நிலையிலும் அவரரோட சொந்த தொகுதியான ஒரத்தநாட்டில் அவருக்கான செல்வாக்கு குறையலை. அவர் கண் அசைச்சா அந்த காரியத்தை செய்வதற்கு இன்னும் பலர் தயாரா இருக்காங்க. விலைவாசி உயர்வு,மின் கட்டண உயர்வை என முன்னாள் அமைச்சர் ஆர்,காமராஜ் தலைமையில் தஞ்சாவூர் ரயிலடியில் இரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் எடப்பாடி தரப்பினர். ஆர்.காமராஜிக்கு சோழமண்டல தளபதி பட்டத்தையும் கொடுத்தனர்.தற்போது ஆர்,காமராஜ் டெல்டாவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் காமராஜ்

ஆர்.காமராஜ் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு பெரிய அளவில் திரண்ட கூட்டத்தை கண்டு வைத்திலிங்கம் தரப்பு மிரண்டு போனது. ஆனால் இதுல ஒன்றை ஒரத்தநாட்டில் நடத்தி அவங்க கெத்த காட்டியிருக்கலாம் என அப்போதே முணுமுணுனுத்தனர் அவரது ஆதரவாளர்கள். இன்னைக்கு தனியா இருக்குற மாதிரி தெரியும். ஆனால் கிளைமாக்ஸ்ல நான் தான் மாஸா ஜெயிப்பேனு சமீபத்தில் ஒரத்தநாட்டில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைத்திலிங்கம் பேசியிருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சசிகலா- வைத்திலிங்கம் சந்திப்பும் நடந்தது. இந்த சூழலில் ஒரத்தநாட்டில் கூட்டத்தை நடத்த ஆர்.காமராஜ் விரும்பாமல் தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது. தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தின் போது வைத்திலிங்கத்திற்கு எதிராக கர்ஜித்தார் ஆர்.காமராஜ் தற்போது அவருக்கு எதிராக அடக்கி வாசிக்க தொடங்கியிருக்கிறார். அதனால் தான் ஒரத்த நாட்டில் கூட்டத்தை நடத்தவில்லை” என்றனர்.

வைத்திலிங்கம்

இது குறித்து எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், “அண்ணா பிறந்தநாளில் ஒரத்தநாட்டில் உள்ள அண்ணா சிலைக்கு வைத்திலிங்கம் தரப்பினர் ஆளே இல்லாததால் மாலை அணிவிக்கவில்லை. நாங்க நூறு பேருக்கு மேல் பேரணியாக சென்று மாலை அணிவித்தோம். வைத்திலிங்கம் பொறுப்பாளராக இருக்கும் போதே நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே கூட்டமாக நடத்தியிருக்கிறார். மாவட்ட செயலாளர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே கூட்டமாக நடத்துகிறோமே தவிர வைத்திலிங்கத்தின் சொந்த தொகுதி என்பதால் இல்லை” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.