மக்களை பீதியடையச் செய்திருக்கும் இந்த காலரா நோய் எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? பொதுமக்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து பார்க்கலாம்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காலரா, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதால் அங்கு பொது சுகாதார அவசரநிலையை அரசு அறிவித்திருக்கிறது. மாவட்டத்தில் காலராவால் பாதிக்கப்பட்ட இருவர் இணை நோய்களால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 700 பேர் வரை காலரா, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலரா பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களை பீதியடையச் செய்திருக்கும் இந்த காலரா நோய் எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? பொதுமக்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

image

காலாரா நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை கொண்டது. வயிற்று வலி, காய்ச்சல், தீவிர வயிற்றுப்போக்கு ஆகியவை காலராவுக்கான அறிகுறிகள்.  காலாரா பரவுவதற்கு  முக்கியமான காரணம் மாசடைந்த தண்ணீர்தான். நாம் பயன்படுத்தும் நீர், குடிக்கும் நீர் மாசடைந்திருந்தால் அதன் விளைவாக காலரா ஏற்படலாம். அதுபோலவே உணவும் சுகாதாரமற்றதாக இருந்தாலும்  காலரா உருவாகலாம்.

காலாரா வருமுன் காப்பதற்கான வழிகள் என்னவென்றால், நாம் குடிக்கும் நீரை 20 நிமிடங்கள் கொதிக்க வைத்துப் பருக வேண்டும். பொது இடங்களிலும் ஹோட்டல்களிலும் பாதுகாப்பான சுத்தமான தண்ணீரை பருகுவதை உறுதி செய்ய வேண்டும். வீட்டிலோ அல்லது சுற்றத்திலோ யாருக்கேனும் வயிற்றுப்போக்கு ஏற்படின் தன் சுத்தம் பேணும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். குறிப்பாக அடிக்கடி கைகளை சோப் போட்டுக் கழுவ வேண்டும். உண்ணும் உணவுகளை சமைப்பதற்கு முன் நன்றாக கழுவியும் முறையாக சமைத்தும் உண்ண வேண்டும். பொதுவெளியில் மலம் கழிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எப்போதும் கழிப்பறைகளை உபயோகிக்க வேண்டும்.

image

வாந்தி வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை உடனே அணுகிட வேண்டும். ஓ.ஆர்.எஸ். திரவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படுபவர்களுக்கு ஒரு லிட்டர் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரில் ஓ.ஆர்.எஸ் பொடியைக் கலந்து கொடுத்து வர வயிற்றுப்போக்கின் தீவிரம் வெகுவாகக் குறையும்.

தங்களது உறவினர்கள் மற்றும் சுற்றத்தில் வயிற்றுப்போக்கு பாதிப்பு யாருக்கேனும் ஏற்பட்டிருந்தால் குறிப்பாக முதியவர்களுக்கு தொற்று இருந்தால் அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க உடனே ஏற்பாடு செய்வது சிறந்தது. வீடுகளுக்கு வரும் குடிநீர் குழாய்களில் எங்கேனும் விரிசல் ஏற்பட்டு ஒழுகிக் கொண்டிருந்தால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திட வேண்டும். வயிற்றுப்போக்குக்கும் வாந்திக்கும் மருத்துவப் பரிந்துரையின்றி மருந்தகங்களில் சுயமருத்துவம் செய்து பொன்னான நேரத்தைக் கடத்துவது ஆபத்தான காரியமாகும்.

மேற்சொன்ன விஷயங்களை பொதுமக்கள் கடைபிடித்து இந்த கொள்ளை நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்தி உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் இதில் இருந்து வெளியேற உதவிகரமாக இருக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகிடுவது பல உயிர்களைக் காக்கும் செயலாகும். மேற்சொன்ன விசயங்கள் காரைக்காலுக்கு மட்டுமன்றி அனைவருக்குமே தேவையான ஒன்றாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.