இந்தியாவின் மிகப்பெரிய கார் திருடனான `அனில் சௌஹன்’ என்பவர், டெல்லி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 52 வயதாகும் இவர், இதுவரை நாட்டின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 5,000 கார்களை திருடியிருக்கிறாரென சொல்லப்படுகிறது. தற்போது வசதியான வாழ்க்கையில் இருக்கும் இவருக்கு டெல்லி, மும்பை, சில வடகிழக்கு மாநிலங்களில் சொந்தமாக வீடுகள் உள்ளன.

காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், `கடந்த 27 ஆண்டுகளாக (1995 முதல்) இவர் திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதுவரை 5,000 கார்களை இவர் திருடியுள்ளார். மத்திய டெல்லி காவல்துறையின் சிறப்புப்பிரிவு அதிகாரி, இவரை தேஷ் பந்து சாலைக்கு அருகே கையும் களவுமாக பிடித்துளார். இவர் தற்போது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசத்திலிருந்து போதைப்பொருட்களை கைப்பற்றி, அவற்றை வடகிழக்கு மாநிலங்களுக்கு விற்று வந்திருக்கிறார்.

image

1995-க்கு முன்பு வரை, டெல்லியின் கான்பூரில் வசித்து வந்த இவர், அப்போது ஆட்டோ ரிக்‌ஷாக்கள் ஓட்டியுள்ளார். அதன்பின் வாகன திருட்டில் ஈடுபட்டு, கிடைக்கும் வாகனத்தை நேபால், ஜம்மு காஷ்மீர் தொடங்கி வட கிழக்கு மாநிலங்கள் வரை பல இடங்களுக்கு விற்பனை செய்திருக்கிறார். இதற்கிடையே திருட்டு செயல்பாடுகளின்போது அதற்கு தடையாக இருந்த சில டாக்ஸி டிரைவர்களை, இவர் கொலை செய்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இவருக்கு மூன்று மனைவிகளும், ஏழு குழந்தைகளும் உள்ளனர்’ என்றுள்ளனர்.

தவறான வழியில் சம்பாதித்த சொத்துகளை வைத்து அசாமில் சென்று அங்கு வாழ்வை தொடங்க நினைத்திருக்கிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அனில் சௌஹன், கைது செய்யப்படுவது முதல்முறையல்ல. ஏற்கெனவே பலமுறை கைதாகியிருக்கிறார். 2015-ல், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுடன் சேர்ந்து 2015-ல் கைதானார். பின் 2020-ல் தான் விடுதலையானார். தற்போது மீண்டும் கைதாகியுள்ளார். கைதின்போது இவரிடமிருந்து ஆறு பிஸ்டல்களும், ஏழு தோட்டாக்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

image

அனில் சௌஹன் மீது சுமார் 180 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இவர் அசாமில் அரசு ஒப்பந்தக்காரராக இருந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இதனால் அங்குள்ள உள்ளூர் அரசியல் கட்சிகளுடன் இவர் தொடர்பில் இப்போதும் இருந்துவருவதாக சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.