சூர்யா ஜோதிகாவின் 2D தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கார்த்தி, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் `விருமன்’. இப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதையொட்டி இதன் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் மதுரையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இதில் சூர்யா, கார்த்தி, இயக்குநர் ஷங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சூரி மற்றும் இப்படத்தில் நடித்த பலரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய நடிகர் சூரி நடிகர் மற்றும் விருமன் படத்தின் தயாரிப்பாளரான சூர்யாவின் ‘அகரம்’ கல்வி நிறுவனத்தின் மூலம் மாணவர்களுக்குக் கல்வி உதவிகள் செய்வது பற்றிப் பேசியிருந்தார். அப்போது ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஆயிரம் அன்னச் சத்திரத்தைக் கட்டுவதை விட ஒருவரைப் படிக்க வைப்பது சிறந்தது. நீங்கள் செய்யும் கல்விப் பணிகள் பல ஜென்மம்வரை பேசப்படும்” என்று பேசியிருந்தார்.

சூரி

நடிகர் சூரியின் இந்தப் பேச்சு கோயிலுக்கு எதிரானது என சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது நடந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சூரி, ‘நான் எந்த கோயிலுக்கும் எதிரானவன் இல்லை’ என்று பதிலளித்துப் பேசியிருந்தார்.

இதுபற்றி பேசிய அவர், “மதுரையில் நடந்த ஆடியோ வெளியிட்டு விழாவில் ‘ஆயிரம் அன்னச் சத்திரத்தைக் கட்டுவதைவிட ஒருவரைப் படிக்க வைப்பது சிறந்தது’ என்று நான் எதார்த்தமாகப் பேசியிருந்தேன். ஆனால் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அதை நான் சொல்லவில்லை. நான் மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன். மதுரையில் நான் தொடங்கியுள்ள ஹோட்டலுக்குக் கூட ‘அம்மன்’ என்றுதான் பெயர் வச்சிருக்கேன். ஆனால் சிலர் நான் பேசியதைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். நான் எந்த கோயிலுக்கும் எதிரானவன் இல்லை. நான் படிக்கல அதனால எல்லோருக்கும் படிப்பு கொடுப்பது சிறந்தது என்று கூறினேன். மகாகவி பாரதியார், காமராஜர் போன்றவர்கள் சொன்னதைத் தான் நான் சொன்னேன். வேறெந்த உள் நோக்கமும் எனக்கில்லை” என்று விளக்கமளித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.