தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையின் சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020-ம் ஆண்டு மத்திய நிதி பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல்துறையின் திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வுப் பணிகள் கடந்த 2021 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வுப் பணியில் கிடைக்கும் பொருள்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

முதுமக்கள் தாழியின் மூடியில் பதியப்பட்ட பனையோலைப் பாயின் அச்சு

இந்த அகழாய்வுப் பணிகள், ஆதிச்சநல்லூர் பரம்புப் பகுதியில் மூன்று இடங்களில் நடந்துவருகின்றன. இதுவரையிலும் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சங்க கால வாழ்விடப்பகுதிகள், அம்புகள், வாள், ஈட்டி, சூலம், தொங்கவிட்டான், தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் உள்ளிட்ட பல பொருள்கள் கிடைத்துள்ளன. 1902-ம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த பகுதியில் தற்போது நடந்துவரும் அகழாய்வுப் பணியில் வித்தியாசமான முதுமக்கள் தாழியின் மூடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முதுமக்கள் தாழிகளின் மூடிகளும் கூம்பு வடிவில்தான் இங்கே காணப்படும். ஆனால், தற்போது கிடைத்த ஒரு முதுமக்கள் தாழியின் மூடி மட்டும் தட்டை வடிவில் உள்ளது. அந்தத் தட்டை வடிவிலான பகுதியில் பனையோலைப் பாய் பதிந்த அச்சு காணப்படுகிறது. இதுகுறித்துத் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்கள்.

முதுமக்கள் தாழியின் மூடி

இதை வைத்துப் பார்க்கும்போது 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னோர்கள் பனை மற்றும் பனை சார்ந்த பொருள்களைப் பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. ஆதிச்சநல்லூர் பரம்பைச் சுற்றி ஏராளமான பனை மரங்கள் உள்ளன. ஆதிச்சநல்லூரில் தொடர்ந்து பழைமையான நாகரித்தைச் சார்ந்த பொருள்கள் கிடைத்துவருவதால் தொல்லியல் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.