ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சராக நடந்து கொண்டு இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தபின் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரவு, பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மூத்த நிர்வாகிகள் பொன். ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி, வானதி சீனிவாசன், எச். ராஜா, கரு. நாகராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

image

அதை தொடர்ந்து நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “தமிழர்களின் 5,000 ஆண்டு பாரம்பரியத்தை ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தமிழக அரசு உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளது. குறிப்பாக தமிழர்களின் தொன்மை, பாரம்பரியம், கலாச்சாரம், ஆன்மிகம் உள்ளிட்டவை உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் மேடையில் பேசும்போது பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் நமது நாட்டை கலாச்சாரத்தை முதன்மைப்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் இது மிகவும் அற்புதமான நிகழ்ச்சி; பாராட்டப்பட வேண்டிய நிகழ்ச்சி. ஒலிபியாட் தொடக்க நிகழ்ச்சியை மிக அற்புதமாக நிகழ்த்திய தமிழ்நாடு அரசுக்கு பாஜக சார்பில், பாராட்டுகள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Image

பிரதமர் மோடிக்கு சென்னையில் மிக உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. கட்சி தொண்டனாக இது மிக சந்தோஷமான விஷயமாக உள்ளது. ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி அதையொட்டி அளிக்கப்பட்ட வரவேற்பை கண்டு பிரதமர் மோடி மிக உற்சாகமாக இருந்தார். முதலமைச்சர் முதலமைச்சராக நடந்து கொண்டார். ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வை வைத்து அரசியல் பேசுவது சரியாக இருக்காது. குறிப்பாக பிரதமரின் வரலாறு குறித்து முதலமைச்சர் பேசியது, முதலமைச்சரின் பேச்சுமட்டுமே. அதேநேரம் அவர்கோடிட்டு காட்டியவை, ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன்.

image

இந்தச் சூழலில் முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாஜகவின் தனிப்பட்ட பாராட்டுகளை தெரிவிக்க விரும்புகிறோம். ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய காரணத்தால் முதலமைச்சரை பாராட்டுகிறோம். ஆனால் அதற்காக திமுக – பாஜக கூட்டணியா என கேட்டால் இல்லை என்பதே பதில். ஏனெனில் பாஜக கொள்கை ரீதியாக செல்லக்கூடிய கட்சி.

image

ஆளுநர் மாளிகையில் பிரதமருடன் பாஜகவினருக்கு நடைபெற்ற சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. புதிதாக பாஜகவில் இணைந்தவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு ஆசி பெற்று சென்றனர். பிரதமருக்கு தமிழக கள சூழல் தெரியும். அதை அவருக்கு கட்சியில் இருந்து யாரும் கூறும் தேவையில்லை. பாஜக ஒரு கொள்கை சார்ந்த கட்சி அது தனது கொள்கையை மாற்றிக்கொள்ளாது. கடந்த முறை பிரதமர் சென்னை வந்திருந்த போது, தமிழ்நாடு முதலமைச்சர் பெரிய மனதுடன் நடந்து கொள்ள வேண்டும் என கூறினேன். ஆனால் இன்று முதலமைச்சரின் நடவடிக்கையை நானே பாராட்டுகிறேன்.

image

பிரதமர் மோடியின் புகைப்படம் அரசு விளம்பரத்தில் இடம்பெறாத விவகாரத்தில் மாநில அரசு சரி செய்ய தொடங்கிவிட்டது. பத்திரிகைகளில் விளம்பரங்கள் வர தொடங்கி விட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது” என்றார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக தலைவர் அண்ணாமலையை விவாதத்திற்கு அழைத்தது குறித்த கேள்விக்கு, “அமைச்சர் செந்தில்பாலாஜி ஏன் இவ்வளவு கோபப்படுகிரார் என தெரியவில்லை. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது அமைச்சரின் கடமை. `மத்திய அரசு சொல்லியதால், மின் கட்டணத்தை உயர்த்தினோம்’ என்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்படி மத்திய அரசு கூறிய அந்த கடிதத்தை காட்டுங்கள் என தான் நாங்கள் கேட்டோம், அதற்கு அவர் கோபப்பட்டு ஏதேதோ பேசுகிறார்.

image

இந்த விவகாரத்தில் ஆண்மகன் என ஏன் பேச வேண்டும்? அப்படி என்றால் பெண்களுக்கு தைரியம் இருக்காதா, பெண்களை அமைச்சர் செந்தில் பாலாஜி கேவலப்படுத்துகிறாரா? செந்தில் பாலாஜி தவறு செய்கிறார்… எனவே அதை நாங்கள் கோடிட்டு காட்டுகிறோம். தனிப்பட்ட வன்மம் கிடையாது. மின் துறையில் ஏகப்பட்ட குழப்பங்கள், குளறுபடிகள் நடந்திருக்கிறது. இவை அனைத்தையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். விரைவில் நல்லது நடக்கும்” என விளக்கமளித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.