இன்றைய பிஸியான காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு பணம் சம்பாதிப்பதை தாண்டி பிள்ளைகளை எப்படி கையாள்வது என்பதில் கவனம் செலுத்த நேரம் இருப்பதில்லை. குறிப்பாக டீனேஜ் என்று சொல்லக்கூடிய வளர் இளம்பருவ பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் அவர்களை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? அவர்களை எவ்வாறு அணுகவேண்டும்? ஹார்மோன் மாற்றங்களால் பாலியல் உணர்வுகள் ஏற்படும்போது அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் உளவியலாளர் Dr.சுஜிதா.

image

டீனேஜில் உள்ள பிள்ளைகளை புரிந்துகொள்வதற்கு முதலில் பெற்றோர்கள் சில விஷயங்களை புரிந்துகொள்ளுதல் வேண்டும். வளர் இளம் பருவத்தில் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர், நாமும் அந்த வயதை கடந்துதான் வந்திருக்கிறோம் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், பிள்ளைகளிடம் தங்கள் ஈகோவை காட்டுவதுதான். நான் சொல்லுவதை கேட்கமாட்டாயா? செய்யமாட்டாயா? நீ சொல்லுவது நான் என்ன கேட்பது? என்பதுபோன்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவர். குறிப்பாக அம்மாவுக்கு மகளுக்கும், அப்பாவுக்கும் மகனுக்கும் இதுபோன்ற ஈகோ க்ளாஷ் இருக்கும்.

Opposite poles are attracted என்பது காதலுக்கு மட்டுமல்ல; பெற்றோர் குழந்தைகளுக்கும் பொருந்தும். அதாவது அப்பா – மகள், அம்மா – மகன் பிணைப்பு எப்போதுமே ஜாஸ்திதான். மிகவும் அரிதாகவே சில குடும்பங்களில் அம்மா – மகள், அப்பா – மகன் தோழமையுடன், ஜாலியாக இருப்பதை பார்க்கமுடிகிறது. இதற்கு பெற்றோர்கள் பரந்த மனம் கொண்டவராக இருத்தல் வேண்டும். தலைமுறை இடைவெளி (Generation gap) என்பதை பிள்ளைகள் பெற்றோரிடம் அடிக்கடி சொல்ல கேட்டிருப்போம். ஆம், அது கருத்தில்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விஷயம்.

image

டீனேஜ் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு…

அவர்களை பேச விடுங்கள்..(Let them talk)

சிறிய வயது குழந்தைகளை பெற்றோர்கள் மிரட்டி, பாதுகாப்பாக வளர்ப்பர். ஆனால், 13 வயதை தாண்டும் பிள்ளைகள் பருவம் எய்தபிறகு அவர்களுக்கு ஹார்மோன் மாற்றம் ஏற்படுவதால் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்களை சந்திப்பர். அந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைப்பருவத்தில் செய்ததுபோன்றே கண்டிஷன்ஸ் போடும்போது அதை வளர் இளம்பருவத்தினர் ஏற்க மறுப்பர். இதனால் பெற்றோர் – பிள்ளைகளுக்கு இடையேயான பிணைப்பு குறைய ஆரம்பிக்கும். எனவே குழந்தைகளை பெற்றோர் மனம்விட்டு பேச அனுமதிக்க வேண்டும். அதேபோல் வீட்டில் முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி பேசி முடிவெடுக்கும் நிலையில் இருக்கும்போது பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் கருத்து முற்றிலும் மாறுபட்டு காணப்படும். பெற்றோர்கள் 2 மணிநேரம் செலவிடும் ஒரு விஷயத்தை பிள்ளைகள் 2 நிமிடங்களில் ஸ்மார்ட்டாக முடித்துவிடுவர். அதை பெற்றோர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தை பற்றி கலந்தாலோசிக்கும்போது பிள்ளைகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தால் அதை முதலில் காதுகொடுத்து கேட்க பெற்றோர்கள் பழகிக்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் கருத்துக்கு பெற்றோர்கள் முதலில் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டால், நாம் ஏன் கருத்துக்கூற வேண்டும்? நம் பேச்சுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? என்று நினைத்து அவர்கள் பொறுப்பற்றவர்களாக மாறும் வாய்ப்புகள் அதிகம்.

image

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள விடுங்கள் (Let them learn with their mistakes) – தவறுகளிலிருந்துதான் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். பிள்ளைகள் தவறு செய்துவிட்டால் உடனே அவர்களை திட்டவோ அடிக்கவோ வேண்டாம். உதாரணத்திற்கு, பிள்ளைகளை கடைக்கு ஏதேனும் வாங்கிவர அனுப்பி, அவர்கள் கணக்கு பார்க்காமல் 50 ரூபாயோ 100 ரூபாயோ தவறுதலாக விட்டுவிட்டு வந்துவிட்டால் உடனே அவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தவறை உணர்ந்து திரும்ப கடைக்குச் சென்று சில்லரையை வாங்கிவர அனுமதிக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் கண்டிப்பு அவசியமில்லை. கற்றுக்கொள்ள அனுமதியுங்கள்.

நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருக்கும்தான்.. (Humor sense) – டீனேஜ் பிள்ளைகளுக்கு நகைச்சுவை பிடிப்பதுடன், நகைச்சுவை உணர்வுடனும் இருப்பர். வளர் இளம்பருத்தினர் பொதுவாகவே எதிர்த்து பேசுவது, வால்தனம் பண்ணுவது இயல்புதான். அதற்காக அவர்களை கண்டிக்காமல், அதே நகைச்சுவை உணர்வுடன் தவறுகளை சுட்டிக்காட்டி, ஜாலியாக எடுத்துக்கொள்வதும், அவர்களை ஜாலியாக உணரவைப்பதும் அவசியம். இப்படி செய்யும்போது பிள்ளைகள் பெற்றோருடன் ஃப்ரண்டிலியாக இருப்பர். நிறைய பெற்றோர், தாய் தகப்பன் என்பது ஒரு பதவி என்ற எண்ணத்துடனேயே பிள்ளைகளை கையாள்கின்றனர். இதனால் பிள்ளைகளை ஒரு வேலையாள் போன்றே நடத்துகின்றனர். வேலைஸ்தலத்தில் இருக்கும் rules and regulations குடும்பத்துக்குள் வரும்போது அது டீனேஜ் பிள்ளைகளின் ஈகோவை வளர்த்துவிடும். இதனால் பெற்றோர் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்மறையாகவே நடக்க தூண்டப்படுவர்.

image

அவர்களுடன் நேரம் ஒதுக்குங்கள் (Spend time) – பிள்ளைகள் டீனேஜ் பருவத்தை நெருங்கியவுடனே பெற்றோர்கள் அவர்கள்மீது அக்கறை செலுத்துவதாக எண்ணி, எப்படி அவர்களுக்கு திருமணம் செய்வது, பணம் சேர்ப்பது என்பதிலேயே குறிக்கோளாக இருக்கின்றனர். இதனால் எப்போதும் சம்பாத்தியம், வேலை என்றே ஓடுகின்றனர். ஆனால் உண்மையில் டீனேஜ் பருவத்தினருக்கு எது தேவை தெரியுமா? பெற்றோரின் அன்பு, பாசம், அரவணைப்பு தான். குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுதல், வெளியே செல்லுதல் போன்று குடும்பத்தினருடன் நேரம் செலவிட நினைப்பர். இதற்கு பெற்றோர் முக்கியத்துவம் கொடுக்காதபோது பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் ஈடுபாடு குறைந்து வெளியே அன்பை தேட ஆரம்பிப்பர். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிடுதல் அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம், பிள்ளைகளுக்கு, உயிரியல், ஹார்மோன்கள் மற்றும் ரசாயன மாற்றம் ஏற்படுகிறது என்பது. எனவே அவர்கள் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும்போது அவர்கள் வேண்டுமென்றே அதை செய்யவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

image

டீனேஜ் பிள்ளைகளுக்கு செக்ஸில் ஏற்படும் ஆர்வம் எப்படி இருக்கும்? அவர்களை பெற்றோர்கள் எவ்வாறு கையாள வேண்டும்?

எரிக் எரிக்சனின் கோட்பாடு இதை தெளிவாக விளக்குகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையும் பாலியல் உணர்வு என்பது மாறுபட்டு உணரக்கூடியதாக இருக்கும். அதில் மிகவும் முக்கியமான நிலை adolescent என்று சொல்லக்கூடிய வளர் இளம்பருவம். இந்த வயதில் பார்ப்பவை கேட்பவற்றில் பல புரியாத புதிராக இருக்கும். அனைத்தையும் தெரிந்துகொள்ளக்கூடிய ஆர்வம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். செக்ஸ் என்ற வார்த்தையை சமூகம் ஏன் கட்டுப்படுத்துகிறது? வீட்டிலேயும் இதுபற்றி பேசமுடியாத சூழல் நமது கலாசாரத்தில் நிலவுவது ஏன்? என்பது போன்ற கேள்விகள் அவர்களுக்கு எழும். இன்றுவரை நமது சமூகமும் இதைப்பற்றி வெளிப்படையாக பேச அனுமதிப்பதில்லை என்பதுதான் உண்மை. பெற்றோர்கள் அப்படி இருக்கவேண்டிய அவசியமில்லை.

