தமிழ்நாட்டில் மட்டும் 3,000-க்கும் அதிகமான தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளன. இந்த ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பண்டிகை நாள்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன என்ற குற்றச்சட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதிக விலைக்குக் கட்டணத்தை உயர்த்தும் பேருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், அந்த அறிவிப்புகளை எல்லாம் எந்தப் பேருந்து நிறுவனமும் பொருட்படுத்துவதே கிடையாது என்பதுதான் உண்மை. பண்டிகை நாள்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாள்களாக இருந்தாலும், வார இறுதி நாள்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர்கதையாகவே இருக்கிறது.

இது குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை நேரடியாகவும், சமூகவலைத்தளங்கள் மூலகமாக எதிர்ப்பு தெரிவித்தாலும் அன்றைய நாளோடு மட்டும் பேசு பொருளாகி, அடுத்த கட்டண உயர்வின்போதுதன் மீண்டும் விவாதமாகிறது. இதற்கு ஒரு நிரந்திர தீர்வு வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. காரணம் பலரின் மாத வருமானம் வாடகை உள்பட இதர செலவுகளோடு, இரு முறை தங்களது சொந்த ஊருக்கு சென்று வந்தாலே முடிந்துவிடுகிறது என்கிற புலம்பல்கள்தான் அதிகமாக இருக்கிறது.

ஆம்னி பஸ்

அந்த வகையில், சமீபத்தில் சனி, ஞாயிறு வார விடுமுறையோடு சுதந்திர தின விடுமுறையும் இணைந்து வந்ததால் பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்கள். அவ்வாறாக பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவோரின் முதல் தேர்வு ரயில். பேருந்து கட்டணத்தை ஒப்பிடும்போது ரயிலில் பயணக் கட்டணமும் குறைவு, நெடுந்தூர பயணத்துத்து வசதியாக இருக்கும் என்பதால் பயணிகளின் முதல் விருப்பமாக ரயில் இருக்கிறது. ரயிலில் டிக்கெட் கிடைக்காதவர்களின் அடுத்த தேர்வு அரசுப் பேருந்துகள். தனியார் ஆம்னி பேருந்துகளை ஒப்பிடும்போது கட்டணம் குறைவு என்பதால் இந்த ஆப்ஷன். அரசுப் பேருந்துகளிலும் டிக்கெட் கிடைக்காதவர்கள் மற்றும் கடைசி நேரத்தில் பயணத்தை முடிவு செய்பவர்களின் ஒரே வாய்ப்பு தனியார் ஆம்னி பேருந்துகள்தான். எப்படியாவது ஊருக்கு போய் சேர வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் பல்லாயிரகணககான பயணிகளிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் பகல், இரவு என்று பாராமல் கட்டணக் கொள்ளை அடித்து வருவது ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது. அதிலும் தொடர் விடுமுறை நாள்களில் வழக்கமாக இருக்கும் கட்டணங்களைவிட மூன்று மடங்கு உயர்வாக இருப்பதுதான் கொடுமை.

ஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளை ஒழிவது எப்போது?

எனவே. “தீபாவளி, பொங்கல் பண்டிகை நாள்களை போலவே சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி போன்ற தொடர் விடுமுறை நாள்களிலும் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் அரசு சிறப்பு பேருந்துகள் கட்டாயம் இயக்கப்பட வேண்டும். அத்துடன் வார நாள்கள், வார இறுதி நாள்கள், தொடர் விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்கள் என எல்லா நாள்களிலும் ஆம்னி பேருந்துகள் வசூலிக்க வேண்டிய பயணக் கட்டணத்தையும் அரசு நிர்ணயிக்க வேண்டும். இதன் பயனாக ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அடிக்கும் கட்டண கொள்ளை தவிர்க்கப்படும் என்பதுடன், நஷ்டத்தில் இயங்கிவரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை அதில் இருந்து மீட்கவும் வழி பிறக்கும்” என்கிறார்கள் பாதிக்கப்படும் பொதுமக்கள்.

