தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஆவின் நிறுவனம் மூலம் பால் மட்டுமல்லாமல் மோர், தயிர், லஸ்ஸி, இனிப்புகள் என பல பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆவினின் 28 யூனிட்டுகளிலும் ஆர்.ஓ வாட்டர் பிளான்ட்டுகள் இருப்பதால், விரைவில் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படும்” என அறிவித்தார்.

மத்திய அரசு கடந்த ஜூலை1-ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிகளையும், 100 மைக்ரோ பி.வி.சி-க்குக் குறைவான நெகிழிகளையும் உற்பத்தி செய்யவோ… விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனத் தடை விதித்தது. முதற்கட்டமாக ஜூலை 1-ம் தேதி தலைநகர் டெல்லியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி தடை செய்யப்பட்டது. ஆனாலும், அதில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.

அமைச்சர் நாசர்

இத்தகைய சூழலில் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் இந்த அறிவிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கலவையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசின் நெகிழி தடை உத்தரவு குறித்தும்… தமிழ்நாடு அரசின் `ஆவினில் குடிநீர் பாட்டில்’ விற்பனை அறிவிப்பு குறித்தும், `பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தைச் சேர்ந்தவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜீயோ டாமினிடம் பேசினோம்.

“ஜூலை 1-ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பொருள்களாகக் கூறப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி உட்பட 19 வகையான நெகிழிகள் பற்றிய ஒன்றிய அரசின் பட்டியலில் குடிநீர் பாட்டில்கள் இடம்பெறவில்லை. ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் அரசு அமைப்புகள் 1லிட்டர், 5 லிட்டர் பாட்டில்கள் விற்கத் தடை செய்கிறதே தவிர, ஒட்டுமொத்தமாக எங்கும் தடை செய்யவில்லை. குடிநீர் பாட்டில்கள் 100 மைக்ரோ பி.வி.சி-க்கு கீழ் வரவில்லை என்றாலும், இலவசமாகச் சுகாதாரமான குடிநீர் வழங்குவது அரசின் கடமை. குழாய் தண்ணீர் சுகாதாரமற்றது என்று பெரு நிறுவனங்கள் மக்களிடம் போலி பிம்பத்தைக் காட்டி குடிநீரை தனியார்மயமாக்கி… கொள்ளையடிக்கப் பார்க்கின்றன.

தண்ணீர் பாட்டில்

அதிலிருந்து மக்களை மீட்டு வருவதே அரசின் கடமையே தவிர, அரசும் குடிநீர் பாட்டில்கள் தயாரித்து விற்பது ஏற்கக்கூடியதல்ல. உலக அளவில் குடிநீரை தனியார்மயமாக்குதலின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்க முடிகிறது. குறைந்தபட்சம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சுகாதாரமான குடிநீரைப் பொதுமக்கள் பயன்பட இலவசமாய் வழங்குவது அரசின் கடமை. மக்கள் குடிநீருக்காகப் போராடுகிறார்கள். ஆனால், பாட்டில் குடிநீருக்காக அல்ல. அரசு லாபத்துக்காகத் தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றுவதையும், பிளாஸ்டிக் போன்ற நச்சுப் பொருள்களாலான பாட்டில்களில் அதை விற்பனைச் செய்வதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

பிளாஸ்டிக் நெகிழி குப்பை

தடை செய்யப்பட்ட, தடை செய்யப்படாத பிளாஸ்டிக் என்னும் விவாதத்துக்குள் நாம் வருவதற்குமுன்பு, பிளாஸ்டிக் என்றாலே நச்சுத்தன்மை வாய்ந்த பொருள் என்பதை உணரவேண்டும். உலக அளவில் பிளாஸ்டிக் உற்பத்தியை முழுவதுமாகத் தடை செய்யப் பேச்சுவார்த்தை நடக்கிறது. பல நாடுகள் அதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கின்றன. இன்றும் பூங்காக்கள், கோயில்கள் போன்ற இடங்களில் இலவச குடிநீர் வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால், குடிநீர் பாட்டில்கள் அதிகமாக விற்கத் தொடங்கினால், ‘இலவச குடிநீர்’ கட்டமைப்பே உடைகிறதா என்ற கேள்விக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பு, பிளாஸ்டிக் ஒரு பெரிய மாசுருவாக்கலின் காரணி என்னும் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குவது போலவே இருக்கிறது.

