கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனியாமூர் பள்ளியில் ஜூலை 13ம் தேதி மர்ம மரணம் அடைந்த மாணவி குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்ன சேலம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை ஜூலை 17-ஆம் தேதி கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

image

இந்நிலையில், கைதான 5 பேரும் ஜாமீன் கோரிய மனுக்கள் விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மாணவியின் வலது பக்கத்தில் மட்டுமே காயம் உள்ளதாக முதல் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவதாவும் நன்றாக படிக்குமாறு மட்டுமே ஆசிரியர்கள் கூறியதாகவும், மரணத்தில் எந்த பங்கும் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறை தரப்பில் பள்ளியில் விடுதியை அனுமதியின்றி நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், நன்றாக படிக்குமாறு அவர்கள் அழுத்தம் கொடுத்ததாகக் கூறி, உயிரிழந்த மாணவி எழுதியதாக கூறப்படும் தற்கொலை குறித்த கடிதம் வாசித்து காண்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முகாந்திரம் இருப்பதாலேயே ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் மரணம் பள்ளி வளாகத்தில் நடந்துள்ளதால், தீவிரமான வழக்கு என்றும், அதனால் மனுதாரர்கள் தான் பொறுப்பு என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் அந்தப் பள்ளியில் ஏற்கெனவே இரண்டு முறை நிகழ்ந்துள்ளன என்றும், கொலை வழக்கு ஒன்றில் தாளாளர் ரவிக்குமார் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, தீவிரமானது என்றால் ஏன் உடனடியாக கைது செய்யவில்லை. பெற்றோருக்கு உள்ள சந்தேகப்படி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் உள்ளதா என காவல்துறை தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பு முதல் மற்றும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் தரப்பில் குறுக்கிட்டு, பள்ளி தாளாளரின் மகன்களிடம் இன்று வரை விசாரணை நடத்தப்படவில்லை. இரு பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்கும் வேறுபாடுகள் உள்ளது. உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. சில இடங்களில் கைரேகைகள் பதிவாகி உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் தற்கொலை கடிதம் போலியானது.  இந்த மரணத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆய்வாளர் ஆகியோரும் உடந்தையாக உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. சிபிசிஐடி தரப்பில் குறுக்கிட்டு மாணவியின் மரணம் கொலையா என தெரிந்தால், நிச்சயமாக கொலை வழக்குப் பதிவு செய்யப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு, விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அப்போது சிபிசிஐடி தரப்பில் குறுக்கிட்டு, கடுமையான நிபந்தனைகள் விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.