கிரிக்கெட் இத்தனை சுவாரஸ்யமாக மாறியிருப்பதற்கு அந்த ஆட்டத்தின் தன்மையும் அதை ஆடும் வீரர், வீராங்கனைகள் மட்டுமேதான் காரணமா? நிச்சயமாக இல்லை. கிரிக்கெட்டை ஒரு சாமானிய ரசிகனாக தொலைக்காட்சியில் அமர்ந்து பார்க்கையில் பின்னணி இசையாக ஒலித்துக் கொண்டிருக்கும் வர்ணனை குரல்களுக்குமே, இந்த ஆட்டத்தை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியதற்கான க்ரெடிட்டை கொடுத்துதான் ஆக வேண்டும்.

வெறும் ஒலிச்சித்திரமாக இருந்த காலக்கட்டத்திலேயே கிரிக்கெட்டிற்கு இங்கே பெரும் ரசிகர் பட்டாளம் இருந்தது. பட்டோடியின் புலிப் பாய்ச்சல்களையும் கவாஸ்கரின் ரம்மியமான ட்ரைவ்களையும் செவிகளின் வழியாக வர்ணனையாளர்களின் விவரிப்புகள் மூலம் கேட்டு கிரிக்கெட்டின் மீது காதல் கொண்ட தலைமுறைகளின் வழித்தோன்றல்கள் நாம். வர்ணனை இல்லாத வெறுமென ரசிகர்களின் கூச்சல்கள் மட்டுமே நிரம்பிய கிரிக்கெட் போட்டியை நம்மால் அவ்வளவாக ரசிக்கவே முடியாது.

image

ஆயினும், சமீபமாக ரசிகர்கள் மத்தியில் வர்ணனைகளின் மீது ஒருவித வெறுப்பு உருவாகியிருக்கிறது. வர்ணனை செய்ய சிலர் மைக்கை எடுத்தாலே கிரிக்கெட்டே வேண்டாமென டிவியை அணைத்துப்போடும் அளவுக்கு ரசிகர்கள் மன உளைச்சலாகின்றனர். அந்தளவுக்கு வர்ணனைகள் மற்றும் வர்ணனையாளர்களின் தரம் குறைந்திருக்கிறது. ஆனால், இன்னமும் வர்ணனையாளருக்குரிய முழுமையான கண்ணியத்தோடு ஹர்ஷா போக்லே போன்ற ஒரு சிலர் வீரியமாக இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக கமெண்ட்ரி செய்து வரும்போதும் இன்னமும் இவரது குரலின் வசீகரம் குறையவில்லை. ‘இந்தியாவின் கிரிக்கெட் குரல்’ ஆக இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஹர்ஷாவின் வர்ணனைகள் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு என்பது வெறும் கிரிக்கெட் சார்ந்தது மட்டுமல்ல. அதைத்தாண்டி ஹர்ஷாவிடம் இயல்பாகவே வெளிப்படும் ஒரு நாகரீகத்தன்மை ரசிகர்களை எப்போதுமே வெகுவாக கவரும்.

2021 இங்கிலாந்து சம்மரில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி ஒன்றின் முதல் செஷன் நடந்துகொண்டிருந்தது. அந்த செஷனில் கமெண்ட்ரி பாக்ஸில் ஹர்ஷாவும் ஷான் பொல்லாக்கும் பேசிக்கொண்டிருந்தார்கள். சாம் கரன் பற்றிய புள்ளிவிவரங்களுடன் கூடிய ஒரு கார்ட் டிவியில் போடப்பட்டது. அதை பார்த்துவிட்டு ஹர்ஷா ‘இவரை முழுமையான ஆல்ரவுண்டர் என சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ‘Little bit of that and Little bit of this’ என சாம் கரனின் பேட்டிங் மற்றும் பௌலிங் பற்றி கூறியிருந்தார்.

image

ஹர்ஷாவின் இந்த வார்த்தைகளை மையமாக வைத்து கொஞ்சம் பின்னோக்கி யோசித்துப் பாருங்கள். 2019 உலகக்கோப்பை சமயத்தில் ஜடேஜா பற்றி சஞ்சய் மஞ்சரேக்கரும் இப்படித்தானே கூறினார். ‘Bits and Pieces’ துண்டு துணுக்கு வீரர் என்று!

அப்போது ரசிகர்களெல்லாம் கொந்தளித்தார்கள். சஞ்சய் மஞ்சரேக்கர் மீது வசவுகளை அள்ளி வீசினார்கள். ஜடேஜாவே கடுப்பாகிப் போனார். ஒரு போட்டியில் அரைசதம் அடித்துவிட்டு கமெண்ட்ரி பாக்ஸை நோக்கி வாள் சுழற்றினார். இப்போது ஹர்ஷா ஜடேஜா மாதிரியான ஒரு வீரருக்கு சஞ்சய் கொடுத்த அதேமாதிரியான ஒரு கமெண்டை கொடுக்கும் போது எந்த கொந்தளிப்புகளும் ஏற்படவில்லையே. ரசிகர்கள் ஹர்ஷா மீது வசவுகளை அள்ளி வீசவில்லை. ஏன், மானமிகு இங்கிலாந்துக்காரரான மைக்கேல் வாஹனே ஹர்ஷாவை கண்டித்து ஒரு ட்வீட் கூட போடவில்லை.

இங்கேதான் ஹர்ஷாவின் அனுபவமும் அணுகுமுறையும் உச்சத்தை தொடுகிறது. சஞ்சய் ‘Bits and Pieces’ என ஒன்றுக்கும் உதவாத வீரர் என்பதை போல நேரடியாக குறிப்பிட்டார். ஹர்ஷாவின் வார்த்தைகள் குறிப்பிடும் அர்த்தத்தை கவனியுங்கள். அவர் கொஞ்சம் பேட்டிங்கும் ஆடுவார் கொஞ்சம் பௌலிங்கும் செய்வார் என்கிறார். துண்டு துணுக்கு வீரர் என்பதிலிருக்கும் துச்சமென நினைக்கும் தன்மை ஹர்ஷாவின் வார்த்தைகளில் இல்லை.

மேலும், சொல்லப்படும் தொனியும் ரொம்பபே முக்கியம். சஞ்சயின் வார்த்தைகளில் ஒரு மேட்டிமைத்தனமும் கறாரான விமர்சகனுக்குரிய ஒரு உச்சபட்ச அகங்காரமும் இருக்கும். இந்த தொனியை எல்லாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஹர்ஷாவிடம் ஒரு மென்மையான ஒரு விஷயத்தை பரிந்துரைக்கும் தொனி இருக்கும்.

Should have been க்கும் Could have been க்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை சஞ்சய் மற்றும் ஹர்ஷாவின் அணுகுமுறைகளோடு ஒப்பிடலாம்.
எந்த கருத்தை சொல்ல வருகிறோம் என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எந்த வார்த்தைகளை எந்த தொனியை பயன்படுத்துகிறோம் என்பதற்கும் கொடுத்தாக வேண்டும் என்பதற்கான மிக முக்கிய உதாரணமாக இந்த சம்பவத்தை குறிப்பிடலாம். இதை இந்தியாவில் வர்ணனை செய்யும் அனைவரும் கற்றுக்கொண்டால் வீரர்களின் மனைவிகளை பற்றி மலிவாக அடிக்கும் ஜோக்குகளுக்கெல்லாம் வர்ணனையில் இடமே இருக்காது.

நான் பார்த்த வரையில் இயான் பிஷப், மைக்கேல் ஹோல்டிங் போன்றவர்களிடம் வெறுமென வர்ணனை என்பதை தாண்டி வீரர்கள் மற்றும் சமூகம் சார்ந்த ஒரு பெரும் கனவு அவர்களின் வார்த்தைகளில் வெளிப்படும். சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் உம்ரான் மாலிக் குறித்து வாஞ்சையோடு இயான் பிஷப் பேசிய வார்த்தைகள் அனைத்தும் இதற்கு உதாரணம். இதே விஷயத்தை ஹர்ஷாவிடமும் காண முடியும். ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் அவரின் வார்த்தைகளில் வெளிப்படும் உற்சாக அளப்பரியதாக இருக்கும். முதல் போட்டியில் ஆடும் வீரராயினும் அவருடைய பின்னணி அத்தனையையும் ஈடுபாட்டோடு ஆராய்ந்து வந்து பெருமிதத்தோடு உலகுக்கு அறிமுகப்படுத்தி வைப்பார். வாஷிங்டன் சுந்தர் அவர் அம்மாவிடம் விரும்பிக் கேட்கும் உணவு சக்கரப்பொங்கல் என்பது வரை அறிந்து வந்து கலகலப்பூட்டுவார்.

image

நம்முடைய நடராஜன் 2020இல் ஒரே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலும் அறிமுகமாகியிருந்தார். அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட்டின் பேசுபொருளாக நடராஜன்தான் இருந்தார். ஆனால், இங்கே நடராஜன் எப்படி அடையாளப்படுத்தப்பட்டார் என்பது கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியது. முன்னாள் வீரர்கள் மற்றும் இந்நாள் வர்ணனையாளர்கள் நடராஜன் மெட்ராஸை சேர்ந்தவராகவே அடையாளப்படுத்தப்பட்டார் அல்லது அதிகபட்சமாக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்றே அறிமுf;k செய்தனர். ஹர்ஷா மட்டும்தான் சென்னையை தாண்டி ஊருக்குள் ஊடுருவினார். நடராஜன் சேலம் மாவட்டத்தின் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார். பொத்தாம் பொதுவாக மதராசியாக அடையாளப்படுத்துவதற்கும் ‘சின்னப்பம்பட்டி’ நடராஜனாக அடையாளப்படுத்துவதற்கும் இடையில் எக்கச்சக்க வித்தியாசங்கள் இருக்கிறது.

ஆனால், ஹர்ஷாவை தவிர மற்ற வர்ணனையாளர்கள் யாருமே பெரிதாக அதை செய்யவில்லை. வர்ணனையில் சென்னையை தாண்டி சேலம் வரை செல்ல விலைமதிப்பற்ற பெட்ரோலோ டீசலோவெல்லாம் தேவையில்லை. கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெடலும் ஆத்மார்த்தமான ஈடுபாடும்தான் தேவை. அதைக் கொடுப்பதற்குதான் இங்கே பெரிதாக ஆள் இல்லை. அதனால்தான் ஹர்ஷாவின் குரலுக்கு இத்தனை மதிப்பு. இத்தனை கௌரவம்.

Happy Birthday Harsha Bhogle!

-உ.ஸ்ரீராம்

இதையும் படிக்கலாம்: 187 நாடுகள்…2000+ வீரர்கள்; சதுரங்க கொண்டாட்டத்திற்கு தயாராகும் சென்னை!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.