எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க டெல்லியில் முகாமிட்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரையும் செவ்வாய்க்கிழமை சந்தித்தார் நிதிஷ்குமார்.

கடந்த 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்க வேண்டும் என நிதிஷ்குமார் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் அவரே எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை எதிர்கொள்ள வேண்டும் என பிகார் அரசியல் வட்டாரங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ’நான் பிரதமர் வேட்பாளர் அல்ல’ என நிதிஷ்குமார் மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையிலும், அவர்தான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தகுதியானவர் என ராஷ்டிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

image

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த நிதிஷ்குமார், விரைவில் சரத் பவார் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஹரியானா மாநிலத்தின் மூத்த தலைவரான ஓம் பிரகாஷ் சவுத்தாலா உள்ளிட்டோரை விரைவில் நிதிஷ் குமார் சந்திப்பார் என அவரது ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

image

தற்போது பிகார் முதல்வராக உள்ள நிதிஷ் குமார் முன்பு மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் தற்போது நிதிஷ்குமாருக்கு ஆதரவளித்து வருகின்றனர். ஒருபுறம் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து கருத்து வேற்றுமைகள் நிலவி வருகின்றன. காங்கிரஸ் கட்சி ராகுல் காந்திதான் மீண்டும் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என விரும்புகிறது. ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்பாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

image

ஆம் ஆத்மி கட்சியோ அரவிந்த் கெஜ்ரிவால்தான் 2024 மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்க்கக்கூடிய பிரதமர் வேட்பாளர் என வலியுறுத்தி வருகிறது. இதனால்தான் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைகள் நடைபெறுகின்றன என மணீஷ் சிசோடியா வலியுறுத்தி வருகிறார். மம்தா பானர்ஜி மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வரும் நிலையில், கேரளா மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் சமீபத்தில் பிகார் தலைநகர் பாட்னா சென்று நிதிஷ்குமார் உடன் ஆலோசனை நடத்தினார். நிதிஷ் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என பிகார் மாநிலத்தில் கோரிக்கை நிலவி வரும் சூழலில், சந்திரசேகர ராவ் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

– கணபதி சுப்ரமணியம், டெல்லி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.