image

டீனேஜ் பருவத்தினருக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் எதிர்பால் இனத்தோரை பார்க்கும்போது ஒருவித ஈர்ப்பு ஏற்படுவது சகஜம்தான். இந்த நிலையை பெற்றோர்கள் எப்படி பக்குவமாக கையாள வேண்டும் என்பது மிகவும் அவசியம். அதற்கு எப்படி பிள்ளைகளை திசைதிருப்பலாம் என்று யோசிக்கவேண்டும். எல்லா வேலைகளையும் பெற்றோரே செய்யவேண்டியதில்லை. சமைத்தல், தோட்டம் அமைத்தல், வரைதல், விளையாட்டு போன்று பிள்ளைகளுக்கு எந்த வேலையில் / செயலில் ஆர்வம் இருக்கிறதோ அதை செய்ய அனுமதியுங்கள். அவர்கள் ஆர்வமாக சமைக்கும்போது, ‘நல்லாவே இல்ல; ஏதுக்கு பொருட்களை வேஸ்ட் பண்ற? வேற வேலைய பண்ணு’ என்பதுபோன்ற எதிர்மறையாக கருத்துகளை தெரிவிக்கவேண்டாம். பிள்ளைகள் எந்த பொறுப்பை கையிலெடுக்க நினைக்கிறார்களோ அதை அவர்களிடம் விட்டுவிட வேண்டும். அதை எவ்வாறு திறம்பட செய்யவேண்டும் என்பதைத்தான் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும்.

image

அடுத்து பிள்ளைகளின் முடிவெடுக்கும் திறனை ஊக்கப்படுத்தவேண்டும். ஏற்கெனவே சொல்லியபடி, டீனேஜ் பிள்ளைகளுக்கு நிறைய சந்தேகங்களும் குழப்பங்களும் எழும். என்ன படிக்கலாம்? யாரிடம் நட்பு வைத்துக்கொள்ளலாம்? என்பதுபோன்ற குழப்பத்தில் பிள்ளைகள் இருக்கும்போது சாதக பாதங்களை எடுத்துக்கூறி அவர்களுக்கு சில வழிகளை கூறலாமே தவிர, முடிவை பெற்றோர்கள் எடுக்கக்கூடாது. பொதுவாகவே டீனேஜ் பிள்ளைகளுக்கு அட்வைஸ் பண்ணுவது சுத்தமாக பிடிக்காது. எனவே ஒரு விஷயத்தில் இது பூ பாதை… இது முள் பாதை… இத்தனை வழிகள் உன் முன்னால் இருக்கிறது. இதில் எதுவேண்டுமோ அதை நீயே சுயமாக யோசித்து முடிவெடு என்று விட்டுவிட வேண்டும். அவர்கள் முள் பாதைதான் வேண்டும் என முடிவெடுத்தால் ஒரு அடியாவது எடுத்துவைக்க பெற்றோர்கள் அனுமதிக்கவேண்டும். அதிலுள்ள கஷ்டங்களை அவர்கள் புரிந்துகொண்டால் தானாகவே அடுத்து என்ன செய்யவேண்டும் என்று புரிந்துகொள்வர்.

அதிகப்படியான கட்டுப்பாடுகளை பிள்ளைகள்மீது திணிக்காதீர்கள். உதாரணத்திற்கு, டீனேஜ் பெண் பிள்ளை பிடித்த ஆடை உடுத்தும்போதோ அல்லது லிப்க்ஸ்டிக் போடும்போதோ இந்த வயதில் இது உனக்கு எதற்கு? என அவர்களை அதட்டவேண்டாம். இவையெல்லாம் தேவையில்லாத கட்டுப்பாடுகள். அதே பிள்ளைகளின் நடத்தையில் தவறு இருந்தாலோ, தவறான நபர்களின் பேச்சைக்கேட்டு தவறாக நடந்தாலோ அவர்களை கட்டுப்படுத்தலாம். எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகளை திணிக்கும்போது என்ன செய்தாலும் இவர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள் என்ற எண்ணம் பிள்ளைகள் மனதில் ஆழமாக பதிந்துவிடும். அதனால் எந்த பேச்சையும் காதுகொடுத்து கேட்கமாட்டார்கள்.

