பணத்தையும், ஈகோவையும், பகையும் விட பாசமும் சொந்தமும் அன்பும் தான் முக்கியம் என அப்பாவுக்கு புரியவைக்கும் மகனின் கதைதான் ‘விருமன்’.

தன் அம்மாவின் மரணத்துக்கு அப்பா முனியாண்டி (பிரகாஷ் ராஜ்) தான் காரணம் என அவரைக் கொல்லத் துடிக்கிறான் சிறுவயது விருமன் (கார்த்தி). கோர்ட்டில் தாய்மாமாவிடம் வளரட்டும் எனத் தீர்ப்பாக, ராஜ்கிரண் பாதுகாப்பில் வளர்க்கிறார். 25 வருடங்களுக்குப் பிறகு மறுபடி சொந்த ஊருக்கு வருகிறார் கார்த்தி. தன் மீது வெறுப்பில் உள்ள அப்பாவையும், அவர் தயவில் வாழும் மூன்று அண்ணன்களையும் எப்படி மாற்றுகிறார், எதற்காக மாற்றுகிறார் என்பதுதான் மீதிக்கதை.

முத்தையாவின் யுனிவர்ஸில் நடக்கும் கதை என்பதால் அதன் அத்தனை டெம்ப்ளேட்களும் மிஸ் ஆகாமல் இதிலும் இடம்பெற்றிருக்கிறது. பாசத்துக்கு கட்டுப்படும் ஹீரோ, ஈகோ பார்க்கும் எதிர்மறை கதாபாத்திரம், ஊரே உறவுகளாக கூடி நிற்பது, ஹீரோவுடன் சண்டைக்கு நின்று பறந்து பறந்து விழும் அடியாட்கள், பெண்களை மாரல் போலீசிங் செய்யும் கதாபாத்திரங்கள், பிற்போக்கான வசனங்கள், சிந்தனைகள் என அனைத்தும் இதிலும் மிஸ் ஆகவில்லை.

image

படத்தின் ப்ளஸ் எனப் பார்த்தால் கார்த்தியின் நடிப்பை சொல்லலாம். இப்படி நடிப்பது வெகு இயல்பாக வரும் என்பதால் அசத்துகிறார். காமெடி, ஃபைட், டான்ஸ், ரொமான்ஸ், எமோஷன் என எதிலும் மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் சிறப்பாக செய்கிறார். பிரகாஷ்ராஜ் தன்னுடைய ட்ரேட் மார்க் வில்லன் ரோலை கொஞ்சம் டோன் டவுன் செய்து நடித்திருக்கிறார். அறிமுக நாயகி அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு நல்வரவு. நடிப்பிலும் நடனத்திலும் முதல் படம் என்ற சாயல் தெரியவே இல்லை. அவ்வளவு இயல்பாக நடிக்கிறார்.

இவர்கள் தவிர துணைப் பாத்திரங்களில் வரும் வடிவுக்கரசி, வசுமித்ரா, மனோஜ், இளவரசு, மைனா நந்தினி ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சூரியின் காமெடி வழக்கம் போல் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதிலும் ‘கட்டபொம்மன்’ படத்தில் வரும் சரத்குமார், கவுண்டமணி காமெடியை எடுத்து இதில் வைத்திருப்பது ஏன் என்றே புரியவில்லை? மொத்த படமுமே கூட ரஜினி, ஸ்ரீவித்யா நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தின் சாயலில் தான் இருக்கிறது. ரஜினிக்கு பதில் கார்த்தி, ஸ்ரீவித்யாவுக்கு பதில் பிரகாஷ்ராஜை வைத்து, பங்களா செட்டுக்கு பதில், மதுரையின் ஒரு கிராமத்தில் நடப்பது போன்று மாற்றினால் ‘விருமன்’ ரெடி.

image

தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் செல்வா மிகத் தரமாக காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகள் கவனம் பெறுகிறது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடல்களில் கஞ்சா பூவு கண்ணால ஆல்ரெடி பெரிய ஹிட். மற்ற பாடல்களும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையை தான் ஏற்கனவே பழகின ஸ்கோரிங் போல் தோன்றியது.

முத்தையா படங்களில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் பற்றி கண்டிப்பாக காட்சிகள் இருக்கும். ஆனால், உறவின் பெயராலும், அன்பின் பெயராலும் நடக்கும் குடும்ப வன்முறைகளை நியாயப்படுத்துகிறாரோ என்கிற எண்ணம் ‘விருமன்’ பார்க்கும் போது வருகிறது. அதற்கு படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் நடத்தப்படும் விதமே சாட்சி. ஒருபுறம் பிரகாஷ்ராஜ் அதை டாக்சிக்காக செய்ய, மறுபுறம் பெண்கள் என்றால் பொக்கிஷம், குலவிளக்கு, பெண் என்றால் பூலாந்தேவி போல இருக்கக்கூடாது என அதே விஷமான விஷயத்தை ஹீரோவின் மூலம் சாந்தமாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறது படம்.

image

டொமஸ்டிக் வைலன்ஸை பொறுத்துக் கொள்ளும், சகித்துக் கொள்ளும் மனைவியால் தான், என்றாவது கணவர் திருந்தி வரும் போது சந்தோஷமாக வாழ முடியும் என்பது மாதிரியான காட்சிகள் இன்டன்ஷனலாக இருக்கிறதா, அன்இன்டன்ஷனலாக வந்ததா எனப் புரியவில்லை. இதுபோல் படத்தில் பல பிற்போக்குத்தனங்கள்.

அவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கூட, படத்தின் முதல் பாதி படு கமர்ஷியலாக விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாதிதான் மிகத் தடுமாறுகிறது. எமோஷனலாகவும் ஒன்றிரண்டு இடங்கள் தவிர மற்ற எதுவும் ஒட்டவில்லை. அதிலும் பிரகாஷ்ராஜ் – கார்த்தி க்ளைமாக்ஸில் பேசிக் கொள்வது மிகவும் அபத்தமாக இருக்கிறது.

கதையில் கொஞ்சமாவது புதுமையும், காட்சிகளில் இயல்புத் தன்மையும் இருந்திருந்தால் வென்றிருப்பான் ‘விருமன்’

-ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.