களத்தில் எடுக்கும் முடிவுகள் தொடங்கி களத்துக்கு வெளியே சந்திக்கும் சவால்களை அணுகுவது வரை பல வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார் தோனி.  அப்படி தோனி முக்கியமான போட்டிகளில் எடுத்த சில அதிரடியான முடிவுகளை பார்க்கலாம்.
 
கிரிக்கெட் உலகில் ஒரு சகாப்தம், மகேந்திர சிங் தோனி. இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3 விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி. களத்தில் எடுக்கும் முடிவுகள் தொடங்கி களத்துக்கு வெளியே சந்திக்கும் சவால்களை அணுகுவது வரை பல வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார் தோனி.  தனது கெரியரில் சிக்கலான நேரங்களில் சமயோசிதமான, துணிச்சலான சில முடிவுகளை எடுத்திருக்கிறார். அப்படி தோனி முக்கியமான போட்டிகளில் எடுத்த சில அதிரடியான முடிவுகளைதான் இந்தக் கட்டுரையில் அலசப்போகிறோம்.

image

ஜோகிந்தர் சர்மாவுக்கு வழங்கப்பட்ட கடைசி ஓவர்

2007 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான திரில் போட்டியையும், அந்தக் கடைசி ஓவரையும், கடைசியில் ஸ்ரீசாந்த் பிடித்த கேட்சையும், தோனி கோப்பையைத் தூக்கியதும் மறக்க முடியுமா என்ன? கடந்த 2007இல் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை வீச ஜோகிந்தர் சர்மாவை அழைத்தார் தோனி. பாகிஸ்தானின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட சூழலில், ஹர்பஜன் சிங்கிடம்தான் கடைசி ஓவர் ஒப்படைக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஜோகிந்தர் சர்மாவை வீசவைத்தார் தோனி. ஜோகிந்தர் சர்மாவும் அந்த ஓவரை சிறப்பாக வீசி மிஸ்பா உல் ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். தோனி தன் கையில் ஏந்திய முதல் ஐசிசி டிராபி சம்பவம் அது.

image

கங்குலி, டிராவிட்டை நீக்கியது

2008-இல் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான அணியில், மூத்த வீரர்களான சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரையும் அணியிலிருந்து அதிரடியாக நீக்கினார் தோனி. 2011 உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்கும் முயற்சியில் இருந்த தோனி, ஃபீல்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். நல்ல பேட்ஸ்மேன்களாக இருந்தாலும், ஃபீல்டிங் நன்றாக செய்பவர்களுக்கு மட்டுமே அணியில் இடம் என்ற சூழலை உருவாக்கினார். அதற்கான பலனையும் கண்டார். இது மிகக்கடுமையான முடிவு. ஆனால் தனது முடிவு சரிதான் என்பதை நியாயப்படுத்தும் வகையில் முத்தரப்பு தொடரை ஜெயித்துக் காட்டினார் தோனி.

image

5-ம் விக்கெட்டுக்கு களமிறங்கியது

2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில், விராட் கோலி அவுட் ஆனதும், ஐந்தாம் வரிசையில் இறங்கி கம்பீருடன் ஜோடி சேர்ந்தார் தோனி. அந்த உலகக் கோப்பை தொடர் முழுவதுமே நல்ல ஃபார்மில் மிகச்சிறப்பாக ஆடி, இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த யுவராஜ் சிங்கை இறக்காமல், தோனி அந்த வரிசையில் இறங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் தோனி தனது முடிவை சரியென நிரூபிக்கும் விதமாக சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். தோனி எடுத்த 91 ரன்களை விடவும் கடைசியில் அவர் சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையை முடித்தது வரலாற்றுத் தருணமாகிவிட்டது.

image

சச்சின், சேவாக், கம்பீரை சுழற்சி முறையில் பயன்படுத்தியது

2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சிபி சீரிஸ் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. அப்போது சச்சின் தெண்டுல்கர், சேவாக், கம்பீர் ஆகியோரை எப்படிப் பயன்படுத்துவது என்கிற சிக்கலும் தோனிக்கு ஏற்பட்டது. 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையை நோக்கி அணியை நகர்த்த வேண்டும் என்ற முடிவில் இருந்த தோனி ஒரு அதிரடியான முடிவு எடுத்தார். அந்தத் தொடரில் மூவரையும் சுழற்சி முறையில் பயன்படுத்த எண்ணினார் தோனி. அந்த வருடப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெறாமல் போனாலும் தேவை ஏற்பட்டால் தன்னால் எந்த ஒரு முடிவையும் துணிச்சலாக எடுக்க முடியும் என்பதை இன்னொருமுறை நிரூபித்தார் தோனி.

image

தொடக்க வீரராக ரோகித் சர்மாவை களமிறக்கியது

2007 முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்தாலும் ரோகித் சர்மாவால் இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை அடைய முடியவில்லை. இச்சூழலில் 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராகக் களமிறக்கினார் தோனி. அந்தப் போட்டி முழுக்க ரோகித் சர்மாவும் தவானும் பிரமாதமாக விளையாடி இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்குப் பெரிதும் உதவினார்கள். சேவாக் – கம்பீருக்கு பிறகு இந்திய அணி தேடிக்கொண்டிருந்த தொடக்க வீரர்கள் இவர்கள்தான் என்பது அத்தொடரில் உறுதியானது  தோனியின் இந்த முடிவுதான் இந்திய ஒருநாள் அணிக்கு மிகப்பெரிய மாற்றங்களை அளித்தன. சச்சின் தொடக்க வீரராகக் களமிறங்கி எப்படிப் பல சாதனைகள் நிகழ்த்தினாரோ அதற்கு நிகரான சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறார் ரோகித் சர்மா. .

தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட ரோகித் சர்மா பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். ஒவ்வொரு ஆட்டத்திலும் இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி நிறைய ரன்கள் எடுத்தார். இப்போது ஒருநாள் போட்டியில் 3 இரட்டைச் சதங்கள் எடுத்து முறியடிக்க முடியாத வீரராக உள்ளார் ரோகித் சர்மா. அத்தனைக்கும் காரணம், தோனி எடுத்த அந்தத் துணிச்சலான முடிவு.

இதையும் படிக்கலாம்: தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் – என்ன அது?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.