இஸ்ரோவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு பஞ்சாங்கம் பார்த்துதான் செயற்கைகோள் துல்லியமாக அனுப்பப்பட்டதாக தெரிவித்ததையடுத்து நடிகர் மாதவனை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கைதாகி, அதனால் அவர் அனுபவித்த துன்பங்களும், அதிலிருந்து அவர் மீண்டுவந்து தன்னை நிராபராதி என்று நிரூபித்த சட்டப் போராட்டங்களையும் தழுவி ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ என்றப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நம்பி நாரயணனாக மாதவன் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநர் அவதாரமும் மாதவன் எடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில், வருகிற ஜூலை 1-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு படக்குழு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டபோது, பஞ்சாங்கத்தில் உள்ள செலஸ்டியல் மேப்பை பார்த்துதான், இஸ்ரோவிலிருந்து கடந்த 2014-ல் செவ்வாய் கிரகத்துக்கு குறைந்த செலவில், துல்லியமாக செயற்கைக்கோள் வெற்றிக்கரமாக ஏவப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். முழுமையான விஞ்ஞான தகவல்களை தெரிந்துகொள்ளாமல் வாட்ஸ் அப் செய்திகளை வைத்துக்கொண்டு மாதவன் பேசுவதாகவும் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது.

image

இந்நிலையில், இதுகுறித்து மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்தியா டூடே’ மற்றும் ‘லேட்டஸ்ட்லி’ செய்தி இணையதளங்களில் தனது ட்ரோல் குறித்த செய்திகளை ரீ-ட்வீட் செய்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “அல்மனாக்கை, தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தகுதியானவன்தான். எனது அறியாமையை அறிகிறேன். எனினும் உண்மையில், வெறும் 2 இன்ஜின்களை வைத்து செவ்வாய்கிரகத்துக்கு (மார்ஸ் மிஷன்) நாம் செயற்கைகோள் அனுப்பி வெற்றிப்பெற்றதை இந்த விமர்சனங்கள் எல்லாம் மாற்றிவிடாது. அது ஒரு சாதனைப் பதிவு. விகாஸ் இன்ஜின் ஒரு ராக்ஸ்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

image

முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மாதவனின் ட்ரோலுக்கு உள்ளான கருத்துக்கள் குறித்து பேசியிருந்தார். அதில், “எவ்வளவோ ஆயிரம் வருஷங்கள் முன்னாடி கணக்கு செய்து வைத்துள்ள பஞ்சாங்கம் என்று மாதவன் குறிப்பிட்ட வார்த்தை தான் தவறு. பொதுவாக விண்வெளி பயணங்களுக்கு Almanac என்ற பஞ்சாங்கம் உலகளாவில் பயன்படுத்துவதுதான். நாங்கள் பயன்படுத்துவது ஆண்டாண்டு காலமாக இருக்கக் கூடிய பஞ்சாங்கம் இல்லை.

image

ஒவ்வொரு வருடமும், அதாவது அவ்வப்போது கோள்களின் நகர்வுகளை வைத்து புதுப்பித்து விண்வெளி ஆராய்ச்சியில் உள்ள எங்களைப் போன்றவர்கள் வைத்துள்ள தனிப் பஞ்சாங்கத்தை வைத்துதான் கணித்து துல்லியமாக செயற்கைக்கோளை அனுப்புகிறோம். உலகளவில் வான்வெளி பணியில் உள்ளவர்கள், இந்த பஞ்சாங்கத்தை தான் பயன்படுத்துகின்றனர். மாதவன் சொல்கிற ஆண்டாண்டுகால பஞ்சாங்கம் எல்லாம் யாரும் பயன்படுத்துவது இல்லை. அவரது வார்த்தையில் சிறு தவறு இருந்திருக்கலாம். பல ஆண்டுகள் உள்ள பஞ்சாங்கத்தை வைத்து தற்காலத்தில் செயற்கைக்கோள்களை அனுப்ப முடியாது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.