முடிந்துவிட்டது என்று நினைத்த பிரச்சனை, மீண்டும் தொடர்ந்தால் என்ன ஆகும் என்பதுதான், ஜீவி இரண்டாம் பாகத்தின் ஒன்லைன். நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஜீவி முதல் பாகத்தின் கதை விட்ட இடத்திலிருந்து துவங்குகிறது. ஜீவி கதை முடிந்து ஒரு வருடத்திற்கு பிறகு சரவணன் (வெற்றி) திருமணம் முடிந்திருக்கிறது. ஷேர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவர், கார் வங்கி சவாரிக்கு செல்கிறார், நண்பன் மணிக்கு (கருணாகரன்) டீக்கடை வைத்துக் கொடுக்கிறார். பார்வை சவால் கொண்ட மனைவி கவிதாவுக்கு (அஸ்வினி) ஆப்ரேஷனுக்கான முயற்சிகளில் இருக்கிறார். இப்படி வாழ்க்கை எந்த சிக்கலும் இல்லாமல் அழகாக செல்லும் போது, ஒரு சம்பவத்தால் இது எல்லாம் குலைந்து போகிறது.

image

வேலை, குடும்ப செலவு என அனைத்திலும் சிக்கல். மறுபடி கொள்ளையடிக்கும் முடிவுக்கு வருகிறார் வெற்றி. அதன் பிறகு அவர் வாழ்வில் வரும் சிக்கல்கள் என்ன? அது தொடர்பில் விதிப்படி என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது? இதை எப்படி வெற்றி சரி செய்கிறார்? என்பதுதான் மீதிக்கதை. முதல் பாகத்தின் சுவாரஸ்யத்தை இதிலும் கொண்டுவர முயன்றிருக்கிறார் இயக்குநர் கோபிநாத். அதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார். படத்தின் பலத்தில் ஒன்று எளிமையான, அதே சமயம் சிக்கலான திருப்பங்கள் உள்ள ஒரு கதை. இவை எப்படித் தீரும் என்கிற கதை நகர்வு படத்தின் பரபரப்பை தக்க வைக்கிறது.

நடிகர்களாக வெற்றி ஜீவியின் முதல் பாகத்தில் மினிமலான பர்ஃபாமன்ஸ் கொடுத்தது போன்றே இதுலும் வருகிறார். கருணாகரன், ரோகினி, மைம் கோபி, அஸ்வினி போன்றோர் கதைக்கு தேவையான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். சிறிது நேரம் வந்தாலும் முபாஷீர் கவனிக்க வைக்கிறார்.

image

படத்தின் பெரிய குறையே இதன் முதல் பாகத்தின் சுவாரஸ்யங்களை நீட்டிக்க மட்டுமே முயன்றிருப்பது. புதிதாக எந்த சவாலும், சிக்கலும் நாயகனுக்கு இல்லை. படம் முழுக்க தன்னுடைய சிக்கலை வெற்றி யாரிடமாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார். அல்லது தொடர்பியல், முக்கோண விதி, மையப்புள்ளி என தியரிக்களை அடுக்குகிறார். ஆனால் அது கதையை நகர்த்த பயன்படவே இல்லை. ஏற்கெனவே அவர் வாழ்வில் இப்படியான சிக்கல் வந்ததைத் தான் ஜீவி’யில் பார்த்தோம்.

இரண்டாம் பாகத்திலும் அதே சிக்கல், ஒரே பிரச்சனை வெற்றி வாழ்விலும், இன்னொருவரின் குடும்பத்தின் கடந்த காலத்திலும் இருப்பதைப் பற்றி மட்டுமே காட்ட முயல்கிறது. அதனால் படம் சுவாரஸ்யம் ஆகிறதா என்றால், இல்லை. படத்தின் சில காட்சிகள் தேவையற்றதாகவே தோன்றியது. உதாரணமாக மனநல மருத்துவரை வெற்றி சந்திக்கும் காட்சியை சொல்லலாம். ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை வெற்றி அவரிடமும் ஒருமுறை சொல்கிறார் என்பதைத் தவிர கதைக்கு அது எந்த விதத்திலும் முக்கியம் எனத் தெரியவில்லை.

image

இதெல்லாம் எதனால் நடக்கிறது என்று வெற்றியும் கருணாகரனும் குழம்புவதும் ஏற்கும் படியாக இல்லை. முதல் பாகத்தில் நடக்கும் ஒரு திருட்டு, அதன் தொடர்ச்சியாக வெற்றி வாழ்வில் தொடங்கும் பிரச்சனை என்பதுதான் களமே. அதே போன்று ஒரு திருட்டு தான் இந்தப் பாகத்திலும் பிரச்சனையை துவங்கி வைக்கிறது என அவர்கள் முன் விடை மிகத் தெளிவாக இருக்கிறது. ஆனால் நாம் என்ன தவறு செய்தோம், நமக்கு ஏன் இப்படி நடக்கிறது? என அவர்கள் குழம்புவது ஏன் எனப் புரியவில்லை. போலீஸ் அதிகாரியாக வரும் ஜவஹரின் நடிப்பும் சரி, அந்தக் கதாபாத்திரம் படத்தில் எழுதப்பட்டிருக்கும் விதமும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. வருகிறார், சிகரெட் புகைக்கிறார், நடக்கிறார் என மிக செயற்கையான ஒரு பாத்திரதிரம்.

பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு, பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் படத்திற்கு பெரிய வலு சேர்த்திருக்கிறது. படம் அமெச்சூர் தனமாக இல்லாமல், தரமாக தெரிவதற்கு இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. சுந்தரமூர்த்தியின் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் பின்னணி இசை மூலம் த்ரில் உணர்வைத் கூட்டியிருக்கிறார்.

image

வெறுமனே முதல் பாகத்தின் நீட்சியாக இல்லாமல், இன்னும் புதுமையான, சுவராஸ்யமான கதையமைப்பு இருந்திருந்தால், முதல் பாகத்தைப் போலவே வித்யாசமான படமாக ஈர்த்திருக்கும் இந்த ஜீவி 2.

-ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.