“மானுடப் பண்புள்ள எந்த ஒரு மனிதனும் கேட்க தயங்குகிற ஒரு கேள்வியை கல்வி நிறுவனத்தில் கேட்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.” என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள்

இவ்வமைப்பின் மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாற்று மாணவர்களுக்கான 2-வது பருவத் தேர்வில் தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளித்த பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், இந்த வினாத்தாள் வெளியில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

சாமுவேல்ராஜ்

கல்வி நிலையங்கள் சமூகத்தின் நீட்சியாகவே இருக்கிறது. அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டியதுதான் கல்வி நிறுவனங்களின் தலையாய கடமை. அதை விடுத்து மூடநம்பிக்கைகளைப் பரப்பிக்கொண்டுடிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது.

மானுடப் பண்புள்ள எந்த ஒரு மனிதனும் கடைவீதியில் கூட கேட்க தயங்குகிற ஒரு கேள்வியை கல்வி நிறுவனத்தில் கேட்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் காலமெல்லாம் சாதிக்கொடுமைக்கு எதிராகப் போராடிய தந்தை பெரியாரின் பெயரில் இயங்குகிற ஒரு பல்கலைக்கழகத்தில் இவ்வாறான கேள்வி கேட்கப்பட்டது தற்செயலானதல்ல. சாதிய வக்கிரத்தின் வெளிப்பாடே இது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

இந்த கேள்வித்தாளைத் தயாரித்தவர், கேள்வித்தாளுக்கு ஒப்புதல் கொடுத்தவர், தேர்வுக்கு அங்கீகரித்து மாணவர்களுக்கு வழங்கியவர் என அனைவர் மீதும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் படி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது.

உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.