திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அடுத்த சோராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் தனது அன்றாட வேலையாக இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இப்போது இளநீர் சீஸன் முடிந்துவிட்டதால், தானே பனை மரம் ஏறி பனங்காயை வெட்டி அதிலிருந்து நுங்குகளை பிரித்தெடுத்து விற்பனை செய்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.

பெண் பனையேறி மாரியம்மாள்.

முதலில் வேலை ஆட்களை வைத்து பனங்காய் வெட்டி விற்பனை செய்து வந்த மாரியம்மாள், கூலி கொடுக்க போதுமான அளவு பணம் இல்லாததால் ஒரு கட்டத்தில் தானே பனை மரம் ஏறுவதென முடிவெடுத்தார். அந்தச் சமயம் பனை மரம் ஏறும் இயந்திரம் கோயம்புத்தூரில் விற்பனையாகிறது என்ற தகவலை அறிந்தார். உடனடியாக அதை வாங்கி வந்து பனை மரமும் ஏற ஆரம்பித்துவிட்டார்.

பெண் பனையேறி மாரியம்மாள் தன்னுடைய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“முதலில் நான் கூலிக்கு ஆட்களை வரவழைத்து மரத்திலிருந்து இளநீர் வெட்டி, சாலையோரங்களில் இளநீர் வியாபாரம் செய்து வந்தேன். என்னால் தென்னை மரத்திலிருந்து இளநீரை வெட்டி தரும் ஆட்களுக்கு கூலி தரமுடியாத நிலை ஏற்பட்டது. இளநீர் வியாபாரத்தில் எனக்கு லாபமும் சரிவர வரவில்லை. எனவே, அடுத்து இப்போது பனை சீஸன் என்பதால் நானே மரம் ஏறுவதென முடிவு செய்தேன். அதற்காக கோயம்புத்தூரிலிருக்கும் ரங்கநாதன் சாரிடமிருந்து பனை மரம் ஏறும் கருவியை வாங்கினேன். அதன் மூலம் நானே யாருடைய பயிற்சியும் இன்றி பனை மரம் ஏறி வருகிறேன்.

பனை மரங்கள்

ஒரு சிலர் ஆசைக்காகவும் சாகசத்துக்காகவும் மரம் ஏறுவார்கள். ஆனால், நான் தினம்தோறும் என் வயிற்றுப் பிழைப்புக்காக மரம் ஏறுகிறேன். தினமும் மூன்று முதல் ஐந்து பனை மரம் வரை ஏறுவேன். இதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு என் ஒரே மகனை படிக்க வைக்கிறேன். என் மகன் பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்குள் பணம் சேர்த்து வைத்து, அவனை நல்ல கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நான் இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். என்னைப் போல என் மகன் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பனை, தென்னை மரம் ஏறி வருகிறேன்.

எனக்கு இப்போது 38 வயதாகிறது. எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் எனக்கு பயமில்லை. தைரியமாக ஏறிவிடுவேன். என்னால் முடிந்த வரையிலும் மரம் ஏறி வியாபாரம் பண்ணுவேன். எனக்கு என் கணவரும் துணையாக இருக்கிறார். ஒரு சில நேரங்களில் மிகவும் கஷ்டமாக இருக்கும் என்னடா இது பெண்ணா பிறந்து நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று நினைப்பேன். ஆனால், ஒரு சில நேரத்தில் பெண்ணாக இருந்து கொண்டு பனை மரம் ஏறுவதைப் பெருமையாகக் கருதுவேன்.

வீடு வேற கட்டிட்டேன். சொந்தமாக வீடு கட்டினதால் எனக்கு 3 லட்ச ரூபாய் வரை கடன்சுமை. வாங்கிய கடனுக்கு மூணேகால் லட்ச ரூபாய் அளவுக்கு வட்டி கட்டியிருக்கேன். 7 வருடங்களாக 3 லட்சம் ரூபாய் கடனை அடைக்க முடியாமா ரொம்ப கஷ்டப்படுகிறேன். மரம் ஏறி இளநீர், பனை நுங்கு விற்றும், கடன் வாங்கி கட்டின வீட்டை மீட்கவே இந்நாள் வரையும் தைரியத்துடன் பனை ஏறி வருகிறேன்.

