​தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவுக்குட்​​பட்ட மூலக்கடை அருகே உள்ள மந்திச்சுனை பகுதியைச் சேர்ந்த​வர் முத்துசரவணன். இவருக்கு கார்த்திகா​ என்ற மனைவியும், ராஜகணேஷ், ஹாசினி ராணி ஆகிய இரண்டு குழந்தைக​ளும்​​ இருக்கின்றனர். இதில் 8​ ​வயது சிறுமி ஹாசினி​ ​ராணி அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார்‌.

பூங்கா அமைக்க தோண்டப்பட்ட பள்ளம்

​இந்த நிலையில், சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள தன் தந்தை ரெங்கநாதனின் வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் கார்த்திகா வந்திருந்தார். நேற்று வழக்கம் போல அவர்களது வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஹாசினி ராணி நீண்ட நேரமாகியும் வராததால் அக்கம் பக்கத்தில் தேடியிருக்கின்றனர்.‌ அப்போது சமத்துவபுரம் பகுதியில் உள்ள பூங்காவில் பேரூராட்சி சார்பில் விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சுமார் 5​ ​அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரிலிருந்து சிறுமி மீட்கப்பட்டார்.

​இதையடுத்து அருகில் ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றபோது தண்ணீரில் மூழ்கியதில் சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.​ ​தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த​ போலீஸார் சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி ​பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ​அதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

சின்னமனூர் காவல் நிலையம்

​இது தொடர்பாக ஓடைப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ​அதே வேளையில் ​உத்தமபாளையம் வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ​

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், ​​குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் ​​தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் சூழல் நிலவுவதால், அதற்கான எச்சரிக்கை பலகைகள், அறிவிப்புகள் என ஏதும் வைக்கப்படாத​துதான் சிறுமி பலியானதற்கு காரணம் என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.