காமன்வெல்த் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 ரன்களில் தோல்வியடைந்த நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதின் விமர்சித்துள்ளார். 

இங்கிலாந்து பர்மிங்ஹாமில் நடந்துவரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டது. இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, பார்படாஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த மகளிர் அணிகள் கலந்துகொண்டன. இந்த மகளிர் டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நேற்று மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 41 பந்தில் 61 ரன்களை குவித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஹீலே 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். கேப்டன் லானிங் 26 பந்தில் 36 ரன்கள் அடித்தார். கார்ட்னர் 15 பந்தில் 25 ரன்கள் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி 161 ரன்கள் அடித்தது.


இதனைத்தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா (11), ஸ்மிருதி மந்தனா (6) ஆகிய இருவருமே சொற்ப ரன்களே எடுத்து சொதப்பினர். இதையடுத்து 3-ம் வரிசையில் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 பந்தில் 33 ரன்கள் மட்டுமே அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மட்டுமே பொறுப்புடன் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 43 பந்தில் ஹர்மன்ப்ரீத் கௌர் 65 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே களத்தில் நின்று சரியாக ஆடாததால் 19.3 ஓவரில் 152 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

15 ஓவர்கள் வரை இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. இதனால் அறிமுகப் போட்டியிலேயே இந்திய அணி தங்கம் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தநிலையில், ஹர்மன்ப்ரீத் கௌர் அவுட்டானதும், அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் நின்று ஆடாமல், ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

இதனால், இந்தியா தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெள்ளி பதக்கம் வென்றது. ஆஸ்திரேலிய மகளிர் அணி தங்கம் வென்றது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியுமான முகமது அசாரூதின் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் குறித்து சாடியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “குப்பை பேட்டிங்கை இந்திய அணி மேற்கொண்டது. கொஞ்சமும் பொது அறிவு இல்லை. வெற்றிகரமான ஒரு விளையாட்டை தட்டில் வைத்து தாரை வார்த்து கொடுத்துவிட்டனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து நெட்டிசன்கள் பலரும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எத்தனை தடவை உங்கள் அணி வெற்றி பெற்றுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த மகளிர் அணியாவது வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. அதனால் கொஞ்சம் மரியாதை தாருங்கள் என்று குறிப்பிட்டு பதில் அளித்து வருகின்றனர். இந்த காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெண்கலப் பதக்கம் வென்றது.  

image

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.