அசாம் மாநிலம் கௌகாத்தியில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா தேவி கோயிலில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்குக் கோயில் கமிட்டியினர் மாலை அணிவித்துப் பிரசாதம் வழங்கினர். நீலாச்சல் மலை உச்சியில் அமைந்துள காமாக்யா கோயிலில் மோகன்லால் சென்று வந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் கோயில் சென்று வந்த அனுபவத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.

“”நான் காமாக்யா கோயில் குறித்துக் கேள்விப்பட்டது எந்த வயதில் என நியாபகம் இல்லை. ஆனால் கேள்விப்பட்ட நாளிலிருந்து அங்கு போக வேண்டும் என ஆசை உண்டு. ஆனால், பல விஷயங்கள் ஆசைப்பட்டால் மட்டும் நடந்துவிடாது. சொல்லக்கூடியதும், சொல்லாமல் இருக்கக்கூடியதுமான நூறு விஷயங்கள் ஒன்றுசேர்ந்தால் சில விஷயங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. அப்படி நிகழ்ந்த ஒரு சம்பவம்தான் இந்த யாத்திரை.

மோகன்லால் காமாக்யா கோயில் தரிசனம்

பாரதத்தில் தந்திர பாரம்பர்யத்தின் தொட்டிலாக அறியப்படுகிறது காமாக்யா. பல நூறு அர்த்தங்கள் தந்திராவின் சப்தத்தில் நான் படித்திருக்கிறேன். ஆனால் அதை முதலில் எனது மாமா கோபிநாதன் நாயரின் பக்கத்தில் நின்று கேட்டிருக்கிறேன். அன்று முதல் அந்த வழியில் நிறைய மகாத்மாக்களை காணவும், அறியவும் முடிந்தது. நான் அறிந்த தந்திராவின் அர்த்தத்தில் வாழ்ந்து காட்டியவர் அவர். நெருக்கடியான சினிமாப் பணிகளுக்கு இடையேயும் நான் அவரை அற்புதத்துடன் பார்த்துகொண்டு நின்றிருக்கிறேன். விழிப்புணர்வு மார்க்கத்தின் அவதூதர் அவர். தந்திராவைப்பற்றி நான் என்னச்சொன்னாலும் அது தொட்டிலில் கிடக்கும் குழந்தையின் அழுகை சத்தம் போன்றது மட்டுமே. அறிய வேண்டியதை அறிய இனியும் எவ்வளவோ முன்னேற வேண்டியது உள்ளது.

காமாக்யா யோனி பிரதிஷ்டை செய்த இடமாகும். யோனி என்றால் வரக்கூடிய இடம் என்று அர்த்தம். நாம் எல்லோரும் வரக்கூடிய இடம். நாம் அனைவரும் எங்கிருந்து வருகிறோம். மூலத்துக்கு திரும்பிச்செல்ல வேண்டும் என்ற உந்துதல் இயல்பாகவே நமக்கு உள்ளது. அதுதான் இங்கு வருவதற்கு முதல் காரணம். இங்கு வந்த பிறகுதான் இந்த மண்ணின் வரலாற்றை அறிந்துகொண்டேன்.

600 ஆண்டுகள் அஹோம் ராஜாகள் ஆண்ட இடம். முகலாய, ப்ரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த அஹோம் மன்னர்களைப்பற்றி பாடபுத்தகங்களில் படித்ததாக நியாபகம் இல்லை. அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களைப்பற்றி கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டியுள்ளது. அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உதவியாக உள்ளது. காமாக்யா கோயிலின் சரித்திரம் அஹோம் மன்னர்களின் வரலாற்றைக் கடந்து பின்னால் செல்கிறது.

கோயில் நிர்வாகத்தின் வரவேற்பு

புராணங்களில் காமாக்யா பற்றி நரகாசுரன் தொடர்பான கதைகள் சொல்லப்படுகின்றன. காளிகா புராணம் காமாக்யாவை கிராத வடிவில் காளி என அழைக்கிறது. நமது கேரளத்தில் காடாம்புழா கோயிலைப் பார்த்தால் கிராத வடிவில் காளி இருக்கிறார். அங்கு பார்த்தாலும் யோனி பிரதிஷ்டையாக உள்ளது. காமாக்யா கோயிலில் எங்களுக்கு உதவிய பண்டித நயன் ஜோதி சர்மா இந்த கோயில் துவாபர யுகத்தில் இருந்தே இருப்பதாகச் சொன்னார். சரித்திரபூர்வமாக ஏழாம் நூற்றாண்டு சமயத்தில் உள்ள கோயில் என்கிறார்கள். காமாக்யாவில் யோனி சங்கல்ப்பமும், வழிபாடும் மனிதகுலத்தைப் போன்றே பழைமையானது.

மிகவும் அழகான கோயில். ஜாதி, மதம் பார்க்காமல் அனைத்து மனிதர்களையும் ஏற்றுக்கொள்ளும் தலமாகும். கண்டிப்பாக வந்து பார்க்க வேண்டிய, அனுபவிக்க வேண்டிய இடம் காமாக்யா. இன்று காமாக்யாவை பார்த்தேன். நாளை பிரம்மபுத்திராவின் சிறு தீவில் உமா நந்தனைக் காணச்செல்கிறேன். பூபன் ஹசாரிகா முழு மனதுடன் பாடிய பிரம்மபுத்திரா வழியாக ஒரு பயணம். இந்தப் பயணம் நாங்கள் என்றோ விரும்பியதாகும். காமாக்யா போக வேண்டாமா என்ற கேள்வி முடிவுக்கு வந்துள்ளது. இனி பாரதத்தில் போக வேண்டிய மற்ற அற்புதமான இடங்களுக்கும் செல்லும் வாய்ப்பு ஏற்படட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” என மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.