ஆவின்

தனியார் நிறுவனங்கள் விற்பதைவிடக் குறைந்த விலையில் இதற்கு முன்பு அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனநிலையில் குறைந்த விலைதானே வாங்கிவிடலாம் என்ற எண்ணம் வருவதோடு, குடிநீர் பாட்டில்களுக்கான நுகர்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உலக அளவில் காலநிலை மாற்றத்துக்கான முக்கியமான பின்னணி காரணிகளில் ஒன்றாகக் கருதப்படும் படிம எரிபொருளின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் எனப் பேசுகிறோம். ஆனால், பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளே படிம எரிபொருளான பெட்ரோலியம்தான். தடை செய்யப்பட வேண்டிய பொருள்களைச் சார்ந்தே மீண்டும்… மீண்டும் பொருள்கள் உற்பத்தி செய்வது ஏற்கக்கூடிய ஒன்றல்ல.

தமிழ்நாடு அரசு

பொதுவாக பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியாது. அவற்றை குறைசுழற்சி (downcycling) தான் செய்ய இயலும். பிளாஸ்டிக்கை குறைசுழற்சி செய்யும்போது அதிலிருந்து பி.இ.டி.இ பாட்டில்கள் உற்பத்திசெய்ய முடியும். மீண்டும் அதை குறைசுழற்சி செய்யும்போது, கடினமான செயற்கை இழை தயாரிக்கப்படுகிறது. ஆனால் முடிவில் மக்காத குப்பையாகப் பூமிக்கு மாசாகவே ஆகிறது. குடிநீர் விற்கப்படும் பி.இ.டி.இ (PET/PETE) பாட்டில்களைப் பொறுத்தமட்டில், சூரியக் கதிர்கள் பட்டாலே உருகும் தன்மை வாய்ந்தது. இதனால் இந்த பாட்டில்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ப்ரோமின் (Bromine), ஆன்டிமணி (Antimony) ஆகிய ரசாயனங்கள் தண்ணீரில் கலப்பதோடு, உடலுக்குக் கேடு விளைவிக்கவும் செய்கிறது. குடிநீர் பாட்டில்கள் ஏற்றிவரும் வண்டிகள் முதல் கடைகளில் விற்பனை செய்யப்படுவது வரை குடிநீர் பாட்டில்கள் திறந்த வெளியில் சூரியக் கதிர்கள் நேரடியாகப்படும் விதமாகவே இருக்கின்றன. மேலும், பி.இ.டி.இ பாட்டில்களில் ரசாயனப் பொருளான ஆன்டிமணி தண்ணீரில் கலப்பதுடன், அதை உட்கொள்ளும்போது மனித உடலில் கார்சினோஜன் என்னும் புற்றுநோய் காரணியாக மாறுகிறது.

கனடா

சமீபத்தில் கனடா அரசு ‘பிளாஸ்டிக் ஒரு நச்சுப்பொருள்’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும், அது நச்சுப்பொருள் என்பது உலக அளவில் நிரூபணமான ஒன்று. பி.இ.டி.இ பாட்டில்களில் குடிநீர் என்பது அத்தியாவசியமான ஒன்று என்றால் ஒரு சில சமரசத்தோடு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை பாட்டில்களில் விற்பது மீண்டும் மக்களிடம் இந்த நெகிழியைத் திணிப்பது போன்றே தெரிகிறது” என்றார்.

– ஜெபிஷா ஜெ.சோ (மாணவப் பத்திரிகையாளர்)

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.