திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகில் உள்ள கீழச்சேரி பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசணம் என்பவரின் 17 வயதான மகள், 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் அந்த மாணவி தங்கியிருந்தார். திடீரென அவர் இன்று காலை தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக மப்பேடு போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து திருவள்ளூர் மாணவி மரணமடைந்த தகவல் கிடைத்ததும் பள்ளி அமைந்துள்ள கீழச்சேரி, மாணவியின் சொந்த ஊரான திருத்தணி ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்

மப்பேடு போலீஸார் விசாரித்துவந்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு முன்னதாகவே மாணவி மரணம் என்ற தகவல் கிடைத்ததும் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி செல்வக்குமார் சம்பவம் நடந்த பள்ளியில் விசாரணை நடத்தினார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி பிரிவு இன்ஸ்பெக்டர் திரிபூரசுந்தரி நியமிக்கப்பட்டிருக்கிறார். உயிரிழந்த மாணவியின் தோழிகள், அவரோடு விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரித்தனர். பள்ளியின் விடுதி பொறுப்பாளர், முதல்வர், மாணவியின் ஆசிரியைகள் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி உயிரிழந்த தகவலைக் கேள்விப்பட்டதும் அவரின் சொந்த ஊரான திருத்தணி அருகே உள்ள தெக்களூரிலிருந்து பொதுமக்கள், மாணவி படித்த பள்ளியை நோக்கி புறப்பட்டனர். உடனடியாக அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள், சமதானமடையாமல் போலீஸாரையும் மீறி வாகனங்களில் செல்ல முயற்சி செய்தனர். அதனால் அவர்களை போலீஸார் தடுத்ததும் நடந்தே சுமார் 5 கி.மீட்டர் தூரம் வரை வந்தனர். இதையடுத்து திருத்தணி ஏரிப் பகுதியில் அவர்களை போலீஸார் தடுப்பு அரண்களை அமைத்து தடுத்து நிறுத்தினர். அதனால் அவர்கள் அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து மாணவி படித்த பள்ளியில் பயிலும் அதே ஊரைச் சேர்ந்த மற்ற மாணவிகளைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களை மட்டும் பள்ளிக்குச் செல்ல போலீஸார் அனுமதித்தனர். தொடர்ந்து திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. சந்திரன், போலீஸ் டி.ஐ.ஜி ஆனிவிஜயா ஆகியோர் பொதுமக்கள், மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பள்ளி முன் குவிந்த பொது மக்கள்

இதற்கிடையில் மாணவியின் மரணத்துக்கு என்ன காரணம் என்ற கேள்வியை முன்வைத்து காவல்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியைப் போல அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமலிருக்க கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மேலும் மாணவி படித்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுதியில் தங்கியிருந்த மாணவிகளையும் அவர்களின் பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மாணவி மரணம் குறித்து அவரின் அண்ணன், காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், தன்னுடைய தங்கை மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார், மாணவி தங்கியிருந்த விடுதியின் பொறுப்பாளர், பள்ளி முதல்வர், ஆசிரியைகள் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

மாணவி தற்கொலை தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், “மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

டி.ஐ.ஜி சத்ய பிரியா, “சந்தேக மரணமாகப் பதிவுசெய்து விசாரணை நடத்தப்படும். தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்” என்றார்.

போலீஸ் டி.ஐ.ஜி சத்யபிரியா, எஸ்.பி கல்யாண்

மாணவி மரணம் தொடர்பாக அவரோடு தங்கியிருந்த சில மாணவிகளிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது சில தகவல்கள் கிடைத்தன. இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார் “வழக்கம் போல இன்று காலை பள்ளிக்குச் செல்ல மாணவி சீருடை அணிந்து புறப்பட்டிருக்கிறார். காலை உணவையும் சாப்பிட்டுவிட்டு விடுதி அறைக்குச் செல்வதாகக் கூறிய மாணவி, திடீரென இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார். மாணவி தங்கியிருந்த அறையை சோதனை நடத்திவருகிறோம். மாணவி குறித்து பள்ளி முதல்வர், பள்ளி ஆசிரியை, விடுதி பொறுப்பாளர், அவரின் தோழிகள் ஆகியோரிடம் விசாரித்தபோது, சில நாள்களாகவே மாணவி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற மனநிலையிலிருந்த தகவல் கிடைத்திருக்கிறது. மாணவியின் பிரேத பரிசோதனை தகவலுக்காகக் காத்திருக்கிறோம். அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.