தயாரிப்பாளரும், இயக்குநருமான சி.வி.குமார், `தமிழ் சினிமாவின் வர்த்தக நிலவரம்’ குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது உண்மையென திரையுலகினர் பலரும் ஆமோதித்து வருகின்றனர்.

‘சூது கவ்வும்’ உள்பட பல தரமான படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “கடந்த மூன்று மாதங்களில் வெளியான சின்ன பட்ஜெட் படங்கள் எதுவும் தியேட்டர்களில் அதிக வசூலை ஈட்டவில்லை. லைஃப் டைம் ஷேராக ரூ.10 லட்சம் வரைகூட திரும்ப எடுக்கவில்லை. அதே போல 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை சம்பளம் வாங்கும் இரண்டு சதவிகித ஹீரோக்களின் படங்கள் லைஃப் டைம் ஷேராக 20 – 40 லட்சங்கள் வரைதான் ஈட்டியிருக்கின்றன. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த சின்னப் பட்ஜெட் படங்கள் எதுவும் அந்தப் படங்களை டிஜிட்டல் பிரின்ட் போட செலவிட்டத் தொகையை கூட திரும்ப எடுக்கவில்லை. நல்ல கன்டன்ட், நல்ல மேக்கிங் உள்ள படங்களை மட்டுமே வாங்கிக் கொள்வதில் ஓ.டி.டி-க்கள் ஆர்வம் காட்டுகின்றன. அங்கேயும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான படங்களை வாங்குவதற்கான 60% ஸ்லாட்டுகள் இப்போதே மூடிந்துவிட்டன…” என்பது உள்ளிட்ட சில கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.

சி.வி.குமார் ஃபேஸ்புக் பதிவு

இது குறித்து திரைத்துறையினர் சிலரிடம் பேசினேன்.

“அவர் சொல்வது உண்மைதான். தயாரிப்பாளர்கள்தான் ஹிட் ஆகுறாங்களே தவிர, அவங்க படங்கள் எதுவும் ஹிட் ஆகுறதில்ல. ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இல்லாமல், கதையை மட்டும் நம்பிய படங்கள் பத்து லட்ச ரூபாய் ஷேரைக் கூட எடுக்கலை. கதை நல்லா இருக்குன்னு பத்திரிகைகள்ல கொண்டாடிய படங்களின் ஷேர் கூட பத்து லட்சத்தைத் தாண்டலை. சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு வாரிசு நடிகர் படத்தின் தமிழ்நாட்டு ஷேர் வெறும் நாலு லட்ச ரூபாய்தான்னு சொல்றாங்க. விஞ்ஞான த்ரில்லர் படத்தின் தமிழ்நாட்டு ஷேர் வெறும் 30 லட்சம்தான். அதே நடிகரின் மோசடி சம்பந்தமான இன்னொரு த்ரில்லர் படம் 60 லட்சம்தான் பண்ணியிருக்கு. சிறைச்சாலை புனைப்பெயரில் வெளியான படம் தமிழ்நாட்டு ஷேர் கணக்கில் 15 லட்ச ரூபாய்கூட பண்ணல. இது தவிர மத்த சின்ன படங்களின் ஷேர் ஒரு லட்சமோ ரெண்டு லட்சமோதான். கொஞ்சம் பிசினஸ் தெரிஞ்ச தயாரிப்பாளர்கள்னா இந்தி ரைட்ஸ், சேட்டிலைட், டிஜிட்டல்ன்னு அப்படி இப்படி தேத்தி, போட்ட முதலீட்டை எடுத்துடுறாங்க. புது தயாரிப்பாளர்கள்னா படத்தை பிசினஸ் செய்ய முடியாம திணறிடுறாங்க.

ஒரு சின்னப் பட்ஜெட் படமெடுக்க இப்ப மினிமம் மூணு கோடி ஆகிடுது. அது போக, அதோட பப்ளிசிட்டி செலவு 30 லிருந்து 40 லட்சம் ஆகிடுது. நாலு கோடி ரூபாய் செலவழித்து ஒரு படம் எடுத்தா, தமிழ் நாட்டு ஷேர் பத்து லட்சம்தான் வருது. நிலைமை இப்படியிருக்க, நூற்றுக்கணக்கான படங்களின் படப்பிடிப்பு இப்ப போயிட்டிருக்கு. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைச்சு, படப்பிடிப்புல பிசியா இருக்காங்க. நாம ஒரு படம் தயாரிக்க கேமரா, கேரவன்னு வாடகைக்கு எடுக்க நினைச்சா கிடைக்க மாட்டேங்குது. இதெல்லாம் யாருக்கு எடுக்கறாங்க, எப்படி பிசினஸ் பண்ணப் போறாங்கனு நினைக்கும் போது ஆச்சரியமாவும், அதிர்ச்சியாகவும் இருக்கு.