பனை நுங்கு

தென்னை மரம் எளிதாக ஏறிவிடலாம். ஆனால் பனை மரம் ஏறுவது ரொம்ப கஷ்டம். பனை மரத்தில் நிறைய கையை அறுக்கும் தன்மையுடைய கருக்குகள் இருக்கும். அது என் கையை நிறைய இடத்தில் கிழித்து தழும்பாக மாறியிருக்கும். பனை மரம் ஏறி மூன்று முறை கீழே விழுந்திருக்கேன். அதாவது பனை மர உச்சியிலிருந்து பாதி மரம் வரைக்கும் அப்படியே சறுக்கி கொண்டே வந்தேன். இன்னொரு முறை ஏறும்போது தவறுதலாக தவறி தலைகீழாக தொங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. ஒரு நாள் மழை நேரத்தில் ஏறியபோது சறுக்கி கீழ் விழுந்து கை கால் முட்டி பகுதிகளில் ஆங்காங்கே சிறு சிறு காயம் ஏற்பட்டது. மரம் ஏறி மூன்று முறை கீழே விழுந்தாலும் தைரியமாக இன்றளவும் மரம் ஏறுவதை நிறுத்தாமல் ஏறிதான் வருகிறேன். இளநீரைவிட பனங்காய் வெட்டுவதும் மிகவும் கடினமான காரியம்.

நுங்கு மிகவும் உடலுக்கு நல்லது தரக்கூடிய ஒரு பாரம்பர்ய உணவு. கடைகளில் ஏதேதோ நொறுக்குத் தீனிகளை வாங்கி உண்ணும் மக்கள் இயற்கையாகக் கிடைக்கும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய நுங்கு போன்றவற்றை வாங்குவதற்கு மக்கள் எங்களிடம் சண்டை போடுவதுபோல் பேரம் பேசுகின்றனர். எத்தனை கஷ்டங்களைத் தாண்டி பனை ஏறி நுங்கு விற்கிறோம் என்பது மக்களுக்குத் தெரிவதில்லை.

பனை ஓலை

சும்மா மரத்தில் இருக்கும் பனங்காயை வெட்டி இவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்று சொல்வார்கள். பனை மரம் ஏறி அடிப்பட்டு, கருக்குகள் கையை கிழித்து இரத்தம் வருமளவுக்கு கஷ்டம் இந்த பனைத்தொழிலில் இருக்கிறது. மக்கள் இதை தயங்காமல் பேரம் பேசாமல் வாங்கி சாப்பிட வேண்டும். ஏனெனில் இது வருடம் முழுவதும் கிடைக்கும் பொருளும் அல்ல. சீசன் நேரத்தில் மட்டுமே கிடைக்கும்.

பனை பொருட்களை வாங்க மக்கள் முன்வர வேண்டும் என்பதே என் போன்ற பனையேறிகளின் வேண்டுகோளாக இருக்கிறது. பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படும் விசிறி, முறம் , குழந்தைகள் விளையாடும் பொருட்கள் போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் என் போன்ற ஏழை பனை வியாபார குடும்பங்களுக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு நீங்கள் செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.

மண்ணுக்கு கேடு தராத பனை ஓலையில் செய்யப்படும் பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். அயல்நாட்டு உணவுக்கும், பொருட்களுக்கும் அடிமைப்பட்டு கிடக்கும் நம் தமிழ் மக்கள் நமது பாரம்பரிய இயற்கை உணவுகளை புறக்கணிக்கின்றனர். எனவே முடிந்த வரை அயல்நாட்டு பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். முடிந்தவரை மரத்தாலும், மண்ணாலும் செய்த கைவினைப் பொருட்களை வாங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்து மண்ணுக்கும், கைவினைப் பொருள் செய்யும் தொழிலாளர்களுக்கும் உதவுங்கள்.

சுயமாக உழைத்த என்னை தன்னம்பிக்கையோடு செயல்பட வைத்தது மகளிர் சுயஉதவிக் குழுதான். நான் அதிகம் படிக்கவில்லை. ஆனால், நானே மரம் ஏறக் கற்றுக்கொண்டு, மரம் ஏற இயந்திரமும் வாங்கி அதன் மூலம் என் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருவாயும் ஈட்டி வருகிறேன். என்னைப் போல பல பெண்கள் தன்னம்பிக்கையோடு சுயமாக செயல்பட வேண்டும் என்பதே பெண் பனையேறியாக எனது அன்பு வேண்டுகோள்” என்றார் நம்பிக்கையுடன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.