டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடிக்கும் சாதனை ஒரு முழு நேர பந்துவீச்சாளர் வசம் வந்து சேரும் என்பதை நினைத்து பார்த்திருக்கிறார்களா? அதுவும் டெஸ்ட் அரங்கின் தலைசிறந்த பௌலர்களுள் ஒருவராக கருதப்படும் ஸ்டூவர்ட் ப்ராட்டின் பந்துவீச்சை, அவரின் சொந்த நாட்டில் வைத்து அணியின் 10-வது வீரராக களமிறங்கி இதை ஐஸ்ப்ரிட் பும்ரா நிகழ்த்துவார் என்றால் நம்ப முடிகிறதா?

Jasprit Bumrah

டெயில் எண்டராக களமிறங்கி கண்ணை மூடிக்கொண்டு சுற்றியதால் வந்த ரன்கள் இவை என பும்ராவின் இந்த இன்னிங்ஸை சுறுக்கிவிட முடியாது. காரணம், ஜஸ்ப்ரிட் பும்ரா எனும் மிகச்சிறந்த பௌலரின் பேட்டிங் கரியரை கடந்த ஆண்டு லார்ட்ஸ் டெஸ்டிற்கு முன் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். ரவி அஷ்வின் உடனான ஓர் கலந்துரையாடலில் இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் இவ்வாறு கூறியிருப்பார் “ முன்பெல்லாம், அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களுக்குள்ளும் எழுதப்படாத விதி ஒன்று இருக்கும். அதாவது நான் பேட்டிங் செய்யும்போது பவுன்ஸர் முதலிய அபாயகரமான பந்துகளை நீ எனக்கு வீசாதே. அதையே நானும் பின்பற்றுகிறேன் என்பதே அது. ஆனால் இவை காற்றில் பறக்கவிடப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன ” என்றிருப்பார் அவர்.

பவுன்ஸர் எனும் ஆயுதத்தை ஓர் தேர்ந்த பேட்டருக்கு எதிரான பயன்படுத்துவதற்கும் ஓர் முழு நேர வேகப்பந்துவீச்சாளருக்கு வீசுவதற்கு நிறையவே வித்தியாசம் உண்டு. தன்னை நோக்கி சீறிப்பாய்ந்து பந்திற்கு ஓர் பேட்டரால் தன் பேட்டை கொண்டு மட்டுமே பதில் கூற முடியும். இதே பவுலர்களின் எண்ண ஓட்டமாக முற்றிலும் வேறொன்றாக இருக்கும். தனக்கு வீசப்படும் ஒவ்வொரு பவுசருக்கு பரிசாகவும் அதையே திருப்பித்தர காத்திருப்பார் அவர். இங்கு மேலே கூறிய விதிகள் உடைக்கப்படுவதால் களம் சூடாகி வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் பும்ராவின் கைகளை அவரின் பேட்டின் மீது மிக இறுக்கமாய் பற்ற வைத்தது.

Jasprit Bumrah

ஆகஸ்ட்- 14, 2021

“ ஆடுகளம் மெதுவாக மாறிவிட்டது என்பது பார்த்தாலே தெரிந்தது. பும்ராவும் தன் முழு வேகத்தில் பந்துவீசவில்லை என களத்தில் நின்றிருந்த ரூட் கூறினார். ஆனால் எனக்கு வீசப்பட்ட முதல் பந்தே 90 மைல் வேகத்தில் வந்தது. என் மொத்த கரியரிலும் இதை போல ஒன்றை நான் சந்தித்ததே இல்லை. பும்ரா என் விக்கெட்டை வீழ்த்துவதற்காக பந்துவீசினார் என்று நான் நினைக்கவில்லை” பும்ராவின் அந்த 10-பால் ஓவர் குறித்த ஆண்டர்சனின் வார்த்தைகள் இவை. ஆட்டத்தின் மூன்றாவது நாளில் நிகழ்ந்த இச்சம்பவம் ஐந்தாவது நாளில் பும்ரா பேட் செய்ய வந்தபோது மீண்டும் எதிரொலித்தது. ஷமி, பும்ரா என இரு பௌலர்கள் களத்தில் நிற்க வீசப்பட்ட ஒவ்வொரு பந்துமே அவர்களின் உடம்பிற்கு குறிவைக்கப்பட்டதாய் இருந்தன. ஆனால் பும்ரா, அன்றைய தினத்தில் வேறொருவராக தெரிந்தார். 209/8 என்ற நிலையில் இருந்த அணியை 298/8 என்னும் ஸ்கோருக்கு கூட்டிச்சென்று வரலாற்று சிறப்புமிக்க அவ்வெற்றிக்கு காரணமாய் அமைந்தது அந்த ஜோடி.

ஜூலை- 2, 2022

98/5 என்ற மோசமான நிலையில் தத்தளித்து கொண்டிருந்த இந்திய அணி பண்ட், ஜடேஜா இருவரும் சதத்தாலும் 375 ரன்களை எட்டியிருந்தது. ஒட்டுமொத்த ட்ரெஸ்ஸிங் ரூமும் உச்சகட்ட நம்பிக்கையில் இருந்த நேரம். கேப்டன் பும்ராவுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு சிறு உந்துதல் தேவைப்பட்டிருக்கும் போலும். தொடரை நிர்ணயிக்கப்போகும் கடைசி டெஸ்ட், கேப்டனாக முதல் போட்டி என பும்ராவின் மனதில் ஓடிக்கொண்டிருந்த இவை அனைத்திற்குமான ரிலீஸ் பாயிண்டாக அமைந்தது ஸ்டுவர்ட் ப்ராடின் அந்த ஒற்றை ஓவர். அதில் கிடைத்த உத்வேகத்தில் இங்கிலாந்தின் முதல் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார் பும்ரா. நேற்றைய ஆட்டநேர முறையில் 5 விக்கெட்டுகளை 84 ரன்களுக்கு இழந்திருந்த இங்கிலாந்து அணியை 200 ரன்களுக்கு உள்ளாக சுருட்டிவிட முழு முயற்சியை மேற்கொள்வர் பும்ரா & கோ.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.