தியேட்டர்

பிராண்டு வேல்யூ இருக்கற தயாரிப்பாளர்கள் படத்தை வித்துட முடியுது. தியேட்டர் ரைட்ஸை மட்டும் கையில வச்சுக்கிறாங்க. ஓடுனாலும் ஓடலைனாலும் சமாளிச்சிடுறாங்க. 25 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை சம்பளம் வாங்குற எந்த நடிகர்களுக்குமே தியேட்டர் வருமானம்ன்னு பத்து பைசா கூட வர்றதில்ல. யோசிச்சு பாருங்க. நாலு லட்ச ரூபாய் மட்டும் ஷேர் பண்ணின படத்துக்கு அந்தப் படத்துல ஒர்க் பண்ணின ஊழியர்களின் சம்பளம் மட்டுமே ஆறு லட்ச ரூபாய் ஆச்சுன்னு சொல்றாங்க.

ஒரு ஹீரோ இப்ப மூணு கோடி ரூபா சம்பளம் வாங்குறார். அவர் இந்தியிலும் படங்கள் இயக்கியவர். அவர் நடிச்சு முடிச்சு 13 படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருந்தும் அதை விற்க முடியாம இருக்காங்க. அதுல ஒரு படத்தை இப்ப ஒரு சேனலுக்கு ரூ.8 கோடிக்கு வித்துருக்காங்க. இப்ப இந்த 8 கோடி பிசினஸை சொல்லி, அந்த ஹீரோவுக்கு இன்னும் பத்து படத்துக்குப் பூஜை போட்டிடுவாங்க.

இசையமைப்பாளர் கம் ஹீரோ, டான்ஸ் நடிகர், தாடி வச்ச சாஃப்டானா நடிகர்ன்னு எல்லாரும் பத்து பத்து படங்கள் நடிச்சு முடிச்சு விற்க முடியாம தவிக்கறதா சொல்றாங்க. தலா மூணு கோடி சம்பளம் வாங்குறதா சொல்றாங்க. இதெல்லாம் உதாரணம்தான். இவ்வளவு சம்பளம் வாங்குற ஹீரோக்களுக்கு ஏன் இவ்வளவு படங்கள் வெளிவராம நிக்குது? சினிமா நல்லா இருந்தால் இதெல்லாம் பிசினஸ் ஆகியிருக்கணுமில்லையா! அவங்க எதாவது ஒரு படம் ஓ.டி.டி-யில வித்துட்டா அதைக் காரணம் காட்டி இன்னும் பத்து படங்கள் அந்த ஹீரோக்களுக்கு புக் ஆகிடுது.

OTT தளங்கள்

படங்கள் அதிகமா தயாரிக்கப்படுறதால ஓ.டி.டி-யும், மத்த நிறுவனங்களும் படங்கள் வாங்குறதுல, ரொம்பவே செலக்ட் பண்ணி வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு ஹீரோவுக்கு பத்து படம் இருக்குதுனா, அதுல எது பெஸ்டோ அதை மட்டும் பார்த்து ஓ.டி.டி வாங்குறாங்க. மத்த ஒன்பது படங்களும் அடுத்த வருஷம் வித்துக்கலாம்ன்னு விட, அது பழைய படமாகி பிசினஸ் இன்னும் குறைஞ்சிடுது. ஸோ, புதுசா படமெடுக்க நினைக்கிறவங்க பிசினஸ் நிலவரங்களையும் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வரணும்” என்கிறார்கள்.

இது குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமாரிடமும் பேசினேன். “இன்றைய சினிமா நிலவரத்தை விழிப்புணர்வு விஷயமா சொல்ல நினைச்சேன். அதைத் தான் ஃபேஸ்புக்கில் எழுதினேன்” என சிம்பிள் ஆக முடித்துக் கொண்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.