இது போன்ற புகார்கள் அதிக அளவில் வந்ததை அடுத்து, ஆகஸ்ட் 12-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “இது குறித்து குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டணக் கொள்ளை நடைபெற்றிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். அதன்படி போக்குவரத்து இணை ஆணயர், துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு சென்னையில் பல இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு சில பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை பெற்று மீண்டும் அதே பயனிகளிடம் ஒப்படைக்கபாட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டவர்கள், “ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் குறித்து மக்கள் தங்களது எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வகையில் ஆகஸ்ட் 15 சென்னைக்கு புறப்படுவதற்காக டிக்கெட் புக் செய்தனர். ஆனால், அப்போதும் ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை ஓய்ந்தபாடில்லை. சாதாரண நாள்களைவிட மூன்று மடங்கு உயர்ந்திருப்பது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அரசு பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டதைத் தெரிந்து கொண்டே இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்து நிறுவனக்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் மொஹமத் அப்சல், “பூக்கடை, காய்கறி கடை, ஏர்லைன்ஸ், ஹோட்டல் புக்கிங்… என இதையெல்லாம் வரைமுறைபடுத்திட்டு வர சொல்லுங்க பஸ்ஸுக்கும் பண்ணிடலாம். இதில் யாரை கட்டுப்படுத்த முடியும். பஸ் புக்கிங்கில் இடைதரகர்களை வைக்காதீர்கள் என்று காவல்துறை, ஆர்.டி.ஓ. கமிஷ்னர் என பல முறை புகார் அளித்திருக்கிறோம். ஆனால், அந்த இடைத்தரகர்களை வாழ வைப்பதன் மூலம் தங்களுக்கும் ஆதாயம் இருக்கும் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இது அரசுக்கு நல்லாவே தெரியும்.

‘ஒரு சில தனியார் செயலிகள்’ மூலம், ‘ஆன்லைனில் அதிகமான கட்டணத்தை அனுமதிக்கிறார்கள்’ என்று காவல் நிலையத்தில் புகார் அளித்து, காவல் நிலையத்தில் உட்காரவும் வைத்தோம். ஆனால், ‘காம்படீசன் கண்ட்ரோல் ஆஃப் இந்தியா’ பிரகரம், எங்களால் விலையை கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லி வழக்கறிஞர்கள் வந்து அழைத்து சென்றுவிட்டார்கள்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர்
மொஹமத் அப்சல்

இங்கே பஸ்காரங்க எல்லாம் வருஷம் பூரா உழைச்சு உழைச்சு நொந்து போய் தொழில் பண்ணிட்டு இருக்கிறோம். ஏதோ ஒரு சிலர் அதிக விலைக்கு டிக்கெட் போட்டு, எல்லோரையும் நோகடிக்கிறாங்க. விலை ஏற்றியவர்கள் யார் என்பதும், எந்த நிறுவனம், எத்தனை மணிக்கு வண்டி எடுக்குறாங்க, நம்பர் என்ன? என எல்லா விவரமும் முழுமையாக தெரியும். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஆம்னி சங்கத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லையே? கூடவே நின்று பிடித்தும் கொடுக்கிறோம். அப்படி இருந்தும் அரசுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே!

இன்று சில கட்சிகளின் கட்டுப்பாட்டில்தான் பல இடைத்தரகர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை அரசும் கண்டும் காணாமல் இருக்கிறது. எனவே மோசடி செய்பவர்களை புறக்கணித்து மக்கள்தான் இதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.

எஸ்.எஸ்.சிவசங்கர்

இவ்வாறாக தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் குறித்தான புகார்கள் எழுந்த நிலையில், துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்த போது, “ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக 953 பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கான அபராத தொகையும, வரியும் சேர்த்து ரூ.11,04,000 விதிக்கப்பட்டிருக்கிறது. அதிக கட்டணம் வசூல் செய்ததாக 97 பேர் புகார் அளித்த நிலையில் அவர்களுக்கு ரூ.68,800 திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சினை தொடர்வதால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளை எந்த வரையரைக்குள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்தும், ஆம்னி பேருந்து சங்கத்தினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.