திருச்சிற்றம்பலம் என்ற இளைஞனின் வாழ்வில் இருக்கும் சிக்கலும், அது எப்படி சரியாகிறது என்பதுமே படத்தின் ஒன்லைன்.

ஒரே வீட்டில் தாத்தா பாரதிராஜா, அப்பா பிரகாஷ்ராஜ், பேரன் தனுஷ் மூவரும் வசிக்கிறார்கள். உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை, நித்யா மேனனின் நட்பு, பீர் ஷேர் செய்யும் தாத்தா என சுழல்கிறது தனுஷின் வாழ்க்கை. ஆனால் பத்து வருடம் முன்பு நடந்த இழப்புக்கு தந்தை பிரகாஷ்ராஜ் தான் காரணம் என நம்புகிறார் தனுஷ். அதனால் ஒரே வீட்டில் வசித்தாலும் தனுஷும் – பிரகாஷ்ராஜும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள். இதே நேரத்தில் தனுஷ் தன்னுடைய காதல் வாழ்விலும் தடுமாறுகிறார். பிரகாஷ்ராஜ் – தன்ஷ் இடையேயான பிரச்சனை என்ன? தனுஷின் காதல் வாழ்வில் என்ன பிரச்சனை? இந்த இரண்டு பிரச்சனைகளும் எப்படி சரியாகிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

image

படத்தின் முதல் ப்ளஸ் நடிகர்கள் தேர்வும் அவர்களது நடிப்பும். திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் தனுஷ் கடந்த கால விபத்தால் பிரச்சனைகள் கண்டு விலகுவது, அப்பா பிரகாஷ்ராஜிடம் காட்டும் இடைவெளி, பிடித்த பெண்ணிடம் ப்ரப்போஸ் செய்யும் போது காட்டும் தயக்கம் என எல்லாவற்றையும் நிறைவாக செய்கிறார். தனுஷுக்கு அடுத்தபடியாக அல்லது அவரை விட ஒருபடி மேல் நம்மைக் கவர்வது சீனியர் திருச்சிற்றம்பலமாக வரும் பாரதிராஜா. ப்ரோ டாடி பார்த்திருப்போம், ஒரு ப்ரோ தாத்தாவாக வந்து கலக்குகிறார். பியருக்கு சியர்ஸ் அடிப்பது, ரிலேஷன்ஷிப் அட்வைஸ் தருவது, வீட்டுக்குள் நடக்கும் சண்டையை சமாதானம் செய்வது என எமோஷன் + ஹூமர் ரோலில் அட்டகாசம். படத்தில் அவரது பல ஒன்லன்களுக்கு அப்ளாஸ் பறக்கிறது.

ஒரு வித குற்றவுணர்ச்சியோடு வரும் பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ். தனுஷை அடித்துவிட்டு ஃபீல் பண்ணுவது, மன்னிப்பு கேட்பது என வழக்கம் போல் தன் நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். நித்யாமேனன் பாத்திரம் எழுதப்பட்ட விதம் முழுமையாக இல்லை என்றாலும், திரையில் சோபனாவாக நித்யா மேனன் நிறைவாக இருக்கிறார். இதுபோக கேமியோ ரோலில் வரும் ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், முனீஸ்காந்த் போன்றோர் படத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

image

படத்தின் மைனஸாக, கதையை சொல்லலாம். இரண்டு பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. தனுஷூக்கு ஏற்படும் இழப்பு மற்றும் அவரது காதல் வாழ்க்கை. இதில் அவரது இழப்பு பற்றி சொல்லப்பட்டு, அதற்காக பிரகாஷ்ராஜ் குற்ற உணர்ச்சி ஆவது, பின்பு மன்னிப்பு கேட்பது என அழகாக செல்கிறது. ஆனால் தனுஷின் ரிலேஷன்சிப் சிக்கல் அந்த அளவு அழுத்தமாக எழுதப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் படத்தின் இரண்டாம் பாதி கதை முழுமையாக எழுதப்படாதது போல் இருந்தது. நித்யாமேனன் – தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருந்தால் ஏற்றுக் கொள்ளும்படி இருந்திருக்கும்.

அனிருத்தின் இசையில் மேகம் கருக்காதா பாடலும், அதன் நடன வடிவமைப்பும் ஈர்க்கிறது. ஆனால் பின்னணி இசை முழுக்க 3, விஐபி போன்ற படங்களை நினைவுபடுத்துவது போல இருந்தது. ஓம் பிரகாஷ் தன்னுடைய ஒளிப்பதிவால் படத்தின் அழகுத்தன்மையைக் கூட்டுகிறார். ஆனால் அது சில காட்சிகளில் பார்க்க செற்கையாக உள்ளது மைனஸ்.

உறவுகளுக்கு இடையேயான பிரச்சனையை பேசி சரி செய்ய வேண்டும், நம் மேல் பாசமாக இருப்பவர்கள் நம் கண் முன்னால் தான் இருக்கிறார்கள் என இரண்டு விதமான விஷயங்களை முன் வைக்கிறது படம். அதை சொல்ல சிம்பிளான கதையை எடுத்துக் கொண்டது ஓக்கே. ஆனால் அதை சொன்ன விதத்திலும், திரைக்கதையிலும் கொஞ்சம் வலு சேர்த்திருந்தால் குடும்பங்கள் கொண்டாடியிருக்கும்.

-ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.