தலையில் கேசம் உதிர்வது, பொடுகு பிரச்னைகளை தொடர்ந்து பெரும் பிரச்னையாக பார்க்கப்படுவது கேசத்தின் நிறமாற்றம். வயதாவது மட்டுமன்றி, இளநரை, சத்துக்குறைபாடு உள்ளிட்ட காரணங்களாலும் சிலருக்கு கேசம் நரைக்கலாம். அதற்குத் தீர்வாக பலரும் ஹென்னா பயன்படுத்துகிறார்கள்.

கடையில் ஹென்னா வாங்கி பயன்படுத்துவதில், பலருக்கும் தயக்கம் இருக்கும். அதில் என்னென்ன ரசாயனங்கள் கலந்திருப்பார்களோ என்ற அச்சம் இருக்கும். ஆனால், வீட்டிலேயே இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரித்த ஹென்னாவில் இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லை. நரை முடிக்குத் தீர்வளிப்பதோடு, கேசத்துக்கும் ஊட்டம் அளிக்கக்கூடிய ஹெர்பல் ஹென்னா தயாரிப்பு முறையை விளக்குகிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா

தேவையான பொருள்கள்

* ஹென்னா

* செம்பருத்தி இலை அல்லது செம்பருத்திப் பூவின் பொடி

* நெல்லிக்காய் பொடி

* கரிசலாங்கண்ணி பொடி

* வில்வ இலை பொடி

* எலுமிச்சை பொடி மற்றும் எலுமிச்சை சாறு

* தயிர்

* முருங்கை அல்லது முருங்கை விதை எண்ணெய் அல்லது நல்லண்ணெய் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய்

செய்முறை

ஹென்னா செய்ய இரும்புச்சட்டி சிறப்பானது. ஒரு இரும்புச்சட்டியை எடுத்துக்கொள்ளவும். அதில் ஹென்னா 100 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். அதனுடன், மேலே கூறிய பொடிகள் அனைத்தையும் ஒரு டீஸ்பூன் அளவுக்கு ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். இவற்றுடன் எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் முருங்கை எண்ணெய், கூடவே யூகலிப்டஸ் எண்ணெய் 4 சொட்டுகள் விட்டு நன்றாகக் கலக்கவும். கலவையில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். ரொம்பவும் கெட்டியாக இல்லாமல் கேசத்திலும், வேர்ப்பகுதியிலும் அப்ளை செய்வதற்கு ஏற்ற பதத்தில் கலக்க வேண்டும். பின் அந்த இரும்புச்சட்டியிலேயே கலவையை இரவு முழுவதும் அப்படியே ஊறவிடவும்.

ஹென்னா

காலையில், ஹென்னாவின் நிறம் சிறிது பழுப்பு நிறமாக மாறியிருக்கும். இதனை அப்படியே கேசத்தில் அப்ளை செய்வதை தவிர்த்து, கேசத்தில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யை நன்றாகத் தேய்த்த பின், இந்த ஹென்னாவை அப்ளை செய்யவும்.

இந்த ஹெர்பல் ஹென்னாவை பயன்படுத்துவன் மூலம் நரை முடி நிறம் மாறுவதுடன், கேசத்துக்கும் ஊட்டம் கொடுக்கும். பொடுகுத் தொல்லை, பேன் தொல்லையும் நீங்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.