இந்தியாவை விட மிகவும் பழமையான ஜனநாயக நாடு அமெரிக்கா. ஆனால், இன்னும் ஒரு பூர்வீக அமெரிக்கர் அதிபர் ஆகவில்லை. கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் அரசியல்வாதி சார்லஸ் கர்டிஸ். இவர், 31வது அதிபரான ஹெர்பர்ட் ஹூவரின் கீழ், 1929 முதல் 1933 வரை துணை அதிபராக இருந்தார். இது தான் ஒரு பூர்வீக அமெரிக்கர் ஒருவர் அதிபர் அலுவலகத்தை நெருங்கிய வரலாறு. ஆனால், இந்தியாவில் பழங்குடி பெண்ணான திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் ஆகியுள்ளார். இது நமது ஜனநாயகத்தின் உறுதியான தன்மையை வெளிப்படுத்துகிறது.

இந்த மாற்றம் நேரு மற்றும் மோடி காலங்களுக்கு இடையிலான வேறுபாட்டை அடிகோடிட்டுக் காட்டுகிறது. இறையாண்மைக் கொண்ட இந்திய ஜனநாயகக் குடியரசை, ஐரோப்பிய கலாச்சார பண்புகளுடன் துண்டிக்காமல் இருந்தார் ஹவஹர்லால் நேரு. இது, கடுமையான தேசியவாத எதிர்ப்புக்கு மத்தியிலும் பிரிட்டிஷ் – காமன்வெல்த்தின் ஒரு பகுதியாக இந்தியா நீடிப்பதற்கு நேரு வலியுறுத்த காரணமாக இருந்தது. ஆனால், இந்திய அரசியல் நடைமுறைகளில் ஐரோப்பிய பண்புகளை நரேந்திர மோடி நிராகரித்தார். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது மக்கள் சார்ந்ததாக இருக்கிறது.

image

முர்மு – ஒரு பெண் மற்றும் பழங்குடித் தலைவர் என்ற முறையில், அவர் பணிபுரிந்த அடிமட்ட அளவிலான ஜனநாயக பாதைகளை புரிந்து கொள்வது அவசியமாகிறது. நாட்டின் மக்கள் தொகையில் 8.6 சதவிகிதத்தைக் கொண்ட பழங்குடி மக்களின் சமூகத்தைச் சேர்ந்தவர். காலனித்துவ காலத்தில் இருந்து சமூகத்தில் இந்தப் பிரிவினர் பின்தங்கிய நிலையில் உள்ளனர். பழங்குடியின மக்களின் தனிநபர் வருமானம், கல்வியறிவு விகிதம், சுகாதாரக் குறியீடுகள் ஆகியவை, அதிகரித்து வரும் அவர்களின் விளிம்புநிலையை காட்டுகின்றன. விடுதலைப் பெற்றதில் இருந்து 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இடம்பெயர்ந்திருப்பது, அவர்களின் துயரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது. எனினும் விடுதலை இயக்கம் மற்றும் தேசிய பொருளாதாரத்தில் பழங்குடிகளின் பங்களிப்புகள், சமூகத்தின் மற்றப் பிரிவுகளைப் போல குறிப்பிடத்தக்கவையாக இருந்துள்ளன. தில்கா மாஞ்சி (ஜார்க்கண்ட்) முதல் டிரோட் சிங் (மேகாலயா) வரை பலர் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராக நின்று தங்கள் தேசப்பக்தியை வெளிப்படுத்தினர்.

பழங்குடி மக்களின் கண்ணியம் காலனித்துவ ஆட்சியில் குறைத்து மதிப்பிடப்பட்டது. 1911 மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை “ஆவிகள் அல்லது அமானுஷ்யம்” (Animists) என்று இழிவாக அழைக்கப்பட்டனர். பழங்குடி சமூகங்களின் கண்ணியத்தை அங்கீகரிப்பதும், சமூக பொருளாதார மேம்பாட்டை உயர்த்துவதும், தேசிய வாழ்க்கையில் அவர்களின் பங்கை பாராட்டுவதும் தேவைப்பட்டது. மிகவும் மதிப்பிற்குரிய தேசியவாத பழங்குடித் தலைவரான பிர்சா முண்டாவின் பிறந்தநாளை ‘பழங்குடியினர் பெருமை நாள்’ (Janjatiya Gaurav Divas) என்று மோடி அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

image

ஜனநாயகம் சமூக எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது. எனினும் மேல்தட்டு அரசியல் ஆதிக்கத்திற்கு எதிரான பெரிய பாய்ச்சலை மோடியின் தலைமை முன்னெடுத்தது. அந்த வகையில் முர்முவின் தேர்வு குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்திய அரசியலில் மேல்தட்டு ஆதிக்கத்தை இது சவால் செய்கிறது. பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற, பிரகாசிக்கும் நட்சத்திரங்களுக்கானது பத்ம விருதுகள் என்று முன்னர் கருதப்பட்ட நிலையில், அது மோடி ஆட்சியில் ஜனநாயகமயமாக்கப்பட்டது. 2014 முதல் சாதாரண மக்கள் அங்கீகரிக்கப்பட்டனர். ஹலக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த துளசி கவுடா, மேகாலயாவின் டிரினிட்டி சாயோ மற்றும் அசாமின் ஜாதவ் பயோங் ஆகியோர் பத்ம விருது பெற்றவர்கள். இது பொது மக்களின் சேவையின் கண்ணியத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

நெல்சன் மண்டேலா தென் ஆப்ரிக்காவின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றினார். அமெரிக்கா தனது முதல் கறுப்பின அதிபரை தேர்ந்தெடுக்க நூறாண்டுகள் எடுத்தது. இது ஐரோப்பிய – மேற்கத்திய மாதிரி. இதுபோல் இந்தியா இல்லை. இந்தியாவின் வளமான ஜனநாயக நாகரீக மரபுகளை அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டு பின்பற்றவில்லை என்றால் நமது குடியரசு முழுமையடையாது. இதை 2014ல் உணரத் தொடங்கினோம். “சமூக ஜனநாயகம் இல்லாவிட்டால் அரசியல் ஜனநாயகம் பாசாங்குதனமாகவே இருக்கும் என்றும், சமத்துவத்தை கொண்டு வருவதற்கு தேவையான நம்பிக்கை இல்லாமல் போகும் என்றும்” பிஆர் அம்பேத்கர் கூறியிருக்கிறார்.

ஒரு பழங்குடியினப் பெண் மிக உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு அடையாளமோ அல்லது அரசியலில் உயர்வோ அல்ல. பழங்குடி சமூகங்கள் இந்திய அரசிடம் இருந்து பெற்றதைவிட, அதிகமாக தகுதியுடையவர்கள். எனவே, திரெளபதி முர்முவின் தேர்வு, பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் ஆதரவை ஈர்த்தது. சமூக ஜனநாயகத்தின் முன்னேற்றத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளிப்படுத்துகிறார்.

இந்தியாவின் பழங்குடியின மக்கள், நாட்டின் ஜனநாயக அமைப்பில் அதன் பங்கை காண்கிறார்கள். சுதந்திரம் வென்றது; நாட்டின் கலாச்சாரம் அதன் அடி வேர்களால் உயிர்ப்பித்திருக்கிறது. ஜனநாயக சிந்தனை மற்றும் செயல்பாட்டில் இந்த மாற்றம் தொலைநோக்கில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

– ஜி.எஸ்.பாலமுருகன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.