கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியின், அவரது தம்பி அழகர்சாமி, பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ஞானவேல்ராஜா ஆகியவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  தொடர்ந்து இவர்களின் விநியோகஸ்தர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து நான்கு நாட்கள் நடத்தப்பட்டு நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், சோதனை செய்தது தொடர்பான அறிக்கை ஒன்றை வருமானவரித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் திரைப்படத் துறை தயாரிப்பாளர்கள் வீடு, விநியோகஸ்தர்கள் வீடு மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகவும், அந்த சோதனை நடவடிக்கைகளின் போது கணக்கில் காட்டப்படாத பண பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான பல குற்றம் சாட்டக்கூடிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் போன்றவை கைப்பற்றப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

image

மேலும் தேடுதலின் போது ரகசிய மற்றும் மறைவான இடங்களிலும் பல ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், திரைப்பட நிதியளிப்பாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் பிற நிறுவனங்களுடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தில் கணக்கில் வராத பணக் கடன்கள் தொடர்பான உறுதிப்பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான சான்றுகள் உள்ளதாகவும், வழக்கமான கணக்குப் புத்தகங்களில் காட்டப்படும் தொகையை விட திரைப்படங்கள் வெளியானதிலிருந்து பெறப்பட்ட வருமானத்தின் உண்மையான தொகைகள் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இறுதி கட்டமாக நடந்த சோதனைக்கு பிறகு கணக்கில் காட்டப்படாத வருமானம், வெளிப்படுத்தப்படாத முதலீடுகள் மற்றும் பல்வேறு கொடுக்கல் வாங்கல்கள் என்று தேடுதல் நடவடிக்கையின் மூலமாக கணக்கில் வராத வருமானம் ரூ. 200 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.26 கோடி மதிப்பிலான கைப்பணம் மற்றும் ரூ.3 கோடிக்கு மேல் கணக்கில் வராத தங்க நகைகள் முதலியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.