வேலூர் மாவட்டம், பாலாற்றங்கரை அருகே உள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் ஸ்ரீகாந்த். இவர் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியிருக்கும் காடுகளை மீட்டெடுக்கும் முயற்சியை செய்துவருகிறார். கிட்டத்திட்ட 7000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்து வருகிறார். அதற்காக இவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல என்கிறார்.

இவருடைய மகத்தான பணியை பாராட்டிய தமிழக அரசு, இந்த ஆண்டு விடுதலை திருநாள் விழாவில் மாநில இளைஞர் விருதினை வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.

ஸ்ரீகாந்த்

இதுகுறித்து ஸ்ரீகாந்திடம் பேசினோம். அப்போது அவர் பேசியதாவது, “நான் சென்னையில் பிரபல தனியார் சினிமா தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். எதிர்ப்பாராதவிதமாக என் அண்ணன் உயிரிழந்து விட்டார். இதனால் நான் என் சொந்த ஊரான வேலூருக்கு வந்து விட்டேன். தம்பியின் மரணம் என்னை வெகுவாக பாதித்தது. என் சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தேன். அப்போதுதான் மரம் வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டது..

மரம் வளர்க்க தொடங்கி முதல்கட்டமாக 1000 மரக்கன்றுகளை நட்டு வைத்தேன். இதில் சுமார் 800 மரக்கன்றுகள் தழைக்கதத் துவங்கின. இதுதான் முதல் முயற்சி. இதை பார்த்த உள்ளூர் அதிகாரிகள் பாராட்டி விருது வழங்கினர். விருது பெற்றவுடன் மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன்.

25 ஏக்கருக்கு மேல் இங்கு இருக்கும் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீண் செய்கிறார்கள். இதை மீட்டெடுக்க வேண்டும் என்றேன். முதலில் யோசித்த ஆட்சியர், அரசியல் தலையீடும் பொதுமக்கள் தலையீடும் இருப்பதால் 2 ஏக்கர் நிலத்தில் 500 மரக்கன்றுகளை வளர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்.

மரக்கன்று நடும் பணி

6 மாதங்களில் 500 மரக்கன்றுகளையும் நன்றாக வளர்த்துக் காட்டினேன். அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. பிறகு மீண்டும் ஆட்சியரிடம் நிலம் கேட்டேன் அப்போது அவர் 7 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். இப்போதுதான் உள்ளூர் மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது.

ஆற்றுப்படுகை என்பதால் மணலுக்கு தேவை அதிகம். அதனால் மிரட்டல்கள், கட்டப்பஞ்சாயத்து போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டன. காவல்துறையில் என் மீது புகார் கொடுத்தனர். சிலர் பணம் கொடுத்து தடுக்க முன்வந்தனர்.

காடுகள் வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக இருந்த நான் ஆட்சியர் உதவியுடன் சவால்களை சந்தித்தேன். படிப்படியாக முன்னேறி 25 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டு மரம் வளர்க்க துவங்கினேன். எனது சொந்த முயற்சியில் மூவாயிரம் மரங்களும் அரசின் சார்பில் வழங்கப்பட்ட 3400 மரங்களும் இருந்தன. இதனை பராமரிக்க அரசின் சார்பில் நீர்பாசன வசதிகள் செய்துதரப்பட்டது. மேலும் எனது வேண்டுகோளுக்கிணங்க நூறுநாள் வேலைதிட்டத்தில் பணியாற்றும் 25 பணியாளர்களையும் இந்த வேலையில் ஈடுபடுத்தினர். இந்த உதவியால் ஒரே ஆண்டில் 10 அடிவரை மரம் வளர்த்து காட்டினேன்.

மரக்கன்றுகள்

இதனிடையே ஆட்சியர் மாற்றப்பட்டு புது ஆட்சியர் நியமிக்கப்பட்டார். அந்த சமயம் அதிகமழைப் பொழிவால் வெள்ளம் ஏற்பட்டது. மரங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பழைய தரைப்பாலம் உடைந்தது. இதனை பார்வையிட வந்த புதிய ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இவர் 25 ஏக்கர் நிலத்தை அபகரித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினர். இதனால் ஆட்சியர் இதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார்.

இதனால் தலைமை செயலரை பார்க்க தலைமை செயலகம்வரை சென்றேன். அங்கு என்னை தடுத்து நிறுத்திய போதும் மனுவை அளித்து விட்டு வந்தேன். பிறகு ஆட்சியரின் ஒப்புதலோடு தொடர்ந்து மரங்களை செவ்வனே பராமரித்து வருகிறேன். இந்த மரம் வளர்ப்பு பணிகளுக்காக அரசே இன்று விருது கொடுத்து கௌரவித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற தரிசு நிலங்களிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் மரம் வளர்ப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

ஶ்ரீகாந்த்துக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.