குஜராத்திற்கு 608.37 கோடி, உத்தரப் பிரதேசத்திற்கு 503.02 கோடி, தமிழ்நாட்டிற்கு 33 கோடி, தெலங்கானாவிற்கு 24.11 கோடி – 2022-23ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் விவரம் இது!

ஒரு பக்கம் காமன்வெல்த் போட்டிகள் நடந்து கொண்டிருக்க 2022-23 ஆண்டுக்கான மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில் தரப்பட்டுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போதும் பெரும்பாலும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா திட்டம் என்றால் என்ன?

விளையாட்டுப் போட்டிகள்

இந்தியாவில் கேலோ திட்டம் என்பது விளையாட்டு மேம்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம். விளையாட்டு கட்டமைப்புகள் மேம்பாடு, மைதான மேம்பாடு, சமூக பயிற்சி வளர்ச்சி, மாநில அளவிலான கேலோ இந்தியா மையங்கள், வருடாந்திர விளையாட்டுப் போட்டிகள், திறமைகளைக் கண்டெடுத்து மேம்படுத்துதல், மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு மையங்களுக்கு உதவுதல், பள்ளி மாணவர்களின் ஆரோக்கியம், பெண்கள் விளையாட்டுகளை ஊக்குவித்தல், மாற்றுத்திறனாளி மக்களுக்கு இடையே விளையாட்டை பிரபலப்படுத்துதல், மனநிம்மதி மற்றும் வளர்ச்சிக்கான விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பழங்குடி மற்றும் கிராமத்து விளையாட்டுகளை மேம்படுத்துதல் என மொத்தம் 12 குறிக்கோள்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அடங்கும். ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கென தனியாக நிதி ஒதுக்கப்படும்.

2016ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2016-17ல் அதிகபட்சமாகக் கர்நாடகாவிற்கு 12.16 கோடியும் ஆந்திராவிற்கு 8.98 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2017-18ல் அதிகபட்சமாக ராஜஸ்தானிற்கு 36.39 கோடியும் அருணாச்சல பிரதேஷிற்கு 15.25 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2018-19ல் அதிகபட்சமாக உத்தர பிரதேஷிற்கு 43.43 கோடியும் அருணாச்சல பிரதேஷிற்கு 40.41 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2019-20ல் அதிகபட்சமாக ராஜஸ்தானிற்கு 24.53 கோடியும் மஹாராஷ்ட்ராவிற்கு 20.06 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான தரவுகள் கிடைக்கவில்லை. இது எதிலும் கூட தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை. 2016-2020 வரை தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மொத்த நிதி வெறும் 14.65 கோடிதான்.

இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் மாநில வாரியான நிதி ஒதுக்கீடு:

கேலோ இந்தியா 2021-22 நிதி பங்கீடு

தற்போது நடந்து முடிந்த காமன்வெல்த்தில் இந்தியாவின் சார்பாக மொத்தம் 215 வீரர்கள் வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். அதில் வழக்கம் போல் ஹரியானா வீரர்களே அதிகபட்சமாக மொத்தம் 34 பேர் பங்கேற்றார்கள். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபிலிருந்து 26 வீரர்களும் தமிழகத்திலிருந்து 17 வீரர்களும் பங்கேற்றனர். மேலும் மகாராஷ்டிராவில் இருந்து 14 பேர், கேரளாவிலிருந்து 13 பேரும் பங்கேற்றுள்ளனர். பதக்கம் வென்றவர்கள் பட்டியல் எடுத்து பார்த்தாலும், அதிலும் 24 பதக்கங்கள் பெற்று முதல் இருப்பது ஹரியானா மாநிலம்தான். அதற்கு அடுத்து பஞ்சாப் 18 பதக்கங்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி, ஜார்க்கண்ட் 8 பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

2021-ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் சார்பாக அதிகபட்சமாக 31 பேர் ஹரியானாவிலிருந்து பங்கேற்றனர். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபிலிருந்து 19 பேரும் தமிழ்நாட்டிலிருந்து 11 பேரும் பங்கேற்றனர். அதேபோல் ஜூன் மாதம் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் ஹரியானாவில் நடந்து முடிந்தது. அதில் ஹரியானா மாநிலம் 137 பதக்கங்கள் பெற்று அதிக பதக்கங்கள் பெற்ற மாநிலம் என்ற சிறப்பை பெற்றது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 125 பதக்கங்கள், டெல்லி 79 பதக்கங்கள், கர்நாடகா 67 பதக்கங்கள், கேரளா 55 பதக்கங்கள், தமிழ்நாடு 52 பதக்கங்களைப் பெற்றிருந்தன.

