நீலகிரியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி அருகில் உள்ள சீகூர்ஹள்ளா ஆற்றை யானைக் கூட்டம் ஒன்று கடந்துள்ளது. அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி யானை ஆற்றுநீரில் அடித்து வரப்பட்டுள்ளது. இதைக் கண்ட ஊர் மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்த வனத்துறையினர் குட்டியை மீட்டனர். தாயைப் பிரிந்து தவித்து வந்த குட்டியை மீண்டும் கூட்டத்துடன் சேர்க்கும் சவாலானா பணியை வனத்துறையினர் கையிலெடுத்தனர்.

யானை குட்டி

வேட்டைத் தடுப்பு காவலர்கள், கால்நடை மருத்துவர், யானை பராமரிப்பாளர், வனத்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து 3 நாட்களாக இரவு பகலாக தாய் யானையை தேடி அலைந்தனர். ஒரு வழியாக நேற்று இரவு அந்த குட்டியை தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர். தாயையும் காட்டையும் இழந்து தவித்து வந்த யானை குட்டியை மீண்டும் தாயிடம் ஒப்படைத்து மறுவாழ்வு தந்த வனத்துறையினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சவாலான இந்த பணி குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள்,” பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த குட்டியை தாயுடன் சேர்த்தாக வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கினோம். நூற்றுக்கும் அதிகமான வனத்துறை பணியாளர்கள் இரவு பகலாக தாய் யானை இருக்கும் கூட்டத்தை தேடி அலைந்தோம். முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அடுத்தாக முதுமலை வெளிமண்டலப் பகுதியான காங்கிரஸ் மட்டம் பகுதியில் பாலூட்டும் பருவத்தில் இருந்த அந்த தாய் யானையை நேற்று மாலை கண்டறிந்தோம்.

யானை குட்டி

குட்டியின் உடலில் சேறு மற்றும் தாய் யானையின் சாணத்தைப்‌ பூசினோம். பின்னர் தாய் யானை அருகில் குட்டியை விட்டோம். ஆண் யானை ஒன்று எங்களை விரட்டியது. பின்னர் குட்டியை அழைத்துச் சென்றது. இப்படி, பல இடர்களைக் கடந்து தாய் யானையுடன் சேர்த்து வைத்தோம். தாய் யானையுடன் உலவும் குட்டியை இன்று காலை ட்ரோன் மூலம் கண்காணித்தோம். நல்ல முறையில் இருக்கிறது ” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.