இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்சி கவுன்சிலின் (CSIR) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானியான நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

1942ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 38 ஆய்வகங்கள் உள்ளன. அதில் 4,600 விஞ்ஞானிகள், 8,000 தொழில்நுட்ப நிபுணர்கள் என 14,000க்கும் மேலானோர் பணியாற்றி வருகிறார்கள். முதல் நிலை விஞ்ஞானியாக ஆராய்ச்சி வாழ்க்கையை தொடங்கிய கலைச்செல்வி, தற்போது அதே சி.எஸ்.ஐ.ஆரின் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார்.

image

CSIRன் இயக்குநர் ஜெனரலாக இருந்த சேகர் மாண்டே கடந்த ஏப்ரல் மாதமே ஓய்வு பெற்றதால் இரண்டு ஆண்டுகளுக்கு CSIR-ன் இயக்குநர் ஜெனரலாக அறிவிக்கப்பட்டுள்ள கலைச்செல்வி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு முன்னதாக 2019ம் ஆண்டில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (CSIR-CECRI) தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையையும் கலைச்செல்வி பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி கலைச்செல்வி. இவர் தனது பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் படித்து முடித்தவர்.

image

தமிழ்நாடு காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக்கும் கலைச்செல்விதான் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானத் துறையில் பணியாற்றி வரும் கலைச்செல்வி 125க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி ஆறு காப்புரிமைகளையும் பெற்றிருக்கிறார்.

லித்தியம்-ion பேட்டரிகள் துறையில் அவர் மேற்கொண்ட பணிக்காக அறியப்பட்ட கலைச்செல்வி தற்போது நடைமுறையில் இருக்கும் சோடியம்-அயன்/லித்தியம்-சல்பர் பேட்டரிகள் மற்றும் சூப்பர் கேபாசிட்டர்களை உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான CSIRன் இயக்குநராக தென்னிந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதோடு, பலரும் நல்லதம்பி கலைச்செல்விக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.