இப்படி மேலே குறிப்பிட்டிருக்கும் எந்த ஒரு தொடரிலும் அதிகம் பங்குபெறாத வெற்றிபெறாத குஜராத் மாநிலத்திற்கு 608.37 கோடி, உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 503.02 கோடி எனக் கொடுத்துள்ளதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவே உள்ளது. எல்லாவற்றிலும் சிறப்பாக விளங்கும் ஹரியானாவிற்கு மொத்த நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை வெறும் 88.89 கோடி. ஆனால் அதை வைத்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கும் குறைந்த நிதிதான் வழங்கியுள்ளது என்ற முடிவுக்கு நம்மால் வரமுடியாது. ஏனென்றால் அதிக நிதி பெற்றுள்ள பட்டியலில் முதல் பத்து மாநிலங்களில் 7 மாநிலங்கள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களைத்தான். ராஜஸ்தானைத் தவிர 100 கோடிக்கு மேல் பெற்றுள்ள ஐந்து மாநிலங்களும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்தான்.

கேலோ இந்தியா – கபடி

கூடுதல் வளர்ச்சி தேவையுள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி தேவை என்பது சிறந்த வாதம்தான். ஆனால் 31 மாநிலங்கள் கொண்ட நாட்டில் மொத்தமுள்ள 2754.28 கோடியில் சுமார் 1100 கோடியை வெறும் இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே ஒதுக்குவதை அந்தக் கோணத்தில் எப்படிப் பார்க்க முடியும்? விளையாட்டுக்கான வளர்ச்சி திட்ட நிதி என்பதால் அது மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து வழங்குவது ஒரு வகையில் சரியாக இருக்கும். ஆனால் அந்தக் கோணத்திலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி பொருந்தவில்லை. தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கெல்லாம் நிதி குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் தொகையில் குறைவாக உள்ள அருணாச்சல பிரதேசத்திற்கு சுமார் 500 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இன்னொரு வாதமாக அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் திட்டங்களுக்கு ஏற்ப நிதி என்பதுதான் அடிப்படை எனக் கூறப்படுகிறது. ஆனால் குஜராத்திலும் தமிழகத்திலும் நடப்பது சமமான அளவில் 5 திட்டங்கள்தான் என்னும்போது இந்த வாதமும் பொருந்தாத ஒன்றாகிவிடுகிறது. அதேபோல் ராஜஸ்தானில் அதிகபட்சமாக 45 திட்டங்கள் இருக்கும் நிலையில் அம்மாநிலத்திற்கு 112.26 கோடியே வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாட்டுக்கென தொடங்கப்பட்ட திட்டத்தில் அதற்கு ஒதுக்கப்படும் நிதி நியாயமாக இருந்தால்தான் அது எல்லோருக்கும் சமமான உரிமையாக இருக்கும். திட்டத்தை வைத்து ஒதுக்கீடு செய்வதும் அதில் பெரும் வித்தியாசம் இருப்பதும் நிச்சயம் மற்ற மாநிலங்களைப் பாதிக்கும்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி

2023ல் ஆசியப் போட்டிகள், 2024ல் ஒலிம்பிக்ஸ், பல விளையாட்டுகளில் தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப் என பல்வேறு விளையாட்டு தொடர்கள் வரும் காலங்களில் நடக்கவுள்ளன. தமிழ்நாட்டில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஆசியக் கடற்கரை போட்டிகளைச் சென்னையில் நடத்தவும் தமிழகம் முயற்சி செய்து வருகிறது. சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிகளும் மீண்டும் சென்னையில் நடக்க உள்ளன. இப்படிப் பல்வேறு விதங்களில் விளையாட்டுகளை மேம்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் வழங்கப்படும் நிதியோ அநீதியாக உள்ளது. நிச்சயம் விளையாட்டு மேம்பாட்டுக்கு ஒரு மாநிலத்திற்கு 500-600 கோடி வழங்குவது பாராட்டக் கூடிய விஷயம்தான். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு அதில் 5-10% மட்டுமே வழங்குவதுதான் பிரச்னையாக உள்ளது. அதுவும் விளையாட்டை மேம்படுத்தப் பல முயற்சிகள் எடுக்கும் மாநிலங்களுக்கு அது நிச்சயம் ஒரு பின்னடைவாகத்தான் இருக்கும். இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் மத்திய அரசு ஆளும் மாநிலங்களுக்கு பெரும்பாலான நிதியை வழங்குவதை அரசியல் இல்லாமல் பார்ப்பது கடினமே!

கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து உங்களின் கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.