உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நகரில் உள்ள பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி சுவரில் அமைந்துள்ள “ஷ்ரிங்கார் கௌரி” ஆலயத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. ஹிந்து சமுதாயத்தின் பிரதிநிதிகளாக 5 பெண்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். மசூதி மேலாண்மை குழு சார்பாக இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டு பக்க முக்கிய வாதங்களையும் பரிசீலனை செய்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், 5 ஹிந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொள்ளலாம் எனத் தெரிவித்தது. திங்கள்கிழமை வழங்கிய தீர்ப்பில் மசூதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி ஏ கே விஷ்வேஷா தள்ளுபடி செய்தார். வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.

தற்போது “ஷ்ரிங்கார் கௌரி” ஆலயத்தில் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே வழிபாடு அனுமதிக்கப்படுகிறது. தினமும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஹிந்து பெண்கள் தாக்கல் செய்த மனு செப்டம்பர் 22 முதல் விசாரிக்கப்படும். 1993ஆம் வருடம் வரை தினமும் “ஷ்ரிங்கார் கௌரி” ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது எனவும், பின்னர் முலாயம் சிங் யாதவ் முதல்வரானபோது தடை விதிக்கப்பட்டது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

image

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள “ஷ்ரிங்கார் கௌரி” ஆலயம் மசூதி சுவரில் அமைந்துள்ளது என்பதால் மசூதி மேலாண்மை குழு மனுவை எதிர்த்து. 1991ஆம் வருட வழிப்பாட்டு தலங்கள் வழக்கு தீர்ப்புப்படி 5 ஹிந்து பெண்கள் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்படவேண்டும் என நீதிமன்றத்தில் வாதங்கள் வைக்கப்பட்டது. வக்ப் விதிகளின்படி கோரிக்கையை அனுமதிக்க முடியாது என நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் வழிபாடு தளத்தின் தன்மையை மாற்ற கோரிக்கை வைக்கப்படவில்லை எனவும் வழிபாடு உரிமை கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்கலாம் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாரணாசி மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என மசூதி தரப்பு தெரிவித்துள்ளது.

கங்கை கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஆக்கிரமித்து ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது என அந்த பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி, மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மசூதியில் சிவலிங்கம் உள்ளதாகவும், அதைச்சுற்றி தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளதாகவும் ஹிந்து தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அது சிவலிங்கம் அல்ல என்றும் நீரை பீச்சியடிக்கும் செயற்கை நீரூற்று எனவும் மசூதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் ஹிந்து மத அடையாளங்கள் உள்ளன எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திரிசூலம், தாமரைப்பூ உருவங்கள் உள்ளன என்றும் நந்தி சிலை பார்க்கும் திசையில் சிவலிங்கம் அமைந்துள்ளது சிவாலயத்தை உறுதிப்படுத்துவதாகவும் ஹிந்து தரப்பில் வலிறுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சுற்றுப்புறங்களில் உள்ள அக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

– கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.