“நீங்க எதிர்பார்திங்க நான் சதம் அடிக்கல;நீங்க எதிர்ப்பார்க்கல நான் சதம் அடிச்சன்” என்பது போல யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அடிக்கப்பட்ட சமீபத்திய கோலியின் சதம் பலருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களுக்குக்கூட . 70வது சதத்திற்குப் பிறகு, இந்த இரண்டு வருட இடைவெளியில் எத்தனையோ விமர்சனங்களுக்கு ஆளானார் கோலி. இடையில் கேப்டன்சியில் இருந்து கோலி விலகினார்.  இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடர் ஆரம்பித்தது. இரண்டு அரை சதங்கள் அடித்தபோதும் இலங்கையுடன் மதுஷன்கா பந்தில் போல்டானவுடன் இடக்கை பந்துவீச்சாளருக்கு எதிராக கோலி நிருபிக்க வேண்டும் என்றனர். ஆப்கானிஸ்தானின் தற்போதைய சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பசல் பரூக்கை அவர் அடித்து ஆடிய விதம் அதற்கும் பதிலளித்தது.

கடைசியாக வங்கதேசத்திற்கு எதிராக சதமடித்த பிறகு 23 அரைசதங்களை அடித்துள்ளார் கோலி. அதில் சதமாக மாறியிருக்க வேண்டிய இன்னிங்ஸ் பற்றிய குட்டி ரீவைண்ட் இது. 

19 ஜனவரி 2020 எதிரணி : ஆஸ்திரேலியா

2020-ல் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைப்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி ஸ்மித்தின் சதத்தால் 286 ரன்கள் எடுத்தது. பின்னர் சேஸிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா சதமடிக்க, கோலியும் சதமடித்து அணியை வெற்றி பெற வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 89 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் போல்டானார். அவுட் ஆகாமல் தொடர்ந்து ஆடியிருந்தால் பெங்களூருவில் கோலி அடித்த முதல் சர்வதேச சதமாக இது அமைந்திருக்கும்

VIrat Kohli

29 நவம்பர் 2020 எதிரணி : ஆஸ்திரேலியா

இந்தியா ஆஸ்திரேலியாவிற்குப் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சிட்னியில் நடைப்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் சேஸிங்கில் அதே 89 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்தில் மீண்டும் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியிலும் ஸ்மித் சதமடித்திருந்தார். இந்தியா 390 ரன்களை சேஸ் செய்தது. விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டிருக்க ராகுல் – கோலி இணை சிறிது நம்பிக்கை அளித்தது. ஆனால், இந்திய அணி தோல்வியையே தழுவியது.

17 டிசம்பர் 2020 எதிரணி :ஆஸ்திரேலியா

இந்தியா முதல்முறையாக வெளிநாட்டு மண்ணில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆயத்தமானது. அதன்படி முதல் போட்டி, அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் கோலி 74 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். நல்ல பார்மில் தென்பட்ட கோலி, அன்று தனது 71வது சதத்தைப் பதிவு செய்வார் என்றே எதிர்ப்பார்த்தனர். பிங்க் பந்தில் அந்த 71வது சதம் வருமோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ரன் அவுட் ஆனார் கோலி. அடுத்த 3 போட்டிகளில் கோலி ஆடமாட்டார் என்பதால் இந்த ஆட்டத்தில் சதமடிக்காதது ஏமாற்றத்தையே அளித்தது. ரன் அவுட்டில் ஈடுபட்ட ரஹானேவின் மீது ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆனால், ரஹானேவே அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி தொடரை வென்று கொடுத்தது தனிக்கதை.

11 ஜனவரி 2021 எதிரணி : தென்னாப்பிரிக்கா

இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டனான கோலிக்கு கடைசி போட்டி டெஸ்ட் கேப்டனாக கேப் டவுனில் நடந்தது.  இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கோலி. இந்த போட்டியில் சதமடித்திருந்தால் பெர்ஃபெக்ட் தருணமாக இருந்திருக்கும்.

Kohli – Buttler

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் (பிப்ரவரி 5 – மார்ச் 28)

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்றது. இந்தத் தொடரில் மட்டும் கோலி 7 அரை சதங்களை அடித்தார். ஆனால், இதில் ஒன்று கூட சதமாக மாறவில்லை. இந்தத் தொடரில் மட்டும் கோலி மூன்று பார்மட்டுகளிலும் 532 ரன்களை எடுத்திருந்தார்.

டி20ஐ உலகக்கோப்பை தொடரில் கோலி இருக்கவேண்டுமா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. சில தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தகைய கேள்விகள் எழுந்தன. இப்போது அந்த எல்லா கேள்விகளுக்கும் ஏற்ற பதிலை கோலி அளித்துவிட்டார். குறைந்த ஸ்ட்ரைக் ரேட், லெக் ஸ்பின்னருக்கு எதிராக சிரமப்படுவார் என எண்ணற்ற விமர்சனங்களுக்கு கோலியின் அந்த சதம் தான் பதில். தனது முதல் டி20 ஐ சதத்தை அடித்து மூன்று பார்மட்டுகளிலும் சதமடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்தார்.

கோலி இப்போதுதான் அவர் செட் செய்த தரத்திற்கு ஏற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தன் கோட்டைக்கு திரும்பியுள்ளார். இனி அதிலிருந்து தன் ராஜாங்கத்தை தொடர்வார். விரைவில் 100 சதங்களை அடித்து சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்று தாராளமாக நம்பலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.