மார்பகப் புற்றுநோய், சிலருக்கு அறிகுறிகளைக் காட்டும். சிலருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாமலே பாதிக்கும். இதனால் பலருக்கும் நோய் பாதிப்பு தீவிரமான பின்பே, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவரும். பொதுவாகவே 40 வயதைக் கடந்த பெண்கள் தங்கள் மார்பகங்களை, வருடம் ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சித்திரிப்பு படம்

மார்பகப் புற்றுநோயை உறுதி செய்ய, மிகவும் வலி தரக்கூடிய மேமோகிராம் சோதனையையே, பெண்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. CA 15-3, CA 27-29 போன்ற ரத்தப் பரிசோதனைகளுமே, மார்பகப் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கிறதா எனக் கண்டறிய பயன்படுகின்றனவே தவிர, புற்றுநோயைக் கண்டறிய, தனி ரத்தப் பரிசோதனைகள் இதுவரை இல்லை என்றே கூற வேண்டும்.

இந்நிலையில், மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் ரத்தப் பரிசோதனை, இந்தியாவில் ஜூன் 22-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Easycheck breast என்ற இந்தப் பரிசோதனையைச் செய்ய 6,000 ரூபாய் வரை செலவாகும். ஆரம்பகட்டமாக இந்த ரத்தப் பரிசோதனை, அப்போலோ மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இன்னும் 1,600 ரத்தச் சேகரிப்பு மையங்களிலும் இச்சோதனையைக் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஐரோப்பா போன்ற 15 நாடுகளில், வெவ்வேறு பிராண்டுகளின் பெயர்களில், இச்சோதனை செய்யப்பட்டு வருகிறது. இச்சோதனையின் நம்பத்தன்மை குறித்த சந்தேகம் மக்களுக்கு இருக்கும். ஆனால் இது, 99 சதவிகித நோய் கண்டறியும் திறனைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ரத்தப்பரிசோதனை

இந்தியாவில் 8,000 பெண்களிடம் செய்யப்பட்ட கிளினிகல் ட்ரையலில் ஸ்டேஜ் 0 மற்றும் ஸ்டேஜ் 1 மார்பகப் புற்றுநோயை, 99 சதவிகிதம் துல்லியமாகக் கண்டறிந்தது தெரியவந்துள்ளது. வெறும் 5 மில்லி ரத்தம் மட்டுமே சோதனைக்குப் போதுமானது. வலி தரும் மேமோகிராமோ, ரேடியேஷன் பயமோ இதில் இல்லாதது சாதகமான விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன.

பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் இச்சோதனை, மருத்துவத்துறையில் புரட்சிகரமான முன்னேற்றம் என அப்போலோ மருத்துவ மனைகளின் நிறுவனரும், தலைவருமான பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

அப்போலோ குழும மருத்துவமனைகளுடன் இணைந்துள்ள Datar Cancer Genetics மூலம் இச்சோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.