விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்படும் என அ.தி.மு.க ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் வந்தபோது அடிக்கல் நாட்டியிருந்தார். இந்நிலையில் இந்தத் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளதாக கூறி, இன்றைய தினம் விழுப்புரம் காந்தி சிலை அருகே அதிமுக நிர்வாகிகளுடன் வந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்.

அப்போது பேட்டியளித்தவர், “தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என காத்திருந்த மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது இந்த அரசு. எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவதற்கும், புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கும் இந்த அரசுக்கு வக்கில்லை, துப்பில்லை. ஆனால் எங்களுடைய எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது… மிகவும் பின்தங்கிய மாவட்டமான விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் `ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்’ விழுப்புரத்தில் உருவாக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ‘நிதி ஒதுக்கவில்லை’ எனக்கூறி அந்த பல்கலைக்கழகத்தை மூடிவிட்டார்கள். ஒரு பல்கலைக்கழகத்துக்கு 100 கோடி ரூபாயை ஒதுக்குவதற்கு வக்கில்லாத இன்றைய முதலமைச்சர், கடற்கரையில் எழுதாத பேனா அமைக்க 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மிகப் பெரிய பிரச்னை, குடிநீர் பிரச்னை. இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றன இதேவேளையில் நிரந்தரமான குடிநீருக்கு வழியில்லாத நிலை இங்கு இருந்து கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்கு நிரந்தரமான குடிநீர் பிரச்னையை போக்க வேண்டும் என்பதற்காக மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியிலிருந்து 1509 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை முதற்கட்டமாக தொடங்கிவைத்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடியார்.

விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகள்; விக்கிரவாண்டி பேரூராட்சி; மரக்காணம், வானூர், வல்லம், மயிலம், கோலியனூர், காணை, விக்கிரவாண்டி ஒன்றியங்கள் ஆகியவை பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருந்தது. இரண்டாவது கட்டமாக விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் இந்த திட்டத்தை கொண்டுச் செல்வதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஆனால், இன்றைய விடியா அரசு, ஆட்சியை நடத்த தெரியாமல் நடத்திக்கொண்டிருக்கும் ஸ்டாலின்… இங்கிருக்கும் அமைச்சர்களான பொன்முடி, எ.வ.வேலுவின் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டு கடல்நீரை குடிநீராக்கும் நல்லதொரு திட்டத்தை இன்றைக்கு கைவிட்டிருக்கிறது. இதை ஏன் ரகசியமாக செய்கிறீர்கள்..? உங்களுக்கு துணிவிருந்தால் வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே? ஏன் முதலமைச்சருக்கு தைரியமில்லை? அமைச்சர்களான பொன்முடி மற்றும் எ.வ.வேலுவுக்கு ஏன் தைரியமில்லை? ஐந்தாவது மாதமே இந்த திட்டம் கைவிடப்பட்டு இருப்பதாக அரசாணை போடப்பட்டுள்ளது. இரண்டு மாத காலம் ரகசியமாக வைத்துள்ளார்கள். இதனை நான் கேள்விப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கேட்கிறேன்.

அதற்கு அவரோ… “இது உண்மையல்ல. வதந்தி என்று கருதுகிறேன்” என்கிறார். ஆனால், அந்த அரசாணையிலே மாவட்ட ஆட்சியருக்கும் நகல் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று, நகல் ஆட்சியருக்கு அனுப்பாமல் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில், அவர் உண்மைக்கு மாறாக பொய்ச்சொல்லி இருக்க வேண்டும். ஆகவே, இந்த அரசு பொறுப்பேற்ற 15 மாதங்களில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நலனுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களையும் கைவிட்டிருக்கிறது.

ஆகவே, இந்தத் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை அறிவிக்ககூடும் என தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.