image

பிள்ளைகளை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். சின்ன சின்ன நல்ல விஷயங்களைக்கூட பெற்றோர்கள் தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினாலே டீனேஜ் பிள்ளைகளால் வரக்கூடிய பாதிப் பிரச்னைகள் ஓய்ந்துவிடும். பெரும்பாலான பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒரு விஷயத்திற்கு பாராட்டிவிட்டால் அதிலேயே நின்றுவிடுவான்; வளரமாட்டான் என்பதுதான். ஆனால் அது பிள்ளைகளுடைய தன்னம்பிக்கையை உடைத்துவிடும் என்பது பெற்றோர்களுக்கு புரிவதில்லை. நாம் என்ன செய்தாலும் அவர்களை திருப்திப்படுத்த முடியாது; பிறகு ஏன் இந்த வேலையை சிரத்தை எடுத்து செய்யவேண்டும்? என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு வந்துவிடும். எனவே பாசிட்டிவான வார்த்தைகளை சொல்லி உற்சாகப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் பாலியல் உணர்வு வெவ்வேறாக இருக்கும். பிள்ளைகளின் நடத்தையை கவனித்தே பெற்றோர்களால் அதை புரிந்துகொள்ள முடியும். அதற்கேற்றாற்போல் பிள்ளைகளிடம் கோபத்தையும், எரிச்சலையும் காட்டாமல் உணர்ச்சிகளை எப்படி கையாள வேண்டும் என்பதை பெற்றோர்கள் பொறுமையாக சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்போதுதான், பாலியல் உணர்வுகள் மேலோங்கும்போது பிள்ளைகள் நண்பர்களையோ அல்லது வெளியாட்களையோ தேடாமல் தங்கள் பெற்றோரிடம் வந்து, எனக்கு இப்படி தோன்றுகிறது… இது சரியா? தவறா? என்று வெளிப்படையாக கேட்பர்.

image

அப்படி கேட்கும்போது, ’உனக்கு இந்த வயதில் இந்த பேச்சு எதற்கு? இதெல்லாம் தேவையில்லாத டாப்பிக்’ என்பதுபோன்று பெற்றோர்கள் கோபமாக பதிலளிக்கக்கூடாது. இதுபோன்று பேசினால், பெற்றோர் – பிள்ளைகளுக்கு இடையேயான பிணைப்பு நன்றாக இருக்காது. பிள்ளைகள் பெற்றோரிடம் தங்கள் உணர்ச்சிகளையும், தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் மறைக்க ஆரம்பித்துவிடுவர். இந்த உணர்ச்சிகளை யாரிடம் சொல்வது என்று தெரியாதபோது தவறான உறவுகளுக்குள் அவர்கள் சிக்கிக்கொள்ள நேரிடும். இதனால் அவர்கள் வாழ்க்கையே சீர்குலைந்துவிடும்.

எனவே பெற்றோர்களே இந்த சூழ்நிலையை கையாள வேண்டும். பாலியல் உணர்வுகளை எப்படி கட்டுப்படுத்துவது, எப்படி கடந்துபோவது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் பெற்றோர் கவனம் செலுத்தும்போது குடும்பத்தில் குழப்பங்களை தவிர்த்து அழகான வழியில் கொண்டுசெல்லலாம்.

காமம் சார்ந்த சந்தேகங்களுக்கு மருத்துவர் மற்றும் நிபுணர்களிடம் பேசி அவர்கள் தரும் பதிலை உங்களுக்குத் தந்துகொண்டிருக்கிறோம். உங்கள் சந்தேகங்களை கமெண்ட்டில் கேளுங்கள்.

இவற்றையும் படிக்கலாம்

#பேசாதபேச்செல்லாம் – 4: வயதானவர்களின் காதல் வாழ்க்கையில் எழும் சிக்கல்கள்!

#பேசாதபேச்செல்லாம் – 3: தாம்பத்திய உறவில் ஆர்வமின்மை ஏற்படுவது ஏன்?

#பேசாதபேச்செல்லாம் – 2: குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடும் முடிவு…  வழிகள் என்னென்ன?

#பேசாதபேச்செல்லாம் – 1 : இணையருடன் காமம் கொள்ள சரியான நேரம் பகலா இரவா?-மருத்துவர் விளக்கம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.