திருவாரூர் மாவட்டம், கொராடாச்சேரி அருகே எண்கண் கிராமத்தில் ஏராளமான கதண்டுகள் படையெடுத்திருப்பதால், இந்தப் பகுதி மக்கள் கடந்த பத்து நாள்களாக மிகுந்த அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். கதண்டுகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 14 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்திருப்பது இந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இது குறித்து நம்மிடம் மிகுந்த பதற்றத்தோடு பேசிய இந்தப் பகுதி மக்கள், “திடீர்னு எங்கயிருந்துதான் இப்படி படையெடுத்து வந்துச்சோ தெரியலை… நூற்றுக்கணக்கான கதண்டுகள் எங்க ஊர் இலுப்பை தோப்புலயும் அய்யனார் கோயில் பக்கத்துல உள்ள மரங்கள்லயும் கூடு கட்டி தங்கியிருக்கு. மனிதர்கள் நடமாட்டத்தைப் பார்த்துட்டா, கூட்டமா சூழ்ந்து வந்து தாக்க ஆரம்பிச்சிடுது. கதண்டுகள் கடிச்சதுனால, உடம்புல விஷம் பரவி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இதுவரைக்கும் பதினாலு பேர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுக்கிட்டு இருக்கு. எங்க ஊர் மக்கள் பாதிக்கப்பட்டதோட மட்டுமல்லாம, எங்க கிராமத்துக்கு பக்கத்துல உள்ள பூங்காவூர் மக்களும் பாதிக்கப்பட்டுருக்காங்க. அந்த ஊர் மக்கள் எந்த ஒரு பொருள் வாங்கணும்னாலும்… வெளியூர்களுக்கு போகணும்னாலும் எண்கண் தான் வந்தாகணும்.

திருவாரூர்

நாலு நாள்களுக்கு முன்னாடி, பூங்காவூர்லயிருந்து எண்கண் வந்துக்கிட்டிருந்த கிருஷணமூர்த்திங்கறவரை கதண்டுகள் கடிச்சி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திடுச்சுங்க. உயிருக்கு ஆபத்தான நிலையில திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சேர்த்தோம். நாலு நாள்களா சிகிச்சையில இருந்த கிருஷ்ணமூர்த்தி இன்னைக்கு இறந்துப் போயிட்டார்.

கதண்டுகளுக்கு பயந்து வெளியில நடமாடவே முடியல. எப்ப என்ன நடக்குமோனு பயந்து கிடக்குறோம். தீயணைப்புத் துறைக்குத் தகவல் சொன்னோம். இரண்டு இடங்கள்ல கதண்டுகள் கூடு கட்டியிருக்குறத அவங்களே எங்க ஊருக்கு நேரா வந்து பார்த்தாங்க. பெயரளவுக்கு ஒரு சில கதண்டுகளை மட்டும்தான் அழிச்சாங்க. அஞ்சாயிரம் ரூபாய் பணம் கொடுத்தாதான் முழுமையா எல்லாத்தையும் அழிக்க முடியும்னு சொல்லிட்டு போயிட்டாங்க. இது எங்களோட உயிர் பிரச்னை. மாவட்ட நிர்வாகம் உடனடியா நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார்கள்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காய்த்ரி கிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, போனில் தொடர்பு கொள்ள முயன்றோம். நமது அழைப்பை அவர் ஏற்காததால் எண்கண், பூங்காவூர் கதறல்கள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பினோம். இந்தப் பகுதி மக்களை பாதுகாக்க போர்கால நடவடிக்கை மிகவும் அவசியம். இதில் அலட்சியம் காட்டுவது கதண்டுகளின் விஷத்தைவிடவும் ஆபத்தானது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.