கடலாடி பகுதியின் ஆட்சியாளன் வள்ளுவன் என்பவர், தன் மன்னன் இறந்த தாங்கொணாத் துயரால் அத்திமல்லனின் சிதையில் விழுந்து தன்னையும் மாய்த்துக் கொண்டார்!

தற்பலி வழக்கம்

நம் ஊர் அரிகண்டம், நவகண்டம் எனும் தற்பலி வீரர்களின் மரபைப்போல கர்நாடக, ஆந்திரப் பகுதிகளில் கி.பி 10-ம் நூற்றாண்டு வரை நடைபெற்ற நிகழ்வுகள், கீழ்க்குண்டே எனும் தற்பலி வழக்கம் எனப்படுகின்றன.

தன் தலைவன் இறந்துபோனால், அவரின் விசுவாசமான வீரன் அல்லது மெய்க்காப்பாளன் தன் தலைவனின் உடல் மண்ணில் படாவண்ணம், சவக்குழியில் முதலில் தான் இறங்கி, சம்மணமிட்டு அமர்ந்து மடியில் தன் தலைவன் உடலை தாங்குவர். பின் அந்த குழி மூடப்படும். தலைனுக்காக உயிர் விட்ட வீரனும் நடுகல்லாகி வழிபாட்டு தெய்வமாகி விடுவான். இக்கல்லை `கீழ்க்குண்டே கல்’ என்பர். சிலர் மன்னர் நோய்வாய்ப்பட்டால் கூட மன்னர் உடல்நலம் தேற இவ்வாறு உயிருடன் புதைந்து இறந்ததும் உண்டு. இது தொடர்பான கல்வெட்டுகள் ராயலசீமா, ஹேமாவதி பகுதிகளில் கிடைக்கின்றன.

கீழ்க்குண்டே கல்

அரிதாகவே கிடைக்கும் இவ்வகை கற்களில் டோட்டஹன்டி நினைவுக்கல் சிறப்பான ஒன்று எனலாம். மேற்கு கங்க மன்னரான `எரெகங்கா நிடிமர்கா’வின் நடுகல் சிறப்பானது. அவரது தனிப்பட்ட காவலர் `அகரய்யா’ கீழ்க்குண்டே வீரனாய் இறந்து இருக்கிறார். வைதும்பர், கங்கர்களிடம் இவ்வழக்கம் இருந்து மறைந்துள்ளது என வரலாறு கூறுகின்றது.

கடலாடி வீரன்

கடலாடி தலைவன்: ராஷ்டிரகூட மன்னன் கன்னர தேவனின் 17-வது ஆட்சியாண்டில் ஒரு தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. கன்னர தேவன் (939-965) தன்னுடைய 10-வது ஆட்சி ஆண்டிற்கு பிறகுதான் சோழர்களை வென்று தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதாக அவனது மற்ற கல்வெட்டுகளின் வழியே அறிகிறோம். ஓர் அரசன் தனது எல்லையை விரிவாக்கும் நோக்கில் சில இடங்களைக் கைப்பற்றும்போது ஏற்கெனவே அப்பகுதியில் அதிகாரத்திலிருக்கும் குறுநில தலைவர்களிடம் தனது மேலாண்மையின் கீழ் அதிகாரத்தை வழங்குவது வழக்கம். இந்தக் கல்வெட்டு கிடைத்துள்ள பகுதி, இனக்குழுத் தலைவர்கள் வலிமையாக அதிகாரம் செலுத்திய பகுதியாகும். இவ்வாறு கன்னர தேவன் அதிகாரத்தின் கீழிருந்த `அத்தி மல்லன்’ என்னும் கன்னர தேவப்பிரிதியர் என்பார் வேங்கை நாட்டுப் பகுதியில் துர்மரணம் அடைகிறார். அவரின் படைத் தலைவனாக இருந்த கடலாடி பகுதியின் ஆட்சியாளன் வள்ளுவன் என்பவர், தன் மன்னன் இறந்த தாங்கொணாத் துயரால் அத்திமல்லனின் சிதையில் விழுந்து தன்னையும் மாய்த்துக் கொண்டார் என்ற தகவலை இந்தக் கல்வெட்டின் வழியே அறிகிறோம்.

பேரரசுகள் நிலை கொள்ளும்போது தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சில படைப் பிரிவுகளை ஏற்படுத்திக் கொள்வது வழக்கம். சோழர்களுக்கு அவர்களின் வேளைக்கார படையினர் போல, இவர்களின் நோக்கம் அரசர்களை எப்பாடுபட்டேனும் காப்பதே. தொண்டை மண்டலத்தில் கிடைக்கும் பெரும்பாலான நடுகற்களில் தன் தலைவன் பொருட்டு மாண்ட வீரர்களின் தகவல்களை மிகுதியாகக் காண முடியும். அவ்வாறு அவர்களை பாதுகாக்க முடியாமல் தவறினால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று தங்களையே மாய்த்துக் கொள்வதென சபதம் மேற்கொள்வதும் வழக்கம். கிடைத்திருக்கும் இந்த நடுகல் கல்வெட்டு தன் தலைவனைக் காக்கத் தவறிய படைப் பிரிவு அதிகாரி அவருடைய சிதையில் விழுந்து தன்னையும் மாய்த்துக் கொண்ட வரலாற்றை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

குலோத்துங் சோழ மூவரையனுக்காக உயிர்விட்ட கல்வெட்டு

சேவகனின் தியாகம்: இது முதலாம் குலோத்துங்கச் சோழனின் பதினொன்றாம் ஆட்சியாண்டு, அதாவது கி.பி 1081-ஐ சேர்ந்தது. இவ்வூர்ப் பகுதியில் இருந்த தலைவனான உதாரன் ஆன குலோத்துங்கச் சோழ மூவரையன் நோய்வாய்ப்பட்டு அவதியுற்றான். தனது தலைவனுக்கு வந்த அந்நோய் நீங்கவேண்டும் என்று அப்படைத்தலைவனின் சேவகன் அம்பலக்கூத்தன் தூங்குதலை கொடுப்பதாக வேண்டிக்கொண்டான். காலப்போக்கில் அந்த நோய் நீங்கியது. இதனால் வேண்டியபடியே அம்பலக்கூத்தன் தன் தலையை அரிந்து படைத்தான் என்றும், தன் மீது அன்புகாட்டி உயிர்நீத்த தனது சேவகனின் வழியினர்க்குக் குலோத்துங்க சோழ மூவரையதேவன் நிலத்தை தானமாக அளித்தான் என்றும் இங்கிருக்கும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கல்வெட்டு:

“ஸ்வஸ்தி ஶ்ரீ கொ

ங்க சோழ தேவர்க்கு யா

ண்டு 11 ஆவது (விமா)

(ட) தாரனான கொலோத்

துங்க சோழ மூவரைய

னுக்கு வியாதி தொற்ற

தூங்கு தலை நொந்த

தூங்கு தலை குடுத்

அம்பலக் கூத்த..

சாத்தி குடுத்தந

து குழிச்செய்யு”

சதி குறித்த கல்வெட்டு

கொடூர சதி கல்வெட்டு: திருவண்ணாமலை தாமரைப்பாக்கம் சிவன்கோயிலில் ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் மூன்றாம் குலோத்துங்கனின் அதிகாரி அல்லது தாமரைப்பாக்கம் பகுதியின் சிற்றரசரான கூத்தாடும் தேவரான பிருதிகங்கரையர் இறந்தபொழுது அவரை புதைத்தனர். அப்போது பாடல் பாடும் பாடினிகள் இருவரையும், நடனமாடும் கூத்தாடிகளான ஆடும் ஆழ்வார், சதுரநடைப்பெருமாள் ஆகியோரையும் உயிருடன் சேர்த்து அவர்களையும் புதைத்தனர் என்கிறது செய்தி.

இந்நால்வரும் இம்மரணத்தை விரும்பி எற்றனரா, அல்லது கட்டாயப்படுத்தப்பட்டு மரித்தனரா என தெரியவில்லை. இறந்து போனவர்களின் மனக்கேதம் தீர அவர்களின் வம்சாவளிக்கு கூத்தாடும் தேவரான பிரிதிவிகங்கரையர் மகன் சோமனான பிரிதிகங்கர் தலா ஒரு வேலி நிலம் தானமாக கொடுத்துள்ளார்.

இக்கல்வெட்டின் இறுதியில் கடுமையான இழிவுசொல்லை எடுத்துரைக்கிறது. அதாவது இத்தர்மத்திற்கு (உடன் இறக்க வைப்பது) தீங்கு செய்வோர், மதுராந்தக வேளார் எனும் அதிகாரியின் காலை கழுவி அந்நீரை கழுவி குடித்தும், அவரது மலத்தினை(இடுப்புசேறு)உண்ணும் இழிநிலைக்கு ஆளாகும் கீழானவர் என்கிறது இக்கல்வெட்டு.

காலம் இதுபோன்ற எண்ணற்ற ஆச்சர்யங்களைக் கண்டுள்ளது. அவற்றை இன்னும் பறை சாற்றியபடியே பல கல்வெட்டுகளும் நடுகற்களும் நம்மைச் சுற்றியும் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து காண்போம். காத்திருங்கள்!

தொடரும்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.