குஜராத் மாநிலம் பா.ஜ.க-வின் கோட்டையாக இன்றுவரை விளங்கிவருகிறது. மோடி முதல்வராக இருந்தபோது, ‘குஜராத் மாடல்’ என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கினார். அதைவைத்து, பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக 2014-ல் முன்னிறுத்தப்பட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு குஜராத் மாநிலம் பூர்விகம் என்பதால், தங்களின் கோட்டையாக குஜராத் தொடர வேண்டும் என்பதில் பா.ஜ.க-வினர் உறுதியாக இருக்கிறார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால்

எனவே, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று குஜராத்தில் அதிகாரத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க பல வியூகங்களை வகுத்துவருகிறது. அங்கு, பிரதான எதிர்க்கட்சியாக இருந்துவந்த காங்கிரஸை எதிர்கொள்வது பா.ஜ.க-வுக்கு எளிதாக இருந்தது. ஆனால், இப்போது ஆம் ஆத்மியும் அங்கு களமிறங்கியிருக்கிறது. இது, பா.ஜ.க-வுக்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது.

இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளே டெல்லியிலும் பஞ்சாப்பிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மிக்கு உதவியது. குஜராத்திலும் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அள்ளிவீசுகிறது. வயதான பெண்களுக்கு ரூ.1,000 மாத உதவித்தொகை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3,000 மாத உதவித்தொகை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என பல வாக்குறுதிகளை குஜராத் வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கியிருக்கிறார்.

குஜராத்துக்கு இரண்டு நாள் பயணமாக கெஜ்ரிவால் சென்றபோது பேசிய சில கருத்துகள் பா.ஜ.க-வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. குஜராத்தில் பேசிய அவர், “குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் வாக்குறுதிகளால் பா.ஜ.க-வினர் பயனடைவார்கள். பா.ஜ.க தொண்டர்கள் பா.ஜ.க-விடமிருந்து ஊதியம் பெற்றுக்கொண்டு, ஆம் ஆத்மி கட்சிக்காக வேலை செய்யுங்கள். பல ஆண்டுகளாக பா.ஜ.க-வுக்காக நீங்கள் சேவை செய்துகொண்டிருக்கிறீர்கள். அந்த சேவைக்காக பா.ஜ.க உங்களுக்கு என்ன செய்திருக்கிறது? நீங்கள் பா.ஜ.க-விலேயே இருங்கள். ஆனால், எங்களுக்காக வேலை செய்யுங்கள்” என்று பேசினார்.

ராகுல் காந்தி

மேலும், “தரமான கல்வியையும் தரமான மருத்துவத்தையும் இலவச மின்சாரத்தையும் பா.ஜ.க-வினருக்கும் பா.ஜ.க-வினரின் குடும்பத்தினருக்கும் பா.ஜ.க வழங்கவில்லை. ஆனால், இவை அனைத்தையும் பா.ஜ.க-வினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆம் ஆத்மி வழஙகும்” என்றும் கெஜ்ரிவால் பேசினார்.

கெஜ்ரிவால் வழங்கிவரும் வாக்குறுதிகள் குஜராத்தில் பா.ஜ.க ஆதரவு வாக்காளர்கள் மத்தியில் தாக்கதை ஏற்படுத்தும் என்கிற அச்சம் பா.ஜ.க-விடம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆகவேதான், தேர்தல் இலவசங்களுக்கு எதிரான பிரசாரத்தை பிரதமர் மோடி முன்னெடுத்திருக்கிறார் என்றும், இலவச வாக்குறுதிகள் கூடாது என்று உச்ச நீதிமன்றம்வரை சென்றிருக்கிறார்கள் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கெஜ்ரிவாலைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் இப்போது ஏராளமான வாக்குறுதிகளை வாரிவழங்குகிறது. இது, பா.ஜ.க-வுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவைத்த அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவீசினார்.

குஜராத் பேரணியில் பிரதமர் மோடி

இலவச மின்சாரம், விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ரூ. 3 லட்சம் வரை கடன் தள்ளுபடி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு, 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் என்று பல வாக்குறுதிகளை ராகுல் காந்தி வழங்கினார். மேலும், 3,000 ஆங்கில வழி பள்ளிகள் திறக்கப்டும், பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும், பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளையும் ராகுல் காந்தி வழங்கினார்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பூத் அளவிலான தொண்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “விவசாயிகளின் குரலாக இருந்த சர்தார் வல்லபாய் படேல், விவசாயிகளின் நலன்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவருக்கு மிகப்பெரிய சிலையை வைத்த பா.ஜ.க., விவசாயிகளின் கோரிக்கையைப் புறக்கணித்ததன் மூலம் அவரை அவமதித்துவிட்டது” என்று குற்றம்சாட்டினார். குஜராத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தும் என்றும், 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

மேலும், “பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க அரசு, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, “குஜராத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.3 லட்சம் கடன் தள்ளுபடி செய்வோம். சத்தீஸ்கரிலும் மத்தியப் பிரதேசத்திலும் பஞ்சாப்பிலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதைப்போல, குஜராத்திலும் விவசாயிகளுக்கு கடன் வழங்குவோம். குஜராத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகளை பா.ஜ.க அரசு மூடிவிட்டது. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 3,000 ஆங்கிலப் பள்ளிக்கூடங்களைத் திறப்போம். வேலையில்லா திண்டாட்டத்துக்கு முடிவுகட்டுவது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியவை காங்கிரஸ் கட்சியின் முக்கிய இலக்கு” என்றார் ராகுல் காந்தி.

அரவிந்த் கெஜ்ரிவால்

சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் சொரதியாமீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய கெஜ்ரிவால், “இந்தத் தாக்குதல், பா.ஜ.க கடும் அதிருப்தியில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆம் ஆத்மியை ஆதரிப்பதற்காக குஜராத் மக்கள்மீது இன்னும் பல தாக்குதல்கள் நடத்தப்படும். இதுபோன்ற தாக்குதலால் ஆம் ஆத்மி கட்சியை அச்சுறுத்த முடியாது” என்றார்.

குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க-வின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க முன்னிறுத்திவரும் ‘குஜராத் மாடல்’ என்ற இமேஜை உடைப்பதற்கான முயற்சியில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் இறங்கியிருக்கின்றன. இவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் குஜராத் வாக்காளர்களிடம் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்துகொள